க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 58 – வைதிக புத்ரர்களை மீட்கை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம்

கண்ணன் எம்பெருமான் எப்படி ஒரு வைதிகன் புத்ரர்களை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மீட்டுக் கொடுத்தான் என்னும் சரித்ரத்தை இப்போது அனுபவிக்கலாம்.

ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் கண்ணனின் திருமாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஒரு ப்ராஹ்மணர் மிகவும் வருத்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் “எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொன்றும் பிறந்தவுடன் காணாமல் போய்விட்டன. இப்போது என் தர்மபத்னிக்கு ப்ரஸவம் ஆகப்போகிறது. இந்தப் பிள்ளையை நீ தான் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். கண்ணன் அப்போது ஒரு யாக தீக்ஷையில் இருந்தான். அதனால் அர்ஜுனன் தான் போய் இந்தக் கார்யத்தை முடித்து வருவதாகச் சொல்லி, அந்த ப்ராஹ்மணரையும் ப்ரஸவ க்ருஹத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே அந்த இடத்தைச் சுற்றிலும் தன் அம்புகளைக் கொண்டு ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினான். அந்தக் குழந்தை பிறந்தவுடன் அழுகுரல் கேட்டது. ஆனால் முன்புபோலே குழந்தை காணாமல் போய்விட, அந்த ப்ராஹ்மணர் அர்ஜுனனை மிகவும் கடிந்து கொண்டார். அவனையும் அழைத்துக் கொண்டு கண்ணன் முன்பு போய், “கண்ணா! நீயே வந்திருக்கலாமே. இவனை அனுப்பி இவனால் நான் மீண்டும் என் குழந்தையை இழந்தேன்” என்று சொன்னார்.

கண்ணன் உடனே அவர்கள் இருவரையும் அழைத்துத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, தேரை மேல் நோக்கி நடத்தினான். பூமிக்கு மேலே இருக்கும் லோகங்களைக் கடந்து, அண்டத்துக்கு வெளியில் வந்து, ஸப்தாவரணங்களைக் கடந்து, விரஜைக்கரையை அடைந்தான். அர்ஜுனனையும் ப்ராஹ்மணரையும் தேரிலேயே இருத்திவிட்டு, தான் மட்டும் இறங்கி, விரஜா நதியைக் கடந்து சென்று, பரமபதத்தை அடைந்து, தன் பெரியதான மணி மண்டபத்தை அடைந்து, அங்கே பிராட்டிமார்கள் இந்த நாலு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்க, அவர்களிடத்தில் இருந்து அக்குழந்தைகளை மீட்டான். அவர்கள் கண்ணனைத் தங்களிடம் வரவழைப்பதற்காகச் செய்த லீலை என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு, தான் அக்குழந்தைகளுடன் வெளியே வந்து, அர்ஜுனனையும் ப்ராஹ்மணரையும் த்வாரகைக்கு அழைத்து வந்தான். ப்ராஹ்மணரும் தான் இழந்த குழந்தைகளை அப்படியே திரும்பப் பெற்றதனால் மிகவும் மகிழ்ந்தார். இந்தச் செயலைக் கண்ணன் எம்பெருமான் தான் காலை அனுஷ்டானங்களை முடித்த பிறகு மதிய அனுஷ்டானங்களைத் தொடங்குவதற்கு முன்பு செய்து கொடுத்தான்.

இந்தச் சரித்ரம் ஸ்ரீ பாகவதத்தில் சற்று வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளது. இது யுக பேதத்தால், அதாவது மீண்டும் மீண்டும் இது போன்ற சரித்ரங்கள் பல சதுர் யுகங்களில் நடப்பதால், அதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கலாம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

ஆழ்வார்கள் இந்தச் சரித்ரத்தை தங்கள் பாசுரங்களில் அழகாக விளக்கியுள்ளார்கள்.

  • பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பனூர்” என்று காட்டியுள்ளார்.
  • நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச் சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே” என்று விளக்கியுள்ளார்,
  • திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “வேத வாய் மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின் சரண், என்னுடைய மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்றழைப்ப ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்றிவர் என்று கொடுத்தாய்” என்று விளக்கியுள்ளார்,

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • விரஜைக் கரை வரை அர்ஜுனனையும் ப்ராஹ்மணரையும் அழைத்துச் சென்ற எம்பெருமான், தான் மட்டும் விரஜையைக் கடந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு உள்ளே சென்றான். ஏனெனில், அங்கே சென்றால் மீண்டும் இவ்வுலகிற்கு அவர்களால் வர முடியாது என்பதால். அவன் எல்லா இடத்துக்கும் செல்லக்கூடிய சக்தி படைத்தவன். ஆனால் இவ்வுலகத்தவர்கள் அப்படிச் செய்ய முடியாது.
  • பெரிய பிராட்டியார் தான் கண்ணனை உள்ளபடி காணவேண்டும் என்ற ஆசையால் அவனை வரவழைக்க இப்படி ஒரு லீலையைச் செய்தாள். அவள் விருப்பத்தினால் அந்தக் குழந்தைகள் ஸ்ரீவைகுண்டத்துக்குள் சென்றனர். பின்பு அவள் கண்ணனைக் கண்டபின்பு, அந்த ப்ராஹ்மணர் கேட்டுக்கொண்டபடி, அவர்களை எம்பெருமான் மீட்டுக் கொண்டு வந்தான். இது அவனுடைய ஸ்வாதந்த்ர்யத்தின் செயல். சாஸ்த்ரத்தில் அங்குச் சென்றவர்கள் இங்கு மீண்டு வரமாட்டார்கள் என்றிருந்தாலும், எம்பெருமான் இதைத் தன்னுடைய இச்சையால் செய்தான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment