க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 43 – ஜராஸந்த வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< த்வாரகையில் இருப்பு மற்றும் நாரதரின் மகிழ்ச்சி

ஒரு முறை நாரதர் த்வாரகைக்கு வந்தார். கண்ணன் அவரை முன்னே வந்து வரவேற்று, வணங்கி அவருக்கு உபசாரங்கள் செய்தான். அவர் எல்லா இடங்களுக்கும் போகக் கூடியவர் ஆகையால் அவரிடத்தில் “பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டான். அவரும் “இப்பொழுது பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் ராஜஸூய யாகத்தைப் பண்ண விரும்புகிறான்” என்றார். அங்கிருந்த யாதவர்கள் ஜராஸந்தனை அழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்பொழுது கண்ணன் தன் மந்த்ரியான உத்தவனிடத்தில் என்ன செய்வது என்று யோஜனை கேட்க, உத்தவனும் “முதலில் ஜராஸந்தன் போன்ற பெரிய எதிரிகளை வீழ்த்திவிட்டு ராஜஸூய யாகத்தைப் பண்ணலாம்” என்றான். கண்ணனும் உடனே புறப்பட்டு இந்த்ரப்ரஸ்தத்துக்குச் சென்றான். அங்கே பாண்டவர்கள் அவனை ஆசையோடே வரவேற்றார்கள். அவர்களுடன் சில மாதங்கள் ஆனந்தமாக இருந்தான்.

ஒரு முறை பாண்டவர்களின் ராஜ ஸபையில் கண்ணனும் வீற்றிருந்தான். அப்பொழுது யுதிஷ்டிரன் தனக்கு ராஜஸூய யாகம் பண்ணுவதில் விருப்பமுள்ளதைத் தெரிவிக்க, கண்ணனும் அதை ஆமோதிக்க, யுதிஷ்டிரன் முதலில் எல்லாத் திசைகளிலும் தன் தம்பிகளை அனுப்பிப் பல ராஜாக்களை ஜயித்து நிறைய செல்வங்களைக் கொண்டு வரும்படி செய்தான். அதற்குப் பிறகு ஜராஸந்தனை எப்படி ஜயிப்பது என்று ஆலோசித்தார்கள். கண்ணன் அப்பொழுது ஜராஸந்தன் ப்ராஹ்மணர்களை மதிப்பவன் என்றும் அதன் மூலம் அவனை வீழ்த்தலாம் என்றும் சொன்னான். அதாவது பெரும்படையோடு அவனை ஜயிக்கமுடியாது என்பதால் அவனைத் தனியே யுத்தத்துக்கு அழைத்து ஜயிக்கப் பார்த்தார்கள். கண்ணன், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ப்ராஹ்மண வேடம் அணிந்து ஜராஸந்தன் இருந்த இடத்துக்குச் சென்றனர். அவனை நன்றாகக் கொண்டாடினர். அவனும் “நீங்கள் வேண்டுவதைக் கொடுக்கிறேன்” என்றான். கண்ணன் எங்களில் ஒருவரோடு நீ தனியே யுத்தம் பண்ண வேண்டும் என்று சொல்ல, அவன் அவர்கள் ப்ராஹ்மணர் அல்ல என்பதை அறிந்து அவர்கள் யார் என்று கேட்டான். தங்கள் உண்மை உருவை வெளிப்படுத்த, அவன் தான் பீமனோடு மட்டுமே யுத்தம் செய்வேன் என்று சொன்னான்.

யுத்தமும் தொடங்கியது. மிகவும் வேகத்தோடு இருவரும் இரு மலைகள் போலே மோதிக்கொண்டனர். வெகு நேரம் யுத்தம் நடந்தது. அப்பொழுது கண்ணன் பீமன் பார்க்கும்போது கையில் ஒரு புல்லை எடுத்து அதை இரண்டாகக் கீறி இரு புறமும் எறிந்தான். பீமனும் அந்த யோஜனையைப் புரிந்து கொண்டு, ஜராஸந்தனின் இரண்டு கால்களைப் பிடித்து, அவன் உடம்பை இரண்டாகக் கிழித்து வீசினான். இவ்வாறு ஜராஸந்தனும் கொல்லப்பட்ட பிறகு, கண்ணன் அவன் பிள்ளையை அந்நாட்டுக்கு ராஜாவாக ஆக்கினான். கண்ணன் ஜராஸந்தனால் சிறை வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ராஜாக்களை விடுவித்தான். பிறகு இந்த்ரப்ரஸ்த்தத்துக்குத் திரும்பி, யுதிஷ்டிரனிடம் இந்த இன்பச்செய்தியைச் சொன்னார்கள். அதைக்கேட்டு மகிழ்ந்த யுதிஷ்டிரன் ராஜஸூய யாகத்துக்கு ஏற்பாடுகளைத் தொடங்கினான்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்குப் பூர்வாசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களில் பல இடங்களில் எம்பெருமானை எப்பொழுதும் நினைப்பது, அணுகுவது ஆகியவற்றைச் சொல்லும்போது, காலயவனன், ஜராஸந்தன் போன்றவர்களைப் போல் அழிப்பதற்காக அல்லாமல், தொண்டு செய்வதற்காக அணுக வேண்டும் என்கிறார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் க்ருஷ்ண பக்தியில்லை என்றால் அது வீண்தான்.
  • ராஜஸூய யாகம் செய்தவர்களைச் சக்ரவர்த்திகளாக உலகம் கொண்டாடும். அதற்காக யுதிஷ்டிரன் யாகம் செய்தான்.
  • தன்னுடைய பக்தர்களான பாண்டவர்களுக்குக் கண்ணன் மந்த்ரியாகவும், நண்பனாகவும் மேலும் பல விதத்திலும் உதவுகிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment