க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 38 – மேலும் ஐந்து மஹிஷிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம்

கண்ணன் எம்பெருமான் மேலும் ஐந்து பெண்களைத் திருக்கல்யாணம் செய்து கொள்வதை இப்பொழுது அனுபவிக்கலாம். இவர்கள் எண்மரும் கண்ணனுக்குக் க்ருஷ்ணாவதாரத்தில் ப்ரதான மஹிஷிகள்.

ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்கள் அப்பொழுது யமுனையில் நீராடும்போது ஒரு அழகிய பெண்ணை அங்கே கண்டார்கள். கண்ணன் அர்ஜுனனை அனுப்பி அவள் யாரென்று விசாரிக்கச் சொன்னான். அர்ஜுனன் அவளிடம் சென்று “நீ யார்?” என்று கேட்க அவளும் “நான் காளிந்தி. ஸூர்யனின் பெண். எனக்கு பகவான் விஷ்ணுவே கணவனாக வரவேண்டும். அதற்காகத் தவம் செய்துகொண்டிருக்கிறேன்” என்றாள். அதைக் கேட்ட அர்ஜுனன் அந்தச் செய்தியை கண்ணனிடத்திலே அறிவிக்க, கண்ணனும் தங்களோடு அவளையும் தேரில் ஏற்றிக்கொண்டு யுதிஷ்டிரனின் இடத்துக்குச் சென்றான்.

பின்பு அங்கிருந்து கண்ணனும் மற்றவர்களும் பாண்டவர்களிடத்தில் விடைபெற்று த்வாரகைக்குச் சென்றனர். அங்கே கண்ணன் காளிந்தியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டான்.

இதற்குப் பிறகு தன்னுடைய இன்னொரு அத்தையான ராஜாதிதேவியின் பெண்ணான மித்ரவிந்தாவை மணம் புரிய நினைத்தான் கண்ணன். அவளுடைய ஸஹோதரர்களான விந்த்யன் மற்றும் அனுவிந்த்யன் ஆகிய இருவரும் அவந்தியை ஆண்டுவந்தார்கள். தங்கள் தங்கைக்கு ஒரு ஸ்வயம்வரத்தை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அதில் கண்ணனைக் கலந்து கொள்ளாத விதமாகத் தடுத்தார்கள். அப்பொழுது கண்ணன் அங்கே சென்று மற்ற ராஜாக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளைக் கவர்ந்து சென்று அவளைத் திருக்கல்யாணம் செய்து கொண்டான்.

பின்பு, கோஸல தேசத்தை ஆண்டு வந்த நக்நஜித் என்னும் அரசன் தன் பெண்ணான ஸத்யா என்கிற நக்நஜீதியை நல்ல வரனுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் ஏழு முரட்டு எருதுகளை வைத்திருந்தான். அவைகளை அடக்குபவர்களுக்கே தன் பெண்ணைக் கொடுப்பது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டான். பல ராஜகுமாரர்கள் வந்து அவற்றின் காலிலும் கொம்பிலும் அடிபட்டு ஓடினார்கள். இதைக் கேள்வியுற்ற கண்ணன் பெரும்படையுடன் கோஸல தேசத்துக்குச் சென்றான். நக்நஜித் கண்ணனை அன்போடு வரவேற்றுப் பல பரிசுப் பொருள்களையும் கொடுத்தான். ஸத்யாவும் கண்ணனைக் கண்டு அவனையே மணம் புரிய வேண்டும் என்று விரும்பினாள். கண்ணனும் அந்த ஏழு எருதுகளை வென்று அவளைக் கைப்பிடித்தான். தடுக்க வந்த மற்றவர்களை எளிதில் ஜயித்து விரட்டினான். இந்தச் சரித்ரம் நப்பின்னைப் பிராட்டியின் சரித்ரத்தை போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கேகய தேசத்து ராணியான, கண்ணனின் அத்தையான ச்ருதகீர்த்தியின் பெண்ணான் பத்ரா என்பவளை அவளுடைய் ஸஹோதரர்களுடன் இசைவோடே திருக்கல்யாணம் செய்து கொண்டான்.

பிறகு, மத்ர தேசத்து இளவரசியான லக்ஷ்மணா என்பவளை, அவளுடைய ஸ்வயம்வரத்துக்குத் தனியே சென்று அவளைக் கவர்ந்து சென்று, திருக்கல்யாணம் செய்து கொண்டான்.

இவ்வாறு, ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, ஸத்யா, பத்ரா, லக்ஷ்மணா ஆகிய அஷ்ட மஹிஷிகளுடன் த்வாரகா தேசத்திலே த்வாரகாதீசனாக ஆனந்தமாக வாழ்ந்து வந்தான்.

இதற்குப் பிறகு, எம்பெருமான் நரகாஸுரனைக் கொன்று அவனிடத்தில் இருந்த பதினாறாயிரத்து நூறு தேவஸ்த்ரீகளைத் திருக்கல்யாணம் செய்து கொண்டான். இதை அடுத்த முறை அனுபவிப்போம்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானின் ப்ரதான மஹிஷிகளான ஸ்ரீதேவி, பூமிதேவி மற்றும் நீளா தேவிகள் முறையே ருக்மிணிப் பிராட்டி, ஸத்யபாமாப் பிராட்டி மற்றும் நப்பின்னைப் பிராட்டி அல்லது ஸத்யாவாக அவதரித்து எம்பெருமானைத் திருக்கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
  • எம்பெருமான் புருஷோத்தமன். அனைத்து ஆத்மாக்களும் அவனுக்கு தர்மபத்னி ஸ்தானத்தில் இருப்பவர்கள். ஓரோரு அவதாரங்களில், சில ஆத்மாக்களை எம்பெருமான் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பெண் உடம்பைக் கொடுத்து, அவர்களைத் திருக்கல்யாணம் செய்து, அவர்களுக்கு எம்பெருமானுக்கே நேரே தர்மபத்னியாக இருக்கும் உயர்ந்த நிலையைக் கொடுக்கிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment