க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 37 – காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும்

கண்ணன் எம்பெருமான் பாண்டவர்கள் வனவாஸம் மற்றும் மறைந்து வாழ்தலில் இருந்து மீண்டார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்க இந்த்ரப்ரஸ்தத்துக்குச் சென்றான். அவனுடன் ஸாத்யகி மற்றும் வேறு சில யாதவர்களும் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்தான். அவர்களிடத்திலே மிகவும் அன்போடு பேசிப் பழகினான். அவர்களின் தர்மபத்னியான த்ரௌபதி கண்ணனை வணங்கி மகிழ்ந்தாள். அவனுடைய அத்தையான குந்தியை அவன் வணங்கி நலம் விசாரித்தான். குந்தியோ மிகவும் சிறந்த க்ருஷ்ண பக்தை. கண்ணனிடத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி, அவனுடைய க்ருபையினாலேயே இப்பொழுது மீண்டு வந்திருக்கிறோம் என்றாள்.

இந்த இந்த்ரப்ரஸ்தம் கண்ணனுடைய கருணையினால் பாண்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. அந்த சரித்ரத்தை இப்பொழுது பார்ப்போம்.

ஒரு முறை அக்னி தேவன் ஒரு அந்தணர் வேடத்தில் கண்ணனும் அர்ஜுனனும் சேர்ந்திருந்த நேரத்தில் வந்து தனக்கு மிகவும் பசிக்கிறது என்று கேட்டான். அப்பொழுது அவர்கள் “உமக்கு வேண்டும் அளவு புசிக்கலாம்” என்றார்கள். பின்னர் அவன் தன் உண்மை உருவைக் காட்டி, தனக்குக் காண்டவ வனத்தை முழுவதுமாகக் கபளீகரம் செய்ய விருப்பம் என்றான். இந்த வனம் இந்த்ரனுக்கு மிகவும் விருப்பமான சொத்து. ஆனால் அங்கே துஷ்ட மிருகங்கள் பல இருந்தன. கண்ணனின் திருவுள்ளத்தில் இதுவும் ஒரு பூமிபாரம் என்று தோன்ற அதை அக்னியைக் கொண்டு அழிக்க முடிவு செய்தான். எம்பெருமானின் ஆணையின் பேரில் அக்னி தேவன் அந்த வனத்தை முழுவதுமாக எரித்து உண்டான். அதில் இருந்த பல துஷ்ட மிருகங்கள் மாண்டன. வெளியே தப்பி வந்தவைகளை அர்ஜுனனும் கண்ணனுமாக அடித்து வீழ்த்தினார்கள். இந்த்ரன் பெரிய மழையைப் பொழிந்து இந்த வனம் அழிவதைத் தடுக்கப் பார்த்தான். ஆகிலும் அது முடியாமல் போனது. இங்கிருந்து தப்பின மயனை (அஸுரர்களின் தச்சன்) அர்ஜுனன் காப்பாற்றினான். அவனே பிற்பாடு இந்த்ரப்ரஸ்த்தத்தை நிர்மாணித்தான் என்று சொல்லுவார்கள். மயன் கட்டிய மாளிகையில் துரியோதனன் வழுக்கி விழுந்து, அப்பொழுது த்ரௌபதி சிரித்து அவனை அவமதித்ததும் மஹாபாரத யுத்தத்துக்கு முக்யமான காரணமானது. இங்கிருந்து தப்பிய தக்ஷகன் என்னும் பாம்பு பிற்பாடு குருவம்சத்தில் விரோதம் பூண்டு, அர்ஜ்னனின் பேரனான பரீக்ஷித்தைக் கொன்றது.

திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “காண்டா வனம் என்பதோர் காடு அமரர்க்கரையன் அது கண்டவன் நிற்க முனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான்” என்னும் இடத்தில் காண்டவ வனம் எரிக்கப்பட்டதை அழகாக வர்ணித்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பிற்காலத்தில் நாம் எதிர்பார்க்காத பின்விளைவுகள் ஏற்படும், காண்டவ வனத்தை எரிக்கும்போது பாதிக்கப்பட்ட தக்ஷகனால் பல்லாண்டுகள் கழித்து பரீக்ஷித்து பாதிக்கப்பட்டான். துரியோதனைக் கண்டு அவமதித்த த்ரௌபதியின் செயல் மஹாபாரத யுத்தத்துக்கே காரணம் ஆனது.
  • பூமி பாரத்தை நீக்க ஒரு வழி இல்லாமல், பல வழிகளில் எம்பெருமான் கார்யம் செய்தான்.
  • எம்பெருமான் தன் அடியார்களான பாண்டவர்களிடத்திலே மிகவும் அன்பைப் பொழிந்து அடியார்கள் விஷயத்தில் தன் வ்யாமோஹத்தை (பெரும் காதல்) வெளியிடுகிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment