க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 23 – அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< குடக் கூத்து ஆடுதல்

No photo description available.

கண்ணன் எம்பெருமான் இவ்வாறு வ்ருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட இன்னும் சில அஸுரர்கள் கண்ணனைக் கொல்ல ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை எல்லாம் எம்பெருமான் எளிதிலே அழித்தான். இந்த வைபவங்களை இப்பொழுது அனுபவிக்கலாம்.

அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணன் எம்பெருமானை நோக்கி வேகமாக வர, எம்பெருமான் அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான். அரிஷ்டாஸுர வதம் திருவாய்மொழிப் பாசுரம் 10.3.7 வ்யாக்யானத்தில் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அதைக் கண்ட நாரதர், இவனிடத்திலிருந்து எம்பெருமான் தப்பிக்கவே முடியாது என்றெண்ணி, மிகவும் பயப்பட்டு, மயங்கி விழுந்தார். எம்பெருமானை நோக்கி அவன் எம்பெருமானைக் கொல்லும் எண்ணத்துடன் வர, எம்பெருமான் அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். எம்பெருமான் கேசியைக் கொன்றான் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகே நாரதருக்குப் பயம் தெளிந்தது. இந்த சரித்ரத்தை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்று அனுபவித்துள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்று அனுபவித்துள்ளார். குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்று அனுபவித்துள்ளார். ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்று அனுபவித்துள்ளாள். திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்று அனுபவித்துள்ளார். இவற்றில் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.

பின்பொரு நாள் கம்ஸன் அனுப்பிய வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த வ்யோமாஸுரனையும் கொன்றான்.

இப்படிப் பல அஸுரர்கள் திருவாய்ப்பாடியிலும் வ்ருந்தாவனத்திலும் எம்பெருமானை எதிர்த்து வந்து கொல்லப் பட்டார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எப்படிப்பட்ட வேடத்தில்/உருவத்தில் வந்தாலும் தீய எண்ணம் கொண்டவர்களை எம்பெருமான் எளிதில் அடையாளம் கண்டு அழித்து விடுகிறான்.
  • எம்பெருமானுக்கு வரும் ஆபத்து, உண்மையில் அவனுக்கு ஆபத்தே அல்ல. ஏனெனில் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட ஆபத்து, அடியார்களுக்கே ஆபத்தாக இருக்கிறது. ஏனெனில் எம்பெருமானுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அடியார்களாலே தரித்துக்கொள்ள முடியாது. ஆகையாலே எம்பெருமான் தன் ஆபத்தைப் போக்கி அடியார்களின் துன்பத்தைப் போக்குகிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment