க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 10 – ததிபாண்டன் பெற்ற பேறு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< 8 – யமளார்ஜுன சாபவிமோசனம்

க்ருஷ்ணாவதார லீலைகளில் பல ரஸமான அனுபவங்களும் ஆச்சர்யமான தத்வார்த்தங்களும் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு சிறந்த சரித்ரம் பானை செய்யக்கூடிய ஒருவனுக்கும் அவனுடைய பானைக்கும் மோக்ஷம் கொடுத்த சரித்ரம். இதனுடைய இதிஹாஸ புராண ஆதாரம் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஓரிரு முக்யமான பூர்வாசார்ய க்ரந்தங்களில் இது காணப்பட்டுள்ளது. முதலில் நாம் அறிந்த சரித்ரத்தைப் பார்ப்போம்.

வ்ருந்தாவனத்தில் ஒரு முறை கண்ணன் வழக்கம்போல வெண்ணெய் திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகத் தப்பி ஓடிக் கொண்டிருந்தான்.

அந்த ஸமயத்தில் யசோதை கண்ணனைத் துரத்திக் கொண்டு வர, கண்ணன் சட்டென்று அங்கிருந்து ஒரு குடிசைக்குள் நுழைந்தான். அங்கே பானை செய்பவனான ததிபாண்டன் வாழ்ந்து வந்தான். கண்ணனைக் கண்ட அவன் மிகவும் ஆனந்தம் கொண்டான். கண்ணனோ ஒளிந்து கொள்ள ஒரு இடத்தைத் தேட, அங்கிருந்த ஒரு பெரிய பானையைக் கண்டு அதற்குள்ளே புகுந்து ஒளிந்து கொண்டான். ததிபாண்டனிடத்தில் “யார் வந்து கேட்டாலும் நான் இங்கே இருப்பதைச் சொல்லாதே” என்றான். அவனும் அதற்கு இசைந்தான். யசோதை வந்து “கண்ணன் வந்தானா” என்று கேட்க, அவனும் “இங்கு யாரும் வரவில்லை” என்று சொல்லி அனுப்பி விடுகிறான்.

அதற்குப் பிறகு, கண்ணன் வெளியே வரப் பார்க்க, அப்பொழுது ததிபாண்டன் “நீ வெளியே வரவேண்டும் என்றால், எனக்கு இந்த ஸம்ஸாரத்தில் இருந்து மோக்ஷம் கொடுக்க இசைய வேண்டும். அப்பொழுது தான் உன்னை வெளியே விடுவேன்” என்றான். எம்பெருமானோ “மோக்ஷம் எல்லாம் எனக்குத் தெரியாது. நான் சின்னப் பிள்ளை. வேண்டும் என்றால் கொஞ்சம் வெண்ணெய் கொடுக்கிறேன்” என்று சொல்ல, அதற்கு ததிபாண்டன் “நீ யார் என்பதை அடியேன் உணர்ந்துவிட்டேன். எனக்கு மோக்ஷம் தந்தே ஆக வேண்டும்” என்று நிர்பந்தித்தான். கண்ணனும் அகமகிழ்ந்து “சரி! தந்தோம்!” என்றான். அவனோ விடாமல் “எனக்கு மட்டும் இல்லை, என்னுடைய இந்த தயிர்த் தாழிக்கும் (பானை) மோக்ஷம் தர வேண்டும்” என்று கேட்க எம்பெருமான் “அதற்கெல்லாம் கொடுக்க முடியாது. உனக்குத் தந்தால் எல்லாருக்கும் கேட்கிறாயே” என்று சொன்னான். அவனோ விடாமல் “இது எனக்கு மிகவும் விருப்பமான பானை. இதற்கும் மோக்ஷம் கொடுத்தால் தான் உன்னை விடுவேன்” என்று நிர்பந்தித்தான். எம்பெருமானும் “சரி! உன்னுடைய தயிர்த் தாழிக்கும் மோக்ஷம் தந்தோம்” என்று சொன்ன பிறகே எம்பெருமானை வெளியிலே விட்டான் ததிபாண்டன்.

இந்தச் சரித்ரத்தைத் திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தையில் “இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே” என்ற இடத்தில் நாம் பார்க்கிறோம். இது தவிர அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதயத்தில் 228ஆவது சூர்ணிகையில் எம்பெருமான் பலருக்கும் மோஷம் அளிக்கிறான் என்பதைக் காட்டும்பொழுது “இடையர் தயிர்த்தாழி” என்று காட்டியுள்ளார். இதை விளக்கும் மணவாள மாமுனிகள் இதிலே சற்றே மாறுபட்ட சரித்ரத்தை வெளியிட்டுள்ளார். அவருடைய ஸ்ரீஸூக்திகள் “வெண்ணெய் களவு காணப் புக்கவிடத்தே தொடுப்புண்டுவந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து மோக்ஷம் தாராவிடில் காட்டிக்கொடுப்பேன் என்று மோக்ஷம் பெற்ற ததிபாண்டர்” (அதாவது பானைக்குள் வைக்காமல் தன் வீட்டுக்குள் தாழ்ப்பாளிட்டு வைத்ததாகக் காட்டியுள்ளார்).

ஆக, இப்படிப்பட்ட ஆச்சர்யமான சரித்ரம் ததிபாண்டனின் சரித்ரம். இதனுடைய இதிஹாஸ புராண ஆதாரம் நமக்குக் கிடைக்காதது நம் துர்பாக்யமே. ஆனாலும் பூர்வர்கள் க்ருபையால் இதைப் பற்றி ஓரளவு நாம் தெரிந்து கொண்டுள்ளோம்,

இதிலே உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் எவ்வளவு எளியவனாக இருந்தாலும் அவன் அடியார்கள் அவனை எளிதில் கண்டு கொள்வார்கள்.
  • உயர்ந்த நோக்குடைய அடியார்கள் எம்பெருமானிடத்தில் மோக்ஷத்தைப் பெற்று நித்ய கைங்கர்யத்தையே விரும்பிப் பெறுவார்கள்.
  • ததிபாண்டனுக்கு மோக்ஷம் கொடுத்தது புரிகிறது. ஆனால் தயிர்த்தாழி இவ்வுலகில் உள்ள அசேதனப் பொருள். அதற்கு எப்படி மோக்ஷம் கிடைக்கும்? இக்கேள்விக்கு மணவாள மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானத்தில் அழகான விளக்கத்தை அருளியுள்ளார். அதாவது – பெயர் உருவம் உள்ள எல்லாவற்றுக்குள்ளும் ஒரு சேதனனுடைய ஆளுமை/இருப்பு உண்டாகையாலே, ததிபாண்டன் நிர்பந்தத்துக்காக, அந்தப் பானையின் ஆத்மாவுக்கு மோக்ஷம் கொடுக்கப்பட்டது. குறிப்பு – அதிகமான பாவம் செய்த ஆத்மாக்கள் மரம், செடி, கொடி மற்றும் கல், வஸ்த்ரம் போன்ற தேஹத்தைப் பெறுவர்கள் என்று சொல்லப்படும்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment