ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணனின் புதல்வனான ப்ரத்யும்னனின் புதல்வன் அனிருத்தன். இவனும் பேரழகனாகத் திகழ்ந்தான். மஹாபலியின் நூறு புத்ரர்களில் மூத்தவன் பாணன் என்பவன். இவன் சோணிதபுரத்தை ஆண்டு வந்தான். அனிருத்தனை பாணனின் பெண்ணான உஷை ஆசைப்பட்டு மணம் புரிந்தாள். இதை அறிந்த பாணன் மிகவும் கோபமுற்று அவர்களைச் சிறை வைத்தான். அப்பொழுது ஒரு பெரிய போர் மூண்டது. இந்த சரித்ரத்தை இப்பொழுது அனுபவிக்கலாம்.
பாணன் ருத்ரனிடத்தில் மிகுந்த பக்தியோடிருந்தான். இவன் ஆயிரம் கைகளை உடையவனாக இருந்தான். ஒரு முறை ருத்ரன் ஆனந்தமாக நடனம் ஆடிய போது பாணன் அற்புதமாக மத்தளம் அடித்து ருத்ரனை மகிழ்வித்தான். ருத்ரன் பாணனுக்கு எப்பொழுது ஆபத்து வந்தாலும், தானே வந்து உதவுவதாக வாக்களித்தான்.
பாணனின் பெண்ணான உஷை, ஒரு நாள் தூங்கும்போது, ஸ்வப்னத்தில் ஒரு அழகான ஆண்மகனைக் கண்டாள். அவனிடத்தில் மிகுந்த காதலைக் கொண்டாள். ஆனால் அவன் யாரென்று தெரியாததால் தவித்தாள். அவளுடைய தோழியான சித்ரலேகா அவள் நிலையைக் கண்டு அவளுக்கு உதவ முன் வந்தாள். சித்ரலேகா மிகவும் ஆச்சயமான சக்தியை உடையவள். மிகவும் அழகாக சித்திரங்களை வரையக்கூடியவள். உஷையின் வர்ணனையைக் கேட்டு, சித்ரலேகா முதலில் பல தேவர்கள், கந்தவர்கள் ஆகியோரின் படத்தை வரைந்தாள். அவை எதுவும் உஷைக்கு ஏற்புடையதாக இல்லாததால் கண்ணனின் படத்தை வரைந்தாள். அதைக் கண்ட உஷை, ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது ஆனாலும் இவரில்லை என்றாள். பிறகு ப்ரத்யும்னனின் படத்தை வரைய, இன்னும் கொஞ்சம் பொருத்தமில்லை என்றாள். கடைசியாக அனிருத்தனை வரைந்தவுடன், இவரே என்று இசைந்தாள். உடனே சித்ரலேகா ஆகாச மார்க்கத்தில் த்வாரகையை அடைந்து, அங்கே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனைக் கட்டிலோடே கொண்டு வந்து உஷையின் அந்தப்புரத்தில் சேர்த்தாள். உஷை தன் காதலை அனிருத்தனிடத்தில் வெளிப்படுத்த, அனிருத்தனும் அவள் காதலுக்கு இசைந்து, இருவரும் அப்பொழுதே திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஆனந்தமாக கூடி வாழத் தொடங்கினர்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது உஷையின் மாற்றங்களைக் கண்ட சில பெண்கள் பாணனிடத்தில் அறிவிக்க, அவன் உடனே பெரிய படையோடு அந்தப்புரத்துக்கு வந்தான். அங்கே உஷையும் அனிருத்தனும் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு மிகவும் கோபமுற்று, நாகாஸ்த்ரத்தைக் கொண்டு அனிருத்தனைச் சிறைபிடித்தான்.
இங்கோ த்வாரகையில் அனிருத்தனைக் காணாமல் அனைவரும் வருந்த, அப்பொழுது நாரதர் அங்கே வந்து சோணிதபுரத்தில் அனிருத்தன் சிறைவைக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். உடனே கண்ணன் ஒரு பெரும்படையுடன் சோணிதபுரத்தைச் சென்று அடைந்தான்.
கண்ணனின் பெரும்படையைக் கண்ட பாணன் ருத்ரனிடத்தில் ப்ரார்த்திக்க ருத்ரனும் தன் குடும்பத்துடன் யுத்தத்தில் உதவி செய்யவந்தான். ஆனால் போர் தொடங்கியவுடன் கண்ணன் மற்றும் யாதவர்களின் வீரத்துக்கும் பலத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் ருத்ரன், துர்கை, ஸ்கந்தன், ஜ்வரம் முதலியவர்கள் அனைவரும் தோற்று ஓடினர். கண்ணன் பாணாஸுரனின் ஆயிரம் கைகளில் நான்கை விட்டு, மற்றவைகளை வெட்டிச் சரித்தான். பிறகு பாணன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். ருத்ரனும் வந்து எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ணி மன்னிப்புக் கேட்டான்.
பிறகு பாணன் தன் பெண்ணான உஷையை அனிருத்தனுடன் பல பரிசுப்பொருட்களையும் கொடுத்து த்வாரகைக்கு அனுப்பினான்.
ஆழ்வார்கள் பாணாஸுர வதத்தைப் பல இடங்களில் அனுபவித்துள்ளார்கள்.
- பெரியாழ்வார் தன் திருப்பல்லாண்டில் “மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” என்று அனுபவித்துள்ளார்.
- பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் பாணாஸுர சரித்ரத்தை “மகன் ஒருவர்க்கல்லாத மாமேனி மாயன் மகனாம் அவன் மகன் தன் காதல் மகனை சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என் நெஞ்சே நினை” என்று விரிவாக அனுபவித்துள்ளார்.
- திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தில் “மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேர் அதே” என்று விரிவாகக் காட்டியுள்ளார்.
- நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “பரிவின்றி வாணனைக் காத்துமென்று அன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப் பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்து அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே” என்று காட்டியுள்ளார்.
- திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் இந்தச் சரித்ரத்தை “சூழ்கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய் மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் என்னை இது விளைத்த ஈரிரண்டு மால்வரைத் தோள் மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் கன்னி தன் பால் வைக்க மற்றவனோடு எத்தனையோ மன்னிய பேரின்பம் எய்தினாள்” என்று மிக அழகாகக் காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- இதர தேவதைகளை நம்பி எம்பெருமானை எதிர்த்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பதுதான் ஏற்படும். ஆகையால் எம்பெருமானிடத்தில் மட்டும் பக்தி கொண்டு வாழ்ச்சியைப் பெறுதல் சிறந்தது.
- தேவதைகள் எம்பெருமானுடைய பெருமையை அறிந்திருந்தும் கூட ரஜோ தமோ குணங்கள் தலையெடுக்கும்போது எம்பெருமானையே எதிர்க்கத் துணிகிறார்கள். தவறை உணர்ந்து பின்பு எம்பெருமானிடத்தில் மன்னிப்பும் கேட்கிறார்கள்.
- எம்பெருமான் முன்பே ப்ரஹ்லாதனிடத்தில் அவன் வம்சத்தவர்களைக் கொல்லப்போவதில்லை என்று வாக்குக் கொடுத்திருந்ததாலும், உஷை தந்தையை இழந்து வாடக்கூடாது என்பதாலும் வாணனைக் கொல்லாமல் அவன் ஆயிரம் தோள்களில் நான்கை விட்டு மற்றவற்றை வெட்டினான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org