ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானான பலராமனும் வ்ருந்தாவனத்தில் தங்கள் தோழர்களுடன் ஆனந்தமாக விளையாடி வந்தாரகள். ஒரு நாள் அவர்கள் கோஷ்டியில் ப்ரலம்பன் என்னும் அஸுரன் ஒரு இடைப் பிள்ளை வேடத்தைக் கொண்டு உள்ளே புகுந்தான். அவன் எப்படியாவது கண்ணனைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தான். அவனைக் கண்ட பலராமன் அவனைக் கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தான்.
அவர்கள் அப்பொழுது ஒரு விளையாட்டு விளையாடினார்கள். அதில் தோற்பவர்கள் ஜயிப்பவர்களைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்று சொல்லப்பட்டது. கண்ணன் ஒரு அணித் தலைவராகவும், பலராமன் ஒரு அணித் தலைவராகவும் இருந்தனர். கண்ணனின் அணியில் ப்ரலம்பாஸுரன் சேர்ந்து கொண்டான். கண்ணனின் அணி தோற்றவுடன் அதிலிருந்த ப்ரலம்பாஸுரன் ஜயித்த அணியின் தலைவரான பலராமனைத் தூக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. அவன் பலராமனைத் தூக்கிகொண்டு வேகமாக ஓடிச் சென்று அவனைக் கொன்றுவிடலாம் என்று பார்த்தான். இதை அறிந்த பலராமன் தன்னுடைய் கனத்தை அதிகப்படுத்திக்கொள்ள, ப்ரலம்பாஸுரனால் பலராமனைத் தூக்க முடியாமல் போனது. அந்த பாரம் அழுத்தும் பொழுது, பலராமன் அவன் தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றான்.
இந்தச் சரித்ரத்தை ஆண்டாள் நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில் “பிலம்பன் தன்னைப் பலதேவன் வென்ற” என்றும் பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்” என்றும் அருளியுள்ளனர்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- பலராமன் செய்த லீலையைக் கண்ணன் செய்ததாகப் பெரியாழ்வார் அருளுவதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கமான உறவின் காரணமாக. இதே போல ராமாவதாரத்திலும் இளையபெருமாள் சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அறுத்ததை ஸ்ரீராமனே செய்ததாகச் சொல்லுவர்கள் ஆழ்வார்கள்.
- எம்பெருமானுக்கு ஒரு ஆபத்து என்றால் அவனுக்கு முன்பாக அவனுடைய அடியார்கள் அவனை ரக்ஷிக்கப் பார்ப்பார்கள். இங்கே கண்ணனுக்கு வந்த ஆபத்தை பலராமன் போக்கினான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org