ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்
க்ருஷ்ண லீலைகளில் மிகவும் முக்யமான மற்றும் சிறப்பான ஒரு அனுபவம் எம்பெருமானுக்கும் நப்பின்னைப் பிராட்டிக்கும் உள்ள ஸம்பந்தம். இதை ஆழ்வார்கள் பாசுரங்களில் விசேஷமாக அனுபவிக்கலாம்.
முதலில், நப்பின்னைப் பிராட்டி யார்? என்னில் இவள் நீளா தேவியின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. எம்பெருமானின் ப்ரதான மஹிஷிகள் என்றால் அது ஸ்ரீ தேவி என்கிற பெரிய பிராட்டியார், பூதேவி என்கிற பூமிப் பிராட்டியார் மற்றும் நீளா தேவி. இந்த நீளா தேவியே நப்பின்னைப் பிராட்டியாக அவதரிக்கிறாள். பராசர பட்டர் திருப்பாவைக்கு அருளிய தனியனை “நீளாதுங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்” என்று தொடங்குகிறார். இதன் அர்த்தம் – நீளாதேவியின் அவதாரமான நப்பின்னைப் பிராட்டியின் ஸ்தனங்கள் என்கிற மலைத் தாழ்வரையில் சயனித்து இருக்கும் கண்ணன். இந்தத் தனியன் வ்யாக்யானத்தில் பிள்ளை லோகம் ஜீயர் நீளா தேவி யசோதைப் பிராட்டியின் தம்பியான மிதிலா தேசத்தின் ராஜாவான கும்பகன் என்பவருடைய பெண் என்று ஒரு புராண ச்லோகத்தைக் கொண்டு எடுத்துக் காட்டுகிறார். மேலும் இவள் ஆயர் குலத்தில் தோன்றியவள் என்பதையும் காட்டுகிறார்.
ஸ்ரீ ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் புருஷகார பூதையாகச் (எம்பெருமானை நாம் அடைவதற்கு உதவி செய்பவளாக) சொல்லப் படுகிறாள். வராஹாவதாரத்தில் பூமிப் பிராட்டியார் புருஷகார பூதையாகச் சொல்லப் படுகிறாள். க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னைப் பிராட்டியே புருஷகார பூதையாகச் சொல்லப் படுகிறாள். ருக்மிணிப் பிராட்டி ப்ரதானமான பட்ட மஹிஷியாக இருந்தாலும் நப்பின்னைப் பிராட்டிக்கே மிகுந்த முக்யத்வம் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் பாசுரங்களிலும் ருக்மிணிப் பிராட்டிக்கும் ஸத்யாபாமாப் பிராட்டிக்கும் வெகு சில பாசுரங்களே காணப்படுகின்றன. ஆனால் நப்பின்னைப் பிராட்டிக்கோ பல பாசுரங்கள் காணப்படுகின்றன.
இவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கப் பார்க்கும் இவள் தந்தை ஏழு மிகவும் பலம் வாய்ந்த எருதுகளை யார் வெல்கிறாரோ அவருக்கே இவளைக் கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று அறிவித்தார். கண்ணன் எம்பெருமான் இந்த உலகத்தில் வந்து அவதரித்ததன் இரண்டு காரணங்களில் ஒன்று நப்பின்னைப் பிராட்டியை அணைத்து மகிழ என்று நம்மாழ்வார் காட்டியதின்படி, இவளைத் திருக்கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு, கும்பகன் இருந்த இடத்துக்குச் சென்று, தான் அந்த எருதுகளை ஜயிக்கப் பார்த்தான். அந்த எருதுகளை ஒரே ஸமயத்தில் ஒன்றாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு அணைத்து அவைகளை அடக்கிக் கொன்றான். நப்பின்னைப் பிராட்டியும் கண்ணன் எம்பெருமானை ஆனந்தமாகத் திருக்கல்யாணம் செய்து கொண்டாள்.
பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை” என்று அனுபவித்துள்ளார். ஆண்டாள் தன் திருப்பாவையில் நப்பின்னைப் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானை அடையப் பார்த்தாள். “உந்து மதகளிற்றன்”, “குத்து விளக்கெரிய” மற்றும் “முப்பத்து மூவர்” பாசுரங்களில் நப்பின்னைப் பிராட்டியை ஸ்பஷ்டமாகக் காட்டியுள்ளாள். நம்மாழ்வார் “பின்னைகொல் நிலமாமகள்கொல்” என்று நப்பின்னைப் பிராட்டியைக் காட்டியுள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை” என்று அனுபவித்துள்ளார். மேலும் பல ஆழ்வார்கள் பல பாசுரங்களில் இப்படி அனுபவித்துள்ளார்கள்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமான் நப்பின்னைப் பிராட்டியிடத்தில் மிகவும் அன்பு கொண்டவன். அவளுக்காகவே இந்த க்ருஷ்ணாவதாரம் என்று சொல்லுமளவுக்கு அன்பு கொண்டவன். நம்மாழ்வார் “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே” என்று காட்டியுள்ளார்.
- ஸ்ரீபாகவதத்தில் ஏழு எருதுகளை ஜயித்து நக்நஜித் என்பவருடைய பெண்ணான ஸத்யாவைத் திருக்கல்யாணம் பண்ணிக்கொள்வது காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில், இந்த நிகழ்ச்சி பிற்பாடு, அதாவது கண்ணன் பெரியவனானபின்பு நடப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால் ஆண்டாளோ எம்பெருமானை நப்பின்னைப் பிராட்டியுடன் சேர்த்துத் திருவாய்ப்பாடியிலே அனுபவிக்கிறாள். கண்ணனோ பத்து வயது வரை அதாவது உபநயனத்துக்கு முன்பே திருவாய்ப்பாடியிலும் வ்ருந்தாவனத்திலேயும் இருந்தான். அதற்குப் பிறகு வடமதுரைக்குச் சென்ற அவன் திருவாய்ப்பாடிக்கோ வ்ருந்தாவனத்துக்கோ திரும்பவில்லை. ஆக இந்த லீலை எம்பெருமான் ஆழ்வார்களுக்கு விசேஷமாக வெளியிட்ட ஒரு அற்புத லீலையாகச் சொல்லப்படுகிறது.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org