க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 16 – மாடு கன்றுகளை மேய்த்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ப்ரலம்பாஸுர வதம்

Cows and Krishna | Save the Cow

கண்ணன் எம்பெருமான் தன் சிறு வயதில் மிகவும் விரும்பிச் செய்த செயல் மாடு கன்றுகளை மேய்த்தது. நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “திவத்திலும் பசு நிரை மேய்ப்புவத்தி” என்று எம்பெருமான் பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசுக்களை மேய்ப்பதை விரும்புகிறான் என்று காட்டினார். திருமங்கை ஆழ்வாரும் தன் திருநெடுந்தாண்டகத்தில் “கன்று மேய்த்து இனிதுகந்த காளாய்” என்று எம்பெருமான் கன்றுகளை மிகவும் விரும்பி மேய்த்ததை அனுபவித்தார்.

பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “அஞ்சன வண்ணனை“, “சீலைக் குதம்பை” மற்றும் “தழைகளும்” என்கிற மூன்று பதிகங்களில் கண்ணன் எம்பெருமான் மாடு கன்றுகள் மேய்ப்பதை யசோதை பாவனையிலும் கோபிகைகள் பாவனையிலும் அனுபவித்துள்ளார். முதலிலே யசோதை சிறு பிள்ளையான கண்ணன் மாடு மேய்க்கக் காட்டுக்குப் போவதை நினைத்து வருந்துகிறாள் என்பதை அனுபவித்தார். அடுத்து அவன் மாடு மேய்த்துவிட்டுத் திரும்பி வருவதை ஆனந்தமாக அனுபவிக்கிறாள் என்பதைக் காட்டுகிறார். அடுத்து கோபிகைகள் கண்ணன் மாடு கன்றுகளுக்குப் பின்னே நடந்து வருவதைக் கண்டு அவனிடத்தில் காதல் கொள்வதைக் காட்டுகிறார்.

ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில் “அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்” என்று அருளியுள்ளாள். மாடு கன்றுகளுக்குக் கண்ணன் மிகவும் இனியவன் என்பதை உணர்த்தும் வகையில் கூடாரை, கறவை, சிற்றம் ஆகிய பாசுரங்களில் கோவிந்த நாமத்தைச் சொல்லி அழைக்கிறாள்.

நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “மல்லிகை கமழ் தென்றல்” என்கிற பதிகத்தில் கண்ணன் எம்பெருமான் மாடு கன்றுகளை மேய்த்துவிட்டுத் திரும்பி வருமழகை கோபிகை பாவனையில் அனுபவிக்கிறார்.

இப்படி ஆழ்வார்கள் பல விதத்திலும் எம்பெருமானின் மாடு கன்று மேய்க்கும் லீலையை அனுபவித்துள்ளார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் உதவ வரும்பொழுது நாம் விலக்காமல்/தடுக்காமல் இருந்தாலே அவன் நம்மை ரக்ஷிப்பான். இதை மாடு கன்றுகள் விஷயத்தில் காணலாம். மாடு கன்றுகளுக்கு எம்பெருமானை ரக்ஷகனாகப் பார்க்க வேண்டும் என்று தெரிந்து அவனை வேண்டிக் கேட்காவிட்டாலும், அவன் உதவ வரும்போது தடுக்காமல் இருந்தன. ஆகையால் அவனாலே ரக்ஷிக்கபட்டன.
  • பொதுவாகவே மாடு கன்றுகள் ஸத்வ குணத்தில் இருப்பவை. ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் எம்பெருமானாலே நிச்சயம் ரக்ஷிக்கப்படுவார்கள்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment