க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 22 – குடக் கூத்து ஆடுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ராஸ க்ரீடை

கண்ணன் எம்பெருமானின் மற்றொரு அற்புதமான லீலை குடக் கூத்து ஆடுதல். குடக் கூத்து என்பது குடங்களை ஏந்திக்கொண்டு, பறை வாத்யத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த வாத்யத்தை வாசித்துக் கொண்டே நடனம் ஆடுவது. பொதுவாக இது நாற்சந்தியிலே எல்லாரும் காணும்படி ஆடப்படும். இது இடையர்களுக்கே இருக்கக் கூடிய முக்யமான ஒரு விளையாட்டு. பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களில் ப்ராஹ்மணர்கள் அதிகமாக செல்வம் கிடைத்தால் யாகங்களைப் பண்ணுவார்கள் என்றும் இடையர்கள் அதிகமாக செல்வம் கிடைத்தால் குடக்கூத்து ஆடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கண்ணன் பிறப்பதற்கு முன்பு நந்தகோபரே குடக்கூத்து ஆடுவதில் மிகத் தேர்ந்தவராக இருந்தார் என்றும் கண்ணன் பிறப்புக்குப் பிறகு, அவன் தன் தந்தையை விட இதில் சிறந்து விளங்கினான் என்றும் சொல்லப்படும். கண்ணன் இந்தக் குடக்கூத்தை ஆடியே பெண்களை மயக்குகிறான்.

இந்த லீலையை ஆழ்வார்கள் பல இடத்தில் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “அரவம் அடல் வேழம்” என்று தொடங்கி “குரவை குட … கோத்தாடி” என்று அனுபவித்துள்ளார். பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் “குடம் நயந்த கூத்தனாய் நின்றான்” என்று அனுபவித்துள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே” என்று அனுபவித்துள்ளார். குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “குடமாட்டும்” என்று அனுபவித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “தண் குடந்தைக் குடமாடீ!” என்று அனுபவித்துள்ளார்.

திருமங்கை ஆழ்வார் தன் சிறிய திருமடலில் கண்ணனின் குடக்கூத்துக்குப் பரகால நாயகி மயங்கியதை “நீரார் கமலம் போல் செங்கண்மால் என்றொருவன்” என்று தொடங்கி அற்புதமாக வர்ணித்துள்ளார். இதைச் சற்று அனுபவிப்போம்.

நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழப் பறை கறங்க
சீரார் குடம் இரண்டு ஏந்தி – செழுந்தெருவே
ஆரார் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏரார் இள முலையார் என்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்

திருமங்கை ஆழ்வாரின் பெண்ணுருவமே பரகால நாயகி. பரகால நாயகி தன்னை அலங்கரித்துக் கொண்டு தன் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தாள். அப்பொழுது “புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரன் கண்ணனாக இருந்து கொண்டு, திருவாய்ப்பாடியில் ஒரு நாற்சந்தியில் அனைவருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும்படி, இரண்டு குடங்களை ஏந்திக்கொண்டு, பறை என்னும் வாத்யத்தை வாசித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறான்” என்று அவளுக்கு அவள் தோழிகள் அறிவிக்க, அதைக் கண்டு களிக்கலாம் என்று அவள் தன்னுடைய வல்வினையால் அங்கே சென்றாள். அவனைக் கண்ட பின்பு தன்னுடைய எல்லாவற்றையும் அவனுக்கு இழந்து விட்டாள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • ஜீவாத்மாக்களைத் தன்னுடைய அழகையும் லீலைகளையும் காட்டி தன்னிடத்திலே எம்பெருமான் ஈர்க்கிறான்.
  • பரகால நாயகி இங்கே ஒரு ஜீவாத்மா. இவள் விளையாடிக் கொண்டு இருப்பது, இந்த ஆத்மா உலக விஷயத்தில் ஈடுப்பட்டிருப்பது. கண்ணனோ பரமாத்மா. அவன் குடக்கூத்து ஆடுவது, தன்னுடைய அழகையும் லீலைகளையும் காட்டுவது. இங்கே பரகால நாயகியின் வல்வினை என்பது இவளுடைய பெரிய பக்தி. பரகால நாயகி தன்னுடைய எல்லாவற்றையும் இழப்பது இந்த ஜீவாத்மா எம்பெருமானுக்கே முழுவதுமாக அடிமையாவது.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment