க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 9 – வ்ருந்தாவனத்துக்குச் செல்லுதல், மேலும் சில அஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< யமளார்ஜுன சாபவிமோசனம்

Bakasura | The Hare Krishna Movement

திருவாய்ப்பாடியில் தொடர்ந்து பல தொந்தரவுகள் வந்ததால் நந்தகோபரும் ஏனைய இடையர் பெரியோர்களும், இங்கிருந்து புறப்பட்டு வ்ருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். பல மாட்டு வண்டிகளில் புறப்பட்டு வ்ருந்தாவனத்தைச் சென்றடைந்தனர். வ்ருந்தாவனம் மிகவும் பசுமையான இடம். மாடு கன்றுகளுக்கு மேய்ச்சலுக்குத் தகுந்த இடம். ஆகையால் இதுவே சிறந்த இடம் என்று முடிவு செய்து அங்கே சென்றார்கள்.

ஆனால் அங்கே சென்ற பின்பும் தொடர்ந்து அஸுரர்களாலே தொந்தரவுகள்வந்து கொண்டே இருந்தன. ஒரு முறை கம்ஸனாலே ஏவப்பட்ட இரண்டு அஸுரர்கள் தங்களுக்குள்ளே பேசி வைத்துக் கொண்டு ஒருவன் ஒரு கன்றுக்குள்ளே புகுந்தான் மற்றொருவன் ஒரு விளாம்பளத்துக்குள்ளே புகுந்தான். இவர்கள் இருவரும் இப்படி இருப்பதை எம்பெருமான் உடனே கண்டு கொண்டான். இருந்தாலும் அது தனக்குத் தெரியாததைப் போலே இருந்தான். அவனை நோக்கி வந்த அந்தக் கன்றைத் தூக்கி விளா மரத்தின் மேலிருந்த பழத்தின் மீது எறிந்தான். இரண்டு அஸுரர்களும் ஒரே ஸமயத்தில் மாண்டார்கள். இதுவே வத்ஸாஸுர கபித்தாஸுர வதம் என்று சொல்லப் படுவது. இந்தச் சரித்ரத்தை ஆழ்வார்கள் பல இடங்களில் காட்டியுள்ளார்கள், நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் “ஆனீன்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார்” என்றும் ஆண்டாள் திருப்பாவையில் “கன்று குணிலாய் எறிந்தான்” என்றும் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் “விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து” என்றும் பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் “தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து” என்றும் காட்டியுள்ளனர்.

ஓர் அஸுரன் கொக்கு வடிவிலே வர அவனையும் கண்ணன் எளிதிலே அவனுடைய வாயைக் கிழித்துக் கொன்றான். இதை ஆண்டாள் திருப்பாவையில் “புள்ளின் வாய்க் கீண்டானை” என்றும் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் “புள்வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில் “புள்ளின் வாய் பிளந்தாய்!” என்றும் பல பாசுரங்களில் காட்டியுள்ளனர். இதுவே பகாஸுர வதம் என்று சொல்லப்படுகிறது.

இப்படி வளர்ந்து வரும் காலத்தில் அவனுடைய தீம்புகளும் மாயச்செயல்களும் குறைவில்லாமல் நடந்து வந்தன. மாடு கன்றுகளுடன் விளையாடுவது, இடைப் பெண்கள் சேமித்து வைக்கும் வெண்ணெய், தயிர் முதலியவற்றைத் திருடுவது ஆகியவை அவனுடைய வழக்கமான லீலைகளாக இருந்தன.

இதில் உள்ள தாத்பர்யங்கள்,

  • தன்னிடத்தில் தீய எண்ணத்துடன் வேடம் போட்டு வருபவர்களை கண்ணன் எளிதில் கண்டுபிடித்து அழித்து விடுவான்.
  • எதிரிகளை அழிப்பது எம்பெருமானுக்கு வெகு ஸுலபமான கார்யம்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment