க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 11 – அகாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ததிபாண்டன் பெற்ற பேறு

கண்ணனுக்கு ஐந்து வயதான ஸமயத்திலேயே மற்ற இடைப் பிள்ளைகளுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்று மாடு கன்றுகளை மேய்த்துவிட்டு வருவான். வ்ருந்தாவனத்தில் செழிப்பான நிலங்கள் இருந்ததால் அவர்கள் நாள்தோறும் ஆனந்தமாகக் காட்டிலே ஓடியாடி விளையாடி அனுபவித்துவிட்டு வருவார்கள். யசோதைப் பிராட்டியும் மற்றைய இடைப் பெண்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ததியன்னம் (தயிர் சாதம்), ஊறுகாய் முதலிய ப்ரசாதங்களைக் கொடுத்து விடுவார்கள். பிள்ளைகள் அனைவரும் மதிய நேரத்திலே கண்ணனைச் சுற்றி அமர்ந்து கொண்டு, ஆனந்தமாக ப்ரசாதத்தை உண்டு மகிழ்வார்கள்.

இப்படி ஒரு முறை காட்டுக்குச் சென்றபொழுது, அகாஸுரன் என்கிற தீய எண்ணம் கொண்டவன், கம்ஸனாலே ஏவப்பட்டுக் காட்டுக்கு வந்திருந்தான். இவன் பூதனை மற்றும் பகாஸுரன் ஆகியோரின் ஸஹோதரன். தன்னுடைய உடன்பிறந்தவர்கள் கண்ணனால் கொல்லப்பட்டதால் மிகவும் கோபத்துடன் வந்தான். இவன் ஒரு பெரிய பாம்பின் வடிவை எடுத்துக்கொண்டு இடைப்பிள்ளைகள் வரும் வழியில் தன் வாயை முழுவதுமாகப் பிளந்து வைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். அது பார்ப்பதற்கு ஒரு ஒளிமிக்க குஹை வாயிலைப் போலே இருந்ததால், பிள்ளைகள் ஆசையோடே உள்ளே புகுந்தனர். அங்கே ஆனந்தமாக விளையாடினர். இவன் திட்டத்தை அறிந்த கண்ணன் வெளியிலேயே இருந்தான். அகாஸுரனோ கண்ணன் உள்ளே வந்தால் வாயை மூடிக்கொண்டு அனைவரையும் கொன்று விடலாம் என்று காத்திருந்தான்.

கண்ணனும் இறுதியில் உள்ளே சென்றான். உடனே அகாஸுரன் தன் வாயை மூடிக் கொண்டான். உள்ளே இருந்த அனைவருக்கும் காற்றில்லாமல் மூச்சடைக்க அனைவரும் மயங்கினர். கண்ணன் மட்டும் விழித்திருந்து எப்படி இவனைக் கொல்வது என்று யோஜித்துத் தன் திருமேனியை மிகவும் பெரிதாக்கிக் கொண்டான். அந்த சக்தியைத் தாங்க முடியால் அகாஸுரன் தவித்தான். பிறகு கண்ணன் தன் பெருத்த கையால் உள்ளிருந்து நன்றாக ஒரு குத்து விட, அஸுரனுடைய தலை கிழிந்து அவன் மாண்டு விழுந்தான். பிறகு கண்ணன் தன் கடாக்ஷத்தினால் அனைத்து இடைப் பிள்ளைகளையும் மயக்கம் நீங்குமாறு செய்தான்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானுடைய துணையிருந்தால் எப்படிப்பட்ட பெரிய ஆபத்தும் எளிதில் நீங்கி விடும்.
  • தன் அடியார்களைக் காப்பதில் எம்பெருமான் மிகவும் விழிப்புடன் இருந்து காக்கிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment