ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம்
கண்ணன் எம்பெருமானுக்கும் ருக்மிணிப் பிராட்டிக்கும் ப்ரத்யும்னன் மகனாகப் பிறந்தான். இவன் முன்பு மந்மதனாக இருந்தான். மந்மதன் எம்பெருமானுடைய ஓர் அம்சாவதாரமாகக் கொண்டாடப்படுபவன். மந்மதன் சிவனுடைய கோபப் பார்வையாலே எரிந்து சாம்பலானான். அவனுடைய பத்னியான ரதி, மிகவும் சோகமுற்றாள். ஆனால் மந்மதன் மீண்டும் பிறந்து அவளைக் கைப்பிடிப்பான் என்று அவளுக்குத் தெரிந்ததால், அவள் உயிர் தரித்தாள். அந்த மந்மதனே இப்பொழுது ப்ரத்யும்னனாக வந்து பிறந்தான்.
சம்பரன் என்கிற அஸுரன், ப்ரத்யும்னனைத் தன் எதிரியாக நினைத்து, அவன் பிறந்த சில நாட்களுக்குள்ளே அவனைக் கவர்ந்து சென்று கடலில் எறிந்தான். ஒரு பெரிய மீன் ப்ரத்யும்னனை விழுங்க, அந்த மீனைச் சில மீனவர்கள் பிடிக்க, அதை அவர்கள் கொண்டு வந்து சம்பரனுக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை அவன் தனக்கு உணவு சமைக்கும் ஆட்களிடம் கொடுக்க, அவர்கள் அதன் வயிற்றை அறுக்க, அங்கே ஓர் அழகிய குழந்தை இருக்க, அந்தக் குழந்தையை அவர்கள் சம்பரனின் வேலைக்காரியான மாயாவதியிடத்தில் கொடுத்தார்கள். அந்த ரதியே இப்பொழுது மாயாவதியாக இங்கே வாழ்ந்து வந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி அந்தக் குழந்தை ப்ரத்யும்னன் என்றும் மந்மதனே இப்படிப் பிறந்துள்ளான் என்பதையும் அவளுக்கு அறிவித்தார். இதைக் கேட்ட மாயாவதி மிகவும் ஆனந்தமுற்றாள். ப்ரத்யும்னனை நன்கு வளர்த்து வந்தாள். அவன் வெகு விரைவில் வாலிபப் பருவத்தை அடைந்தான். அவனோ ஸாக்ஷாத் கண்ணனைப் போலே பேரழகனாகத் திகழ்ந்தான். அவள் அவனிடத்தில் உண்மையைச் சொல்லி சம்பரனை அழித்து விடச் சொன்னாள். ப்ரத்யும்னனும் சம்பரனை யுத்தத்துக்கு அழைத்து அவனோடே யுத்தம் செய்து அவனைக் கொன்றான்.
அதற்குப் பிறகு இருவரும் த்வாரகைக்கு வந்தார்கள். ப்ரத்யும்னனைக் கண்ட ருக்மிணிக்குத் தாயன்பு மேலோங்கித் தன்னடையே தாய்ப்பால் சுரந்தது. கண்ணன் எம்பெருமான் இதை முற்றும் அறிந்தும் பேசாமல் பார்த்திருந்தான். அப்பொழுது அங்கே நாரதர் தோன்றி ருக்மிணிப் பிராட்டிக்கு நடந்ததைச் சொன்னார். அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.
பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் “மகன் ஒருவர்க்கல்லாத மாமேனி மாயன் மகனாம் அவன் மகன்” என்று ப்ரத்யும்னனைப் பற்றி அருளியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமான் முக்யாவதாரங்களுக்கு மேலே சில அம்சாவதாரங்களையும் பண்ணுகிறான். அதில் ஒன்று மந்மதன் மற்றும் அவன் அம்சமாகத் தோன்றிய ப்ரத்யும்னன்.
- மேலும் எம்பெருமான் வ்யூஹ நிலையிலே வாஸுதேவன், ப்ரத்யும்னன், அனிருத்தன் மற்றும் சங்கர்ஷனன் என்று நான்கு நிலைகளில் இருக்கிறான். இவற்றின் ப்ரதிபலிப்பாக கண்ணன், ப்ரத்யும்னன் (மகன்), அனிருத்தன் (பேரன்) மற்றும் பலராமனாக இங்கே க்ருஷ்ணவதாரத்தில் காணப்படுகிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org