ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< பௌண்ட்ரக வாஸுதேவன் மற்றும் சீமாலிகன் வதம்
கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் ஸாம்பன். இவன் துர்யோதனனின் பெண்ணான லக்ஷ்மணாவை அவளுடைய ஸ்வயம்வரத்தின்போது கவர்ந்து சென்றான். இதைக் கண்ட கௌரவர்கள் மிகவும் கோபம் கொண்டு பெரும்படையோடு ஸாம்பனைத் தாக்க வந்தார்கள். தனியொருவனாக இருந்து அப்படை கலங்கும்படி ஸாம்பன் யுத்தம் செய்தான். இறுதியில் எப்படியோ அனைவரும் சேர்ந்து ஸாம்பனைச் சிறைபிடித்தார்கள். இதைக் கேட்ட பலராமன் துர்யோதனாதிகளிடத்தில் சென்று ஸாம்பனை விடுவிக்கும்படி அறிவுறுத்தினான். அவர்களோ ஆணவத்தோடு பேச, பலராமன் கோபம் கொண்டு அவர்களை அழிக்கப் போக, கடைசியில் அவர்கள் பயந்துபோய் பலராமனைச் சரணடைந்தார்கள். பிறகு துர்யோதனன் தன் பெண்ணை ஸாம்பனுக்குத் திருமணம் செய்து வைத்து, பல பரிசுப் பொருட்களையும் கொடுத்து அனுப்புகிறான்.
ஒரு முறை நாரதர் த்வாரகைக்குச் செல்கிறார். த்வாரகை மிக அழகான நகரம். அங்கே தோட்டங்களும், ஏரிகளும், பல விதமான பக்ஷிகளும், மலர்களும், மாடங்களும் மாளிகைகளும் நிறைந்து காணப்பட்டன, கண்ணன் எம்பெருமான் பதினாறாயிரத்து நூற்றெட்டு தர்மபத்னிகளுக்கும் ஒவ்வொரு மாளிகையை அமைத்துக் கொடுத்து, தானும் ஒவ்வொரு மாளிகையிலும் ஒவ்வொரு திருமேனியை எடுத்துக் கொண்டு அவர்களோடும் தன்னுடைய குழந்தைகளோடும் க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டித்து வந்தான். கண்ணனுக்கு ஒவ்வொரு தர்மபத்னியிடத்திலும் பத்து ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் பிறந்ததாகச் சொல்லுவார்கள்.
நாரதர் த்வாரகையில் ஒவ்வொரு மாளிகையாகச் செல்லத் தொடங்கினார். முதலில் பட்ட மஹிஷியான ருக்மிணியின் இடத்துக்குச் செல்ல, அங்கே ருக்மிணிப் பிராட்டி கண்ணனுக்கு அழகாகத் தொண்டு செய்து கொண்டிருந்தாள். நாரதரை கண்டவுடன் ஓடிவந்து அவருடைய பாதங்களை விளக்கினான். அவருக்கு உபசாரங்கள் எல்லாம் செய்தான். அதற்குப் பிறகு அங்கிருந்து விடைபெற்று அடுத்த இடத்துக்குச் செல்ல, அங்கு தன்னுடைய தர்மபத்னியுடனும் உத்தவருடனும் விளையாடிக்கொண்டிருந்தான். ஒன்றுமறியாதாப்போலே, நாரதரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்தான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். ஓரிடத்தில் குதிரையேற்றம் செய்து கொண்டிருந்தான். மற்றோரிடத்தில் அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தான். மற்றோரிடத்தில் வேட்டையாடச் சென்று கொணிருந்தான். மற்றோரிடத்தில் ப்ராஹ்மணர்களை வணங்கிக்கொண்டிருந்தான். இவற்றை கண்ட நாரதர் கண்ணனின் மாயையை அனுபவித்து பேரானந்தத்தை அடைந்தார்.
பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்று எம்பெருமான் த்வாரகையில் இருந்த இருப்பைக் காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமான் பரமபுருஷனாக இருப்பதால் அவனைக் கணவனாக அடைய விரும்பிய பலரை க்ருஷ்ணாவதாரத்தில் திருக்கல்யாணம் செய்து கொண்டு, அவர்களோடே இருந்து க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டித்தான். அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தான்.
- ஸ்ரீகீதையில் அவனே சொல்லியபடி, எம்பெருமானுக்கு இவ்வுலகில் வந்து அவதரிக்கும்போது இந்த தர்மங்களை அனுஷ்டிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பதற்காக எல்லா தர்மங்களையும் முறையாக அனுஷ்டிக்கிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org