க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 32 – ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்

வஸுதேவர் தன் குலகுருவான கர்க முனியிடத்தில் பேசி, கண்ணனுக்கும் பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரத்துக்கு நாள் குறித்தார். குறிப்பிட்ட நாளில் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின்பு, அவர்கள் குருகுல வாஸம் செய்து சாஸ்த்ரத்தைக் கற்க வேண்டும் என்று முடிவு செய்யப்ப்ட்டது. ஸகல வேதங்களாலும் கொண்டாடப்படுபவனும், ஸகல வேதங்களையும் ஒவ்வொரு ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தவனும் ஆன ஸர்வேச்வரன் க்ருஷ்ணன் இப்பொழுது ஒரு குருவிடத்தில் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதற்குத் தகுந்தவர் அவந்தி நகரத்தில் வாழும் ஸாந்தீபனி முனியே என்று முடிவு செய்து, கண்ணன் தன் அண்ணனுடன் சேர்ந்து அவரைச் சென்று அணுகி அவரிடத்தில் தங்களுக்கு சாஸ்த்ரத்தைச் சொல்லிக் கொடுக்குமாறு வேண்டினான். அவரும் இவர்களுடைய தெய்வீகத் தன்மையைக் கண்டு மிகவும் மகிழ்ந்து இவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறுபத்து நாலே நாட்களில் சொல்லிக் கொடுத்தார். இவர்களும் அவர் ஆச்ரமத்தில் இருந்த ஸுதாமா போன்ற பல மாணவர்களுடன் சேர்ந்து, மிகவும் ச்ரத்தையோடு சாஸ்த்ரங்களைக் கற்றுத் தேறினர்.

குருவிடத்தில் கல்வி கற்றபின் அவருக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டுமே. அதற்காக கண்ணனும் பலராமனும் அவரிடத்தில் சென்று என்ன தக்ஷிணை வேண்டும் என்று கேட்டனர். அவர் எம்பெருமானிடத்தில் மோக்ஷத்தைக் கேட்டிருந்தாலும் அவன் உகந்து கொடுத்திருப்பான். அவரோ தன் தர்மபத்னியுடன் கலந்து ஆலோசித்து, முன் காலத்தில் கடலில் விழுந்து மாண்டுபோன தன் பிள்ளையை மீட்டுக் கொடுக்குமாறு கேட்டார். கண்ணனும் கடலுக்குச் சென்று தேட, கடலரசன் பஞ்சஜனன் என்னும் சங்கு அரக்கன் அந்தப் பிள்ளையை விழுங்கியதைச் சொல்ல, கண்ணனும் அந்த அரக்கனைத் தேடிச் சென்று அழித்து அங்கும் அந்தப் பிள்ளையைக் காணாததால், யம பட்டணத்துக்குச் சென்று, யமனிடத்தில் கேட்டு, அந்தப் பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்து தங்கள் குருவிடத்தில் சேர்த்தான்.

இதற்குப் பிறகு மீண்டு தங்கள் நாட்டுக்கு இருவரும் திரும்பினார்கள்.

திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்” என்று ஸாந்தீபனியிடத்தில் கல்வி கற்றதைக் காட்டியுள்ளார். இதற்கு வ்யாக்யானம் அருளியுள்ள பெரியவாச்சான் பிள்ளை “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்கும்போதும் “நம்பிள்ளையைப் போன்ற சிறந்த ஆசார்யன்” என்று அனுபவித்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானுக்கு நாம் எதை விரும்புகிறோமோ அதை ஸமர்ப்பிக்கலாம். ஆனால் குருவுக்கு தக்ஷிணை ஸமர்ப்பிக்கும்போது அவர் ஆசைப்படுவதையே நாம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
  • எம்பெருமான் அனைத்தையும் இயற்கையாக அறிந்து இருந்தாலும், ஒரு குருவினடத்தில் அடி பணிந்து கற்று, இதுவே ஞானத்தைப் பெறுவதற்குச் சரியான முறை என்பதைக் காண்பித்தான்.
  • எம்பெருமானுக்கே சொல்லிக் கொடுக்கும் அளவுக்குப் பெரிய ஞானியாக இருந்தாலும் தேஹ பந்துக்களில் ஆசை இருந்தால், பகவானை எளிதில் அடையக்கூடிய வாய்ப்பை இழந்து விடலாம்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment