ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமான் இவ்வுலகில் நூறாண்டுகள் இருந்து பலருக்கும் தன்னுடைய அனுக்ரஹத்தைக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் தன்னுடைச்சோதியான திருநாட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அவன் எவ்வாறு பரமபதத்துக்குச் சென்றான் என்பதை இப்போது அனுபவிக்கலாம்.
மஹாபாரத யுத்தம் முடிந்த பின்பு த்ருதராஷ்ட்ரனின் தர்மபத்னியான காந்தாரி தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்படி அழிவு ஏற்பட்டதோ அதே போல யாதவ குலத்துக்கும் அழிவு ஏற்படும் என்று சாபம் கொடுத்தாள். கண்ணனும் அதை ஏற்றுக் கொள்கிறான். கண்ணன் தான் பரமபதத்துக்கு எழுந்தருள நினைத்தபோது முதலில் அதன் தாக்கம் யாதவ குலத்தில் தெரிகிறது. யாதவர்கள் அனைவரும் அக்காலத்தில் தர்மத்தை மறந்து உலக இன்பங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஒரு முறை சில ரிஷிகள் வரும்போது ஸாம்பனின் வயிற்றில் ஓர் உலக்கையைக் கட்டி, ரிஷிகளிடத்தில் கேலியாக இவனுக்கு என்ன பிள்ளை பிறக்கும் என்று கேட்க, ரிஷிகள் கோபம் கொண்டு, “இவனுக்கு ஒரு உலக்கை பிறக்கும், அதனாலே உங்கள் குலம் அழியும்” என்று சாபம் கொடுத்தார்கள். பீதியடைந்த அவர்கள், உடனே அந்த உலக்கையைப் பொடி செய்து கடலிலே தூவ, அத்துளிகள் கோரைப் புற்களாக முளைத்தன. அதில் ஒரு துரும்பு ஒரு மீனாலே விழுங்கப்பட்டு அந்த மீனுக்குள் இருந்த அந்தக் கூர்மையான துரும்பு ஜரன் என்ற வேடனிடத்தில் சென்று சேர்ந்தது.
இங்கே த்வாரகையில் தீய சகுனங்கள் தெரிந்தன. கண்ணன் அனைவரும் அங்கிருந்து வெளியேறுவது நன்று என்று சொல்ல, அங்கிருந்து ஒவ்வொருவராகப் புறப்பட்டனர். அந்த ஸமயத்தில் யாதவர்கள் மதுபானம் பண்ணி மிகவும் மயங்கியிருந்ததால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அதில பெரும்பாலனவர்கள் அங்கிருந்த கோரைப்புற்களைக் கொண்டு அடித்துக்கொண்டு மாண்டனர். சிலர் பலராமனைத் தாக்க வர, கண்ணனும் பலராமனுமாக அவர்களையும் அழித்தனர். பலராமன் த்யானத்தில் அமர்ந்து, அப்படியே பரமபதத்தைச் சென்றடைந்தான். கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு ப்ராபாஸ தீர்த்தம் என்ற இடத்தை அடைந்து அமைதியாக த்யானிக்கத் தொடங்கினான். அப்போது அங்கே வந்த ஜரன் கண்ணன் அமர்ந்திருந்த நிலையை தூரத்தில் இருந்து கண்டு, அவனுடைய திருவடிகளை ஒரு மானின் தலையாகப் புரிந்து கொண்டு, அதை நோக்கி அந்தக் கூர்மையான துரும்பை முனையில் கொண்டிருந்த அம்பை அடித்து கண்ணன் திருவடியில் கட்டை விரலில் தைக்கும்படிச் செய்தான். அருகில் வந்து பார்க்க, தான் தவறு செய்ததை உணர்ந்து கண்ணனிடத்தில் மன்னிப்புக் கேட்டான். ஆனால் கண்ணனோ “உன்னைக் கொண்டு என் லீலையை நான் முடித்துச் செல்கிறேன்” என்று சொல்லி, தன் திவ்ய திருமேனியோடு, அப்போதே பரமபதத்துக்கு எழுந்தருளினான். எம்பெருமான் பரமபதத்துக்கு எழுந்தருளும்போது அங்கே வந்து சேர்ந்த எம்பெருமானின் தேரோட்டியான தாருகன், எம்பெருமானைப் பிரிவதை நினைத்து மிகவும் வருந்தினான். எம்பெருமான் தன் திருவடிகளை அவன் தலையில் வைத்து அவனை ஆசீர்வதித்தான்.
அவன் அங்கிருந்து மீண்டும் த்வாரகைக்கு வந்து கண்ணன் பரமபதத்துக்குச் சென்றதை அறிவித்தான். அதைக் கேட்டு அனைவரும் மிகவும் துன்புற்றனர். பெண்கள், முதியோர் ஆகியோர்களை அர்ஜுனன் பாதுகாப்பாக த்வாரகைக்கு வெளியே அழைத்துச் சென்றான். த்வாரகையைக் கடல் சூழ்ந்து அனைத்தையும் தன்னுள் கொண்டது.
எம்பெருமான் இவ்வாறு பரமபதத்துக்குச் செல்வதை நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில் “போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி” – மஹாபாரத யுத்தம் முதலிய செயல்களைச் செய்து பூமிபாரத்தை நீக்கிய பிறகு, தன் திவ்ய லோகமான பரமபதத்துக்குச் சென்றான் என்று காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமானுடைய அவதாரம் ஏற்படுவதற்கு முக்யக் காரணம் ஆத்மாக்களை ரக்ஷிக்க வேண்டும் என்கிற அவனுடைய கருணையின் அடிப்படையில் வரும் இச்சையே. மற்ற நிகழ்வுகள் எல்லாம் வ்யாஜங்களே. அதேபோல அவன் பரமபதத்துக்குப் போவதற்கும் முக்யக் காரணம் அவன் இச்சையே. காந்தாரி சாபம், வேடன் அம்பால் அடித்தது ஆகியவை வ்யாஜங்களே.
- யாதவர்கள் எம்பெருமானுடைய பந்துக்களாக இருந்தாலும் அவர்கள் அவனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல் தேஹ ஸம்பந்தத்தை மட்டும் பார்த்தார்கள். அதனால் எம்பெருமான் அவர்களுக்கு அவனோடு இருந்து அனுபவிக்கும் வாய்ப்பைக் கொடுத்து, தக்க காலத்தில் அவர்கள் அந்த உறவோடே முடிந்து போகும்படிச் செய்தான். விதுரர், அக்ரூரர் போன்ற ஓரிருவரே அவன் உண்மைத் தன்மையை அறிந்து வாழ்ச்சி பெற்றார்கள்.
- எம்பெருமான் பரமபதத்துக்குப் போகும்போது, தன் திவ்ய திருமேனியோடே சென்றான். அவதாரங்களில் எம்பெருமானுடைய திருமேனி மனித உடலைப் போலே இருந்தாலும், அது திவ்யமான திருமேனியே.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org