ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கௌரவர்கள் ஸபையில் மேலே நடந்ததைத் தொடர்ந்து இப்போது அனுபவிக்கலாம்.
கண்ணன் தூதனாக வரும்போது அவனுக்கு நிறைய செல்வத்தைக் கொடுத்து அவனை நம் பக்கம் சேர்க்கலாம் என்று த்ருதராஷ்ட்ரன் நினைக்கிறான். அது தவறு என்பதைப் பின்பு புரிந்து கொள்கிறான்.
துர்யோதனன் கண்ணன் வரவை அறிந்திருந்ததால் அவனுக்கு ஒரு பொய்யாஸனத்தை இட்டு, அதன் கீழே ஒரு பெரிய அறையையும் கட்டி, அந்த ஆஸனத்தில் கண்ணனை அமரவைத்துக் கீழே தள்ளி அவனைச் சிறை பிடிக்கலாம் என்று நினைத்தான். அதற்காக அந்த ஆஸனத்தின் கீழ் இருந்த அறையில் மல்லர்களை நிறுத்தியிருந்தான். கண்ணனும் அவ்வாஸனத்தில் அமர்ந்தவுடன் கீழ் நோக்கிச் செல்ல, அங்கிருந்து விச்வரூபத்தை எடுத்துக் காட்டி, அனைவரையும் அஞ்சச் செய்தான்.
அதற்குப் பிறகு த்ருதராஷ்ட்ரனிடத்தில் ஸமாதானம் பேசத் தொடங்கினான் கண்ணன். ராஜ்யத்தை ஆள உண்மையான தகுதி பெற்றவன் யுதிஷ்டிரன் என்றும், தாற்காலிகமாக நாட்டை ஆண்ட த்ருதராஷ்ட்ரன் அதைத் துறக்க வேண்டும் என்றும் சொன்னான். துர்யோதனனோ அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றும் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தில் அதிகாரம் கிடையாது என்றும் சொன்னான். கண்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து க்ராமமாவது கொடுத்தால் அவர்கள் த்ருப்தியாக இருப்பார்கள் என்று சொன்னான். துர்யோதனன் அதுவும் கொடுக்க முடியாது என்றும் ஒரு சின்ன இடம் கூட அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் சொன்னான். அதைக் கேட்ட கண்ணன் “அப்படியென்றால் யுத்தமே இதற்கு வழி” என்று சொல்ல துர்யோதனனும் “ஆமாம். நாங்களும் யுத்தத்துக்குத் தயார்” என்று சொன்னான்.
விதுரர் துர்யோதனனுக்கு “கண்ணனிடம் இப்படி எல்லாம் பேசுவதும் பாண்டவர்களுக்கான உரிமையை மறுப்பதும் தவறு” என்று நல்ல அறிவுரை கூற, துர்யோதனன் கோபமுற்று விதுரரை இழிவாகப் பேச, விதுரர் மிகவும் வருந்தி “இப்படிப்பட்ட அதர்ம நிலையில் இருப்பவர்களோடு நான் இருக்க மாட்டேன். இந்த யுத்தத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய விஷ்ணு தனுஸ்ஸை உடைத்தெறிந்தார். விதுரர் யுத்தத்தில் துர்யோதனனுக்கு ஆதரவாக இருந்திருந்தால், அது பாண்டவர்களுக்குப் பேராபத்தாக இருந்திருக்கும்.
இவ்வாறு தான் தூது சென்று யுத்தம் நடப்பதை கண்ணன் உறுதி செய்தான்.
எம்பெருமான் இவ்வாறு தூது சென்ற விஷயத்தை ஆழ்வார்கள் பல இடங்களில் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “செற்றெழுந்து தீவிழித்துச் சென்ற இந்த ஏழுலகும்” என்ற இடத்தின் வ்யாக்யானத்தில் நம்பிள்ளை இது கண்ணன் துர்யோதனனின் ஸபையில் எடுத்த விச்வரூபத்தைக் குறிக்கும் என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “தூது சென்றாய்! குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய்சுற்றம் பேசிச் சென்று பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய்! திருமாலிருஞ்சோலை எந்தாய்!” – கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நான் பொதுவானவன் என்று எம்பெருமான் சொல்லிக்கொண்டு, தூது போய், அவர்களுக்கிடையில் யுத்தத்தை விளைத்து, துர்யோதனாதிகளை அழித்தான் என்று காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மாமேனி அண்டம் ஊடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்” என்று எம்பெருமான் துர்யோதனனின் ஸபையில் விச்வரூபம் எடுத்ததைக் காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமானை அடக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று நினைப்பவர்களை அவர்கள் எதிர்பாராத வகைகளால் எம்பெருமான் எளிதாக ஜயித்து விடுகிறான்.
- எம்பெருமான் ஒரு ஸங்கல்பம் செய்து விட்டான் என்றால் அதை எப்படியாவது செய்து முடிக்கக் கூடியவன். அவனுடைய திருவுள்ளக் கருத்தைத் தடுக்கவோ மீறவோ யாராலும் முடியாது.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org