ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
ஒரு நாள் கண்ணன் எம்பெருமான், நம்பி மூத்தபிரான் மற்றுமுள்ள நண்பர்களான இடைப்பிள்ளைகளும் வ்ருந்தாவனத்திலே மதிய நேரத்தில் அமர்ந்திருந்தார்கள். இடைப் பிள்ளைகளுக்கு மிகவும் பசிக்கத் தொடங்க, அவர்கள் கண்ணனையும் பலராமனையும் பார்த்துத் தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவேண்டுமாறு ப்ரார்த்தித்தார்கள்.
அப்பொழுது கண்ணன் அவர்களிடம் “இப்போது நாம் உணவுக்கு எங்கே போவது. நம் வீடுகளில் இருந்து வெகு தூரம் உள்ளோம். சரி, காட்டிலே சில ரிஷிகள் ஆச்ரமம் அமைத்து, பகவானைக் குறித்துத் தவம் செய்து வருவார்கள். நீங்கள் அவர்களிடத்தில் சென்று உணவைப் பெற்று வாருங்கள். நாம் அதைப் பகிர்ந்து உண்போம்” என்று சொன்னான்.
உடனே அந்தப் பிள்ளைகள் அனைவரும் காட்டிலே தேடி ஒரு ஆச்ரமத்தைக் கண்டுபிடித்தனர். அங்கே ரிஷிகள் அனைவரும் யாகம் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் நேரே அந்த ரிஷிகளிடத்தில் சென்று, தாங்கள் க்ருஷ்ண பலராமர்களுடன் இருப்பதையும், தங்களுக்கு பசி எடுப்பதையும் சொல்லி உணவு கேட்டார்கள். ரிஷிகளோ யாகத்தில் நோக்காக இருந்ததால் இவர்களைக் கவனிக்கவே இல்லை. பிள்ளைகளும் கண்ணனிடம் வருத்தத்துடன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்ல, அதைக் கேட்ட கண்ணன் “நீங்கள் மீண்டும் அங்கேயே செல்லுங்கள். அந்த ரிஷிகளின் தர்மபத்னிகள் இருப்பார்கள். அவர்களிடத்திலே விஷயத்தைச் சொல்லி உணவைப் பெற்று வாருங்கள்” என்றான்.
மீண்டும் அங்கே சென்ற பிள்ளைகள், இம்முறை ரிஷிபத்னிகளிடம் சென்று “நாங்கள் க்ருஷ்ண பலராமர்கள் அனுப்பி வந்துள்ளோம். எங்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்” என்று கேட்டார்கள். அதைக் கேட்ட ரிஷிபத்னிகள் கண்ணன் விஷயத்தில் மிகவும் ஆசை கொண்டு, கண்ணனுக்காக என்று பல வகை உணவுகளை, தங்கள் உறவினர்கள் தடுத்தபோதும், அதையும் மீறி, அவர்களே கொண்டு வந்து கொடுத்தனர். அதைக் கண்ட கண்ணனும் மிகவும் மகிழ்ந்து, அவற்றைத் தானும் உட்கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்தான். பின்பு ரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து எம்பெருமானிடத்தில் மானஸீகமாக மன்னிப்புக் கேட்டனர்.
இந்த சரித்ரத்தை ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழியில் “வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடுமின்” என்று அருளிச்செய்கிறாள். பத்தவிலோசனம் என்பதில் பத்த என்பது ஸம்ஸ்க்ருதத்தில் பக்த என்று உணவைக் குறிக்கும். விலோசன என்பது பார்ப்பதைக் குறிக்கும். மிகவும் பசியோடு இருந்தபோது ரிஷிபத்னிகளிடமிருந்து உணவு வருகிறதா என்று எதிர்நோக்கி இருப்பதை ஆண்டாள் இங்கே காட்டுகிறாள்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- வேதாந்தத்தில் எவ்வளவு வல்லவர்களாக இருந்தாலும், யாகங்களைப் பண்ணிக் கொண்டு இருந்தாலும், பகவானிடத்தில் பக்தி இல்லை என்றால் அது கொஞ்சமும் ப்ரயோஜனம் இல்லை. அதே சாஸ்த்ரத்தை முறையாகக் கற்காவிட்டாலும், பகவான் என்றால் உருகக்கூடிய தன்மை இருந்தால், அதுவே பகவானுக்கு உகப்பாக இருக்கும்.
- ஒன்று எம்பெருமான் க்ருபையை உணர்ந்து தானே எம்பெருமானிடத்தில் பக்தி செய்யவேண்டும். அல்லது மற்றவர்களின் உபதேசத்தைக் கேட்டோ அல்லது அவர்கள் பக்தியைக் கண்டோ நாம் திருந்த வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால், உஜ்ஜீவனத்துக்கு வழியே இல்லை.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org