ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
எம்பெருமான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த பிறகு, யுத்தமானது தொடங்கியது. பற்பல சிறந்த வீரர்கள் பங்கு பெற்ற ஒரு மிகப் பெரிய போராக அது அமைந்தது. இந்த யுத்தம் மொத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகலிலே யுத்தம் இரவிலே ஓய்வு என்ற கணக்கில் இந்த யுத்தம் செய்ய்ப்பட்டது.
பாண்டவர்கள் ஸேனைக்கு த்ருஷ்டத்யும்னன் ஸேனாதிபதியாக இருந்து வழி நடத்தினான். கௌரவர்கள் ஸேனைக்கு பீஷ்மர் ஸேனாதிபதியாக இருந்து வழி நடத்தினார்.
கண்ணன் எம்பெருமானே பாண்டவர்களுக்கு உற்ற துணையாக இருந்து அவர்களை எல்லா விதத்திலும் காத்தான். தன்னுடைய தேரோட்டும் ஸாமர்த்யத்தைக் கொண்டே அர்ஜுனனைப் பல ஸமயங்களில் பெரும் ஆபத்துக்களில் இருந்து காத்தான். பகதத்தன் போன்றோர் விட்ட அம்புகளை அர்ஜுனன் மீது படாமல் தன் மார்பில் ஏற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு நாளும் போரில் சிற்சில பெரிய வீரர்கள் மடிந்தார்கள். பீஷ்மரின் பலமோ ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. யுத்தத்தில் ஒரு நாள் பீஷ்மர் மிகவும் ஆக்ரோஷமாக அர்ஜுனனைத் தாக்கத் தொடங்கினார். அர்ஜுனனுக்கு ஓரளவுக்கு மேல் அவருடைய பலத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த ஸமயத்தில் கண்ணனுக்கு பீஷ்மரிடத்தில் மிகவும் கோபம் ஏற்பட்டது. அவன் தன் தேரில் இருந்து குதித்து தேர்ச் சக்கரத்தை கையில் ஏந்திக் கொண்டு பீஷ்மரைத் தாக்கச் சென்றான். அதைக் கண்ட பீஷ்மர் மிகவும் ஆனந்தம் அடைந்து கண்ணனைக் கண்டு “தாமரை இலை போன்ற கண்ணை உடையவனே! வா! என்னை வந்து தாக்கு” என்று அழைத்தார். அதன் பிறகு கண்ணன் தன் கோபத்தைத் தணித்துக் கொண்டான்.
இதன் பிறகு பத்தாம் நாள் யுத்தத்தில் சிகண்டியின் துணையைக் கொண்டு பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். பீஷ்மரால் முன் காலத்தில் கவர்ந்து செல்லப்பட்ட அம்பா என்பவள் அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்தாள். பின்பு ஒரு யக்ஷனின் உதவியால் ஆணாக ஆனாள். அவளை முன்னிறுத்தி பீஷ்மருடன் அர்ஜுனன் யுத்தம் பண்ண, ஒரு பெண்ணோடு யுத்தம் பண்ண மாட்டேன் என்று சொல்லி பீஷ்மர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டார். அதன் பின்பு அர்ஜுனன் அம்பு மழை கொண்டு அவரை வீழ்த்தி, அவரை ஒரு அம்புப் படுக்கையில் இருக்கும்படி செய்தான். அவருக்கு இருந்த வரத்தால், தான் இஷ்டப்பட்ட அன்று உயிரை விடக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தார். கண்ணனின் திருவுள்ளத்தால் பாண்டவர்களுக்கு இவரால் ஸஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது. அதை அடுத்த பகுதியால் காணலாம்.
ஆழ்வார்கள் பல பாசுரங்களில் மஹாபாரத யுத்தத்தை விளக்கியுள்ளார்கள்.
- பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் “ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம்போர்” என்று காட்டியுள்ளார். - நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த எந்தாய்” என்று காட்டியுள்ளார்.
- பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்” என்று காட்டியுள்ளார்.
- திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “பன்னிய பாரம் பார்மகட்கு ஒழியப் பாரத மாபெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடுந்திண் தேர் மைத்துனற்கு உய்த்த மாமாயன்” என்று காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- தன்னுடைய வாக்குப் பொய்த்தாலும் தன் பக்தனின் வாக்கை மெய்யாக்க வேண்டும் என்பது எம்பெருமானின் திருவுள்ளம். தான் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் பண்ணியிருந்தாலும், பீஷ்மர் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று செய்த சபதத்தை எம்பெருமான் உண்மையாக்கினான்.
- மொத்த யுத்தத்தையும் தேரை நடத்தியே ஜயித்து விட்டான் எம்பெருமான். ஆனால் அதன் பெருமை அர்ஜுனனுக்கு வரும்படிச் செய்தான்.
- அர்ஜுனனுக்கு வந்த ஆபத்தைத் தன் திருமுகத்திலும், திருத்தோளிலும், திருமார்பிலும் ஏற்றுக் கொண்டு அர்ஜுனனைக் காத்தான். பார்த்தஸாரதியாக அர்ச்சாரூபத்திலும் இன்றும் எம்பெருமான் பெரிதும் போற்றப்படுகிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org