க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை

Krishna Nectar Lilas part 12 “Gopal Steals Butter ...

நம்மாழ்வார் “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே” என்று எம்பெருமான் நித்யஸூரிகளின் திருவாராதனத்தின் நடுவில் இந்த பூவலகில் வந்து க்ருஷ்ணனாக அவதரித்ததற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகிறார் – 1) அடியார்கள் கைதொட்டுச் செய்த வெண்ணெயை உண்பதற்காகவும் 2) நப்பின்னைப் பிராட்டியை அணைத்துக் கொள்வதற்காகவும். இந்த இரண்டு லீலைகளையும் பல ஆழ்வார்கள் பல பாசுரங்களிலே எடுத்து அனுபவித்துள்ளார்கள். ஆழ்வார்கள் மட்டுமல்லாமல், பரம விரக்தர்களான பராசரர், வ்யாஸர் போன்ற ரிஷிகளும் கூட, இந்த வைபவத்தைத் தாங்கள் அருளியுள்ள புராணங்களில் மிகவும் உருகி அனுபவித்துள்ளனர். அதிலே இப்பொழுது நாம் கண்ணன் வெண்ணெய் திருடிய வைபவத்தைச் சற்று அனுபவிக்கலாம்.

நம்மாழ்வார் “வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்” என்றும், பெரியாழ்வார் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” என்றும், “வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு” என்றும். குலசேகராழ்வார் “முழுதும் வெண்ணெய் அளைந்து” என்றும், திருப்பாணாழ்வார் “வெண்ணெய் உண்ட வாயன்” என்றும் இப்படி எல்லா ஆழ்வார்களும் ஓரொரு விதத்திலே இந்த லீலையை அனுபவித்துள்ளார்கள்.

திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடலில் எம்பெருமானின் இந்த வெண்ணெய் திருடும் லீலையை மிக அற்புதமாக அருளியுள்ளார். “ஆராத தன்மையனாய் ஆங்கொருனாள் ஆய்ப்பாடி” என்று தொடங்கி கண்ணன் எப்படி யசோதைப் பிராட்டியை ஏமாற்றி வெண்ணெயை உண்டான் என்பதையும், அதைக் கண்டு பிடித்த யசோதைப் பிராட்டி அவனை உரலில் கட்டி வைத்து நன்றாக அடித்ததையும் அற்புதமாக நம் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார்.

கண்ணன் தன் வீட்டில் மட்டுமில்லாமல் பல கோபியர்களின் வீட்டிலும் சென்று வெண்ணெய் திருடினான். பெரியாழ்வார் திருமொழியில் “வெண்ணெய் விழுங்கி” என்கிற பதிகத்தில் கண்ணனின் வெண்ணெய்த் திருட்டை கோபியர்கள் வந்து யசோதையிடத்தில் முறையுடுவதை மிக அழகாகக் காட்டியருளினார். யசோதைப் பிராட்டியால் கட்டுப்பட்டிருந்த லீலையில் நம்மாழ்வாரையே எல்லாமாகப் பற்றியிருந்த மதுரகவி ஆழ்வாரும் ஈடுபட்டார். கண்ணனின் பெருமை எப்படிப்பட்டது என்றால் முழுவதுமாக ஆசார்ய பக்தியில் திளைத்திருப்பவர்களையும் ஈடுபடுத்தக்கூடியது.,

வெண்ணெய் திருடும்போதும் குழந்தைத் தன்மை மாறாமல் அச்செயலை மறைக்கவும் தெரியாமல் கண்ணன் மிகவும் ஒளிவிட்டு விளங்கினான். பரமபுருஷனான ஸர்வேச்வரன் இப்படி வெண்ணெயில் ஈடுபட்டு இருக்கிறானே என்று ஆசார்யர்கள் பலரும் எம்பெருமானுடைய வைபவத்தை நினைத்து மகிழ்ந்துள்ளார்கள்.

இதிலே உள்ள தாத்பர்யங்கள்:

  • வெண்ணெய் வெள்ளை நிறத்திலே உள்ள ஒரு வஸ்து. வெள்ளை என்பது ஸத்வகுணத்தைக் குறிக்கும். எம்பெருமான் ஸத்வ குணத்தை விரும்புகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • வெண்ணெய், தயிர் ஆகியவற்றை விரும்பி உண்ட பிறகு, அவை இருந்த பானையைக் கீழே போட்டு உடைத்து விடுவான் கண்ணன். இது, ஒரு ஆத்மாவை விரும்பி ஏற்றுக் கொள்ளும் எம்பெருமான், அந்த ஆத்மா இருந்த உடம்பை இவ்வுலகிலேயே அழித்து விடுவதைக் காட்டுகிறது.
  • வெண்ணெய், தயிர் ஆகியவை அடியார்கள் கைதொட்டுச் செய்யப்பட்டதாலேயே எம்பெருமான் அவற்றை விரும்புகிறான்.
  • யசோதையால் கட்டப்பட்டது மற்றும் அவளுக்கு அஞ்சி இருப்பதும், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுக்கு மிகவும் அடிபணிந்தவன் என்பதைக் காட்டுகிறது.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment