க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 57 – பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< மஹாபாரத யுத்தம் – பகுதி 3

யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. கண்ணன் எம்பெருமானே முன்னின்று இந்தப் பட்டாபிஷேகத்தைச் செய்து வைத்து, த்ரௌபதி மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு எல்லா விதமான மங்களங்களையும் மீண்டும் ஏற்படுத்தினான்.

அபிமன்யூவின் மனைவியான உத்தரை யுத்தம் நடந்த காலத்தில் கருவுற்றிருந்தாள். பாண்டவர்களிடத்தில் தீராத கோபம் கொண்டிருந்த அச்வத்தாமா பாண்டவர்களின் வம்சத்துக்கே ஒரு விளக்காகத் தோன்ற இருக்கும் அந்தக் குழந்தையைக் கருவிலேயே கொன்றுவிடும் க்ரூர எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவன் அந்தக் குழந்தையை நோக்கி அபாண்டவாஸ்த்ரத்தை (ப்ரஹ்மாஸ்த்ரம் என்றும் சொல்லுவார்கள்) எய்தான். அந்த அஸ்த்ரம் உத்தரையின் கர்பத்துக்குள் சென்று அந்தக் குழந்தையை அழித்து, வெளியே ஒரு கரிக்கட்டையாக வந்து விழும்படி பண்ணியது.

அப்போது உத்தரை கண்ணனிடத்தில் ப்ரார்த்திக்க, கண்ணன் தன் திருவடிகளாலே அந்தக் குழந்தையை முழுவதுமாகத் தீண்ட, அந்தக் குழந்தை மீண்டும் உயிர்பெற்றது. அந்தக் குழந்தையே பிற்காலத்தில் சிறந்து விளங்கிய பரீக்ஷித்து என்கிற ராஜா. கண்ணனின் திருவடி ஸ்பர்சத்தாலே உயிர் பெற்றதால் கண்ணனிடத்திலே சிறந்த பக்தி கொண்டிருந்தான் இவன்.

யுதிஷ்டிரன் சில காலம் ராஜ்யத்தை ஆண்ட பிறகு பரீக்ஷித்துக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து தான் ஸ்வர்கத்தை நோக்கிச் சென்று விட்டான். அவன் தம்பிகளும் த்ரௌபதியும் அவனைப் பின் தொடர்ந்து சென்று விட்டனர்.

அதற்குப் பின் பரீக்ஷித்து மிகவும் தர்ம சிந்தனையோடு ராஜ்யத்தை ஆண்டான். இவன் ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச் செல்லும்போது மிகவும் பசி/தாஹத்தால், ஒரு ரிஷியின் ஆச்ரமத்தில் ரிஷியிடத்தில் உணவு கேட்க, அவர் த்யானத்தில் இருந்ததால் இவனுக்குப் பதில் சொல்லாமல் இருக்க, அதனாலே கோபப்பட்டு அவர் கழுத்தில் ஒரு பாம்பை மாலையாகப் போட்டுவிட்டு, அங்கிருந்து வந்துவிடுகிறான். அதைக் கண்ட ரிஷிபுத்ரன், இப்படிச் செய்தவன் ஒரு வாரத்துக்குள் பாம்பால் கடிபட்டு மாண்டுபோவான் என்று சபிக்க, அதைக் கண்ட ரிஷி, தன்னுடைய தபோபலத்தால் நடந்ததை அறிந்து, “பரீக்ஷித்து நல்லவன் அவன் தெரியாமல் செய்த தவறுக்கு இப்படிச் சாபம் கொடுத்தாயே” என்று தன் புத்ரனைக் கண்டித்தார். பிறகு பரீக்ஷித்துக்கு நடந்தது தெரிய வர, அவன் மிகவும் வருந்தி “நாம் இருக்கும் இந்த ஒரு வாரத்தை நல்ல முறையில் செலவிட வேண்டும்” என்று பார்த்து, உடனே தன் பிள்ளையாஅன ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்தான். தான் காட்டில் ரிஷிகளைத் தேடிச் சென்று அவர்களைச் சந்தித்தான். அப்போது அங்கே வ்யாஸரின் புத்ரரான சுகரும் வர, அவரிடத்தில் அடிபணிந்து கண்ணனின் சரித்ரத்தை ஏழு நாட்களும் உணவு, தூக்கம் முதலிய வெளிவிஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் முழுமையாக ஸ்ரீ பாகவத்தின் மூலம் கேட்டு, இறுதியில் நற்கதி அடைந்தான்.

ஆழ்வார்களில் பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் பரீக்ஷித்து கண்ணனால் ரக்ஷிக்கப்பட்டதைக் “மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு” என்றும் “உத்தரை தன் சிறுவனையும் உய்யக்கொண்ட உயிராளன்” என்றும் காட்டியுள்ளார்,

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் பாண்டவர்களுக்கு மட்டும் அருள் புரியாமல், அவர்கள் வம்சத்துக்கும் அருள் புரிந்தான். எம்பெருமானின் அடியார்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடிக்கே அருள் புரிவான் என்பதற்கு இது முக்யமான உதாரணம்.
  • நமக்கு மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆகையால் இருக்கும் ஸமயத்தை பகவத் விஷயத்தில் செலவிடுவதே சிறந்தது என்பதை பரீக்ஷித்து செய்து காட்டினான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment