க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 18 – வஸ்த்ராபஹரணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< குழல் ஊதுதல்

WhatsApp Image 2023-09-22 at 10.00.55 AM

கண்ணன் எம்பெருமானின் லீலைகளில் முக்யமான ஒன்று கோபிகைகளின் வஸ்த்ரங்களை கவர்ந்து விளையாடியது. இந்த லீலையை இதன் தாத்பர்யத்தோடு சேர்த்து அனுபவிப்போம்.

இடைப் பெண்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டவன் கண்ணன். அவர்களும் கண்ணனிடத்தில் மிகவும் அன்பு கொண்டவர்கள். கண்ணன் அவ்வப்பொழுது பெண்களிடத்தில் அவர்களின் பின்னலைப் பிடித்து இழுப்பது, வஸ்த்ரத்தைப் பிடித்து இழுப்பது என்று பல தீம்புகளைச் செய்வான். அவர்களும் அதைப் பொறுக்க முடியாமல் யசோதையிடம் வந்து முறையிடுவார்கள். கண்ணனிடத்திலும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

ஒரு முறை இடைப் பெண்கள் எல்லாரும் கண்ணனுக்குத் தெரியாமல் ஒரு பொய்கைக்கு நீராடச் சென்றார்கள். ஆனால் கண்ணனோ அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அந்தப் பெண்கள் சிறு வயதினராக இருந்ததால் தங்கள் ஆடைகளைக் கரையில் கழற்றி வைத்து பொய்கையில் இறங்கினார்கள். கண்ணன் அவர்கள் உள்ளே போனவுடன் அந்த வஸ்த்ரங்களை அபஹரித்துக் கொண்டு அருகில் இருந்த குருந்த மரத்தின் மேலேயேறி அமர்ந்து கொண்டான். நீராடி வந்த பெண்கள் வெளியே வஸ்த்ரங்களைக் காணமல், இவற்றைத் தெய்வம் எடுத்துக் கொண்டதோ இல்லை வேறு ஏதாவது எடுத்துக் கொண்டதோ என்று திகைத்தனர். அப்பொழுது எம்பெருமான் மேலிருந்து அவர்களை அழைத்து வஸ்த்ரம் வேண்டும் என்றால் கைகளை உயரத் தூக்கித் தன்னை வணங்கச் சொன்னான். முதலில் வெட்கத்தாலே மறுத்த அந்தப் பெண்கள் பின்பு எம்பெருமானிடத்தில் இருந்த பக்தியால் தங்கள் உடம்பை மறைப்பதை விட்டு கையை உயரத் தூக்கி எம்பெருமானை வணங்கினார்கள். கண்ணன் எம்பெருமானும் அகமகிழ்ந்து, அவர்களுக்கு வஸ்த்ரங்களைக் கொடுத்தான்.

பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்டோய் மரத்தான்” என்று எம்பெருமான் அழகிய கூந்தலையுடைய பெண்களின் வஸ்த்ரங்களை எடுத்துக்கொண்டு வானளாவிய குருந்த மரத்தில் ஏறினான் என்று அனுபவித்தார். ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழியில் “கோழியழைப்பதன் முன்னம்” என்னும் பதிகம் முழுக்க இந்த லீலையை அனுபவைத்தாள். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “துளையார் கருமென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும்” என்று அனுபவித்தார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானிடத்திலே சரணாகதி பண்ணும்பொழுது நம் கையில் ஒன்றும் இல்லை என்று அறிவித்து, நமக்கு வேறு கதி இல்லை என்று அறிவித்து, முழுதுமாக லஜ்ஜையை விட்டு அவன் திருவடிகளே தஞ்சம் என்று பற்ற வேண்டும். கோபிகைகள் கண்ணனிடத்தில் பெருங்காதல் கொண்டிருந்தாலும், கண்ணனே தங்களுக்கு முழுக்கத் தஞ்சம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். அதை அவர்களுக்குப் புரிய வைக்கவே இதை எம்பெருமான் செய்தான்.
  • இதைச் சிலர் தவறாகச் சித்தரிப்பார்கள். அதாவது கண்ணன் வக்ரமான செயலைச் செய்தான் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே இருந்த பெண்கள் மிகவும் சிறு பெண்கள். ஆறேழு வயதான கண்ணனின் வயதை ஒத்த வயதில் உள்ள சிறு பெண்கள். ஆகையால் இதில் ஒரு தவறான எண்ணத்துக்கும் இடம் இல்லை.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment