ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது
எம்பெருமான் யசோதையாலே உரலிலே கட்டப்பட்டதை அனுபவித்தோம். ஒரு முறை, அவ்வாறு கட்டிப்போட்ட பின்பு, யசோதை தன் கார்யத்தைப் பண்ணச் சென்றாள். அப்பொழுது கண்ணன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் திகைத்து இருந்தான். அச்சமயத்தில், அவன் அந்த உரலையும் இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்து, உரலைச் சாய்த்து, இழுத்துக்கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். அவ்வாறு சென்றபோது இரண்டு யமளார்ஜுன ( இரட்டை அர்ஜுன/மருத) மரங்கள் சேர்ந்து இருந்தன. இந்த மரங்களுக்குப் பின்னே ஒரு சரித்ரம் உண்டு. அதை என்னவென்று பார்க்கலாம்.
குபேரனின் புதல்வர்கள் நளகூவரன் மற்றும் மணிக்ரீவன் ஆகியோர் ஒரு முறை நாரத ரிஷி வரும்பொழுது அவரை மதிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்தனர். கோபமுற்ற நாரதர் அவர்களை மரமாகப் போகுமாறு சாபம் கொடுத்தார். பயந்து போன அவர்கள் இருவரும் நாரதரைப் பணிந்து மன்னிப்புக் கேட்டனர். நாரதரும் மனம் இரங்கி நீங்கள் கோகுலத்தில் மரமாகப் பல ஆண்டுகள் இருப்பீர்கள். அங்கே எம்பெருமானே வந்து உங்களுக்குச் சாப விமோசனத்தைக் கொடுப்பான் என்று சொன்னார். அவர்களும் வேறு வழியின்றி இசைந்து யமளார்ஜுன மரங்களாக ஆனார்கள்.
இந்த இரண்டு மரங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக, கோகுலத்தில் இருந்தன. அப்பொழுதுதான் கண்ணன் அங்கே தன்னோடு கட்டப்பட்டிருந்த உரலை உருட்டிக்கொண்டு இந்த யமளார்ஜுன மரங்களுக்கு அருகில் வந்தான். தான் மரங்களுக்கு நடுவே புகுந்து அந்தப்பக்கத்தில் வெளியே வந்தான். அவ்வாறு வரும்பொழுது, மரங்களுக்குப் பின்னே இருந்த உரலையும் இழுக்கத் தொடங்கினான். அப்பொழுது அந்த மரங்கள் சடசடவென்று உடைந்து விழத்தொடங்க, அவ்வோசையைக் கேட்டுத்திரும்பியவன் முன்பு காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதால், அழகிய புன்சிரிப்பை வெளியிட்டான் என்று ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் மிகவும் ஈடுபடுகிறார்கள். அதிலிருந்து வெளியே வந்த நளகூவரன் மற்றும் மணிக்ரீவன் ஆகிய இருவரும் கண்ணனை வணங்கி, ஸ்தோத்ர பண்ணி விடைபெற்றுச் சென்றனர்.
இந்த லீலையையும் ஆழ்வார்கள் பல இடங்களில் அனுபவித்துள்ளார்கள். நம்மாழ்வார் “போனாய் மாமருதின் நடுவே என் பொல்லா மணியே” என்றும், திருமங்கை ஆழ்வார் “நின்ற மாமருது” என்றும் , குலசேகராழ்வார் “மருதிறுத்தாய்” என்றும் மற்றும் பலவிடங்களிலும் நன்றாக அனுபவித்துள்ளனர். இந்த யமளார்ஜுன மரங்களைச் சாய்த்ததை அஸுராவேசம் பொருந்திய மரங்களைச் சாய்ததாகவும் ஆசார்யர்கள் விளக்கியுள்ளனர்.
இதிலே உள்ள தாத்பர்யங்கள்:
- எத்தனையேனும் பெரிய தவறுகள் செய்திருந்தாலும், தவறுகளை உணர்ந்தபின்பு எம்பெருமானுடைய க்ருபையாலே அவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
- எத்தனையேனும் பெரிய எதிரிகளாக இருந்தாலும் எம்பெருமான் அவர்களை எளிதில் அழித்து விடுவான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org