ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1

நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது.

தொடர்ந்து மாமுனிகள் அருளிய அவதாரிகையைக் காண்போம். மாமுனிகள் இக்ரந்தத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் மற்றொரு வகையில் ஒன்பது ப்ரகரணங்களாகவும் காட்டியருளுகிறார்.

பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்

முதலில் ஆறு ப்ரகரண பகுப்பு

இதில், சூத்ரம் 1, “வேதார்த்தம் அறுதியிடுவது” என்பது முதல் சூத்ரம் 4, “அத்தாலே அது முற்பட்டது” என்பது வரை ப்ரமாணம் காட்டப்பட்ட்டது. ஆக இது ப்ரபந்தத்தின் முன்னுரை.

ஸூத்ரம் 5 “இதிஹாச ச்ரேஷ்டம்” என்பது முதல் ஸூத்ரம் 22, “ப்ரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” வரை குறைகள்/தோஷங்கள் நிறைந்த சேதநர்களைக் கணிசித்து பிராட்டி எம்பெருமானிடம் அவன் கருணையே பற்றாசாகக் கொண்டு அவர்கள் தோஷங்காணாமல் க்ருபை காட்டியருள வேணும் என்று புருஷகாரம் செய்வதை விளக்கி, இப்புருஷகாரத்தினும் அவனது நிர்ஹேதுக க்ருபை மேன்மை என்று காட்டுகிறார்.

ஸூத்ரம் 22 ”ப்ரபத்திக்கு” என்பதிலிருந்து ஸூத்ரம் 79 “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய:”(ஸூ.79) வரை ப்ரபத்தியின் ஸ்வரூபம், எம்பெருமானை அடைய எம்பெருமானையே உபாயமாக ஸ்வீகரிப்பது, விவரிக்கப்படுகிறது:

  • இந்த ப்ரபத்திக்கு, ப்ரபத்தி செய்பவரின் தேச, கால, க்ரம, பலம், தகுதிகள் பற்றிய யாதொரு நியமமும் இல்லை
  • யாரிடம் ப்ரபத்தி செய்கிறோமோ அவர் சக்தி உள்ளவராய் இருக்கவேண்டும்
  • ப்ரபந்நர்கள் மூவகையினர்
  • ப்ரபத்தியை எம்பெருமானை அடைய வழியாக ஏற்பதன் குறைபாடுகள் (ஜீவாத்மாவின் ஸ்வரூபத்துக்கு ஒத்த இயல்பான செயலே ப்ரபத்தி)
  • ப்ரபத்தியின் முழு ஸ்வரூபமும், அங்கங்களும்

ஆக, இப்பகுதி எம்பெருமானே உபாயம் என்று ஸ்தாபிக்கிறது. இதில் (ஸூ 70) ”ப்ராப்திக்கு உகப்பானும் அவனே” என்பதே ஸாரம். 71-79, ஒன்பது ஸூத்ரங்களும் உபாங்கம்.

”உபாயத்துக்கு” (ஸூ.80) முதல் “உபேய விரோதிகளாயிருக்கும்”(ஸூ 307) வரை தெரிவிக்கப்படும் விஷயங்களாவன – ப்ரபன்னர்களின் இயல்பும் நடத்தையும்:

  • எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று ஏற்கும் சேதனனுக்கு அவச்யம் இருக்க வேண்டிய பண்புகள்
  • பிற உபாயங்களில் பற்றை அறவே விட வேண்டியதின் அவச்யம்
  • இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியன/செய்யக் கூடாதன (க்ருத்யாக்ருத்யங்கள்)

(ஸூ 308) ”தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” முதல் (ஸூ 365) “உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்” வரை  சிஷ்ய லக்ஷணம் (சிஷ்யன் ஆசார்யனிடம் எப்படி இருக்க வேண்டும்)  விவரிக்கப்படுகின்றது:

  • ஸித்தமாக நித்யமான உபாயமாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானை முழுமையாக உபாயமாகப் பற்றின ஸித்தோபாய நிஷ்டர் இயல்பு
  • உண்மை ஆசார்யரின் இயல்பு
  • உண்மை சிஷ்யரின் இயல்பும் அவர் ஆசார்யரை முழுமையாகச் சார்ந்திருப்பதும்
  • ஆசார்யர் சிஷ்யர் இடையிலேயான பரிமாற்றங்கள்
  • உஜ்ஜீவனத்துக்கு உதவிய ஆசார்யரிடம் சிஷ்யரின் நன்றி உணர்வு

(ஸூ 366) ”ஸ்வதோஷானுஸந்தானம் பய ஹேது” முதல்  (ஸூ  406) ”நிவர்த்தக ஞானம் அபய ஹேது ” வரை எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை விவரிக்கப்படுகிறது. இந்த நிர்ஹேதுக க்ருபையினாலே ஒருவன் எம்பெருமானிடம் அத்வேஷம் முதல் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யக் கூடிய பல நிலைகளை அடைகிறான். மீளாத் துயரத்தில் இருக்கும் ஒருவன் உஜ்ஜீவனத்தைக் நிச்சயமாகக் கொடுக்கும் இந்த நிர்ஹேதுக க்ருபையைக் கண்டே சாந்தி அடைகிறான்.

(ஸூ, 407) “ஸ்வதந்த்ரனை முதல் உபாயமாகப் பற்றின போதிறே” முதல் கடைசி ஸூத்ரம் (463) வரை ஒரு ப்ரபந்நருடைய அறுதியான நிலை, அந்திம உபாய நிஷ்டை, அதாவது ஆசார்யர் ஒருவரையே தம் உஜ்ஜீவனத்துக்கு வழியாகச் சார்ந்திருப்பது எனும் நிலை விவரிக்கப்படுகிறது. இதுவே மதுரகவி ஆழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பில் “மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்” என்ற பாசுரத்தில் வேதத்தின் ஸாரம் என்று காட்டியருளிய உபாயம்.

ஸ்ரீவசன பூஷணம் “வேதார்த்தம் அறுதியிடுவது” என்று தொடங்கி, “சரம பர்வ நிஷ்டை” யில் முடிவதால், ஆசார்ய அபிமானமே/க்ருபையே சார்ந்து நிற்கத் தக்கது என்பது வேத ஸாரம் என்று தேறும்.

ஸ்ரீகீதையில் “ஸர்வ தர்மான்  பரித்யஜ்ய” என்ற சரம ச்லோகம் போலே இதிலும் இக்கடைசிப் ப்ரகரணமே முக்கியம். அதில் கர்ம ஞான பக்தி யோகங்களைச் சொல்லி அர்ஜுனன் கலங்கியதால் எம்பெருமான் தானே உபாயம் (ஸித்தோபாயம், உடனே ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய வழி) என்று காட்டினாப்போலே, இவரும் எம்பெருமானின் ஸ்வாதந்தர்யத்தால் அஞ்சும் ப்ரபன்னனுக்கு ஆசார்யரே முழுமையாய் வழிகாட்டும் துணை என்கிறார்.

இவ்வாறு ஆறு ப்ரகரணங்களில் இந்நூல் பகுப்பு விளக்கப்பட்டது.

இனி இந்நூல் ஒன்பது ப்ரகரணங்களில் பகுக்கப்படுவது காணலாம். இந்த யோஜனையை மாமுனிகள் அருளிச்செய்யும் முறை:

அவதாரிகையும் புருஷகார/உபாய வைபவமும் முன் பகுப்பில் போன்றே 1 முதல் 22 வரையிலான ஸூத்ரங்களின் பொருளாம்.

பின்னர் (ஸூ.23) ”ப்ரபத்திக்கு” முதல் (ஸூ.114) “பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும்” என்பது வரை எம்பெருமானே உபாயம் என்பது விளக்கப்படுகிறது.

(ஸூ.115) ”ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கு” முதல், (ஸூ 141) ”கையாலே சுக ரூபமாயிருக்கும்” என்பதுவரை ப்ரபத்தி ஒழிந்த மற்ற உபாயங்களின் குறைகளைக் காட்டுகிறார். இதில் ப்ரபத்தியின் பெருமை சொல்வது ஓர் அங்கம்.

(ஸூ 142) ”இவனைப் பெற நினைக்கும்போது” முதல் (ஸூ 242) ”இடைச்சியாய்ப் பெற்றுவிடுதல் செய்யும்படியாய் இருக்கும்” வரை ஸித்தோபாயபநிஷ்டர் (எம்பெருமானைப் பெற எம்பெருமானே ஸித்தமாய் இருக்கிறான் என நம்பும் ப்ரபன்னர்) பெருமை விளக்கப்படுகிறது.

(ஸூ 243) ”இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும்” முதல் (ஸூ 307)”உபேய விரோதிகளாய் இருக்கும்” என்பது வரை ப்ரபந்ந திநசர்யை (ப்ரபந்நருடைய அன்றாட வாழ்க்கை ஆசாரம்) விளக்கப்படுகிறது.

(ஸூ.308) ”தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” முதல் (ஸூ.320) “சேதனனுடைய ருசியாலே வருகையாலே” வரை ஸதாசார்ய லக்ஷணம் (நல்ல ஆசார்யனுடைய இலக்கணம்) சொல்லப்படுகிறது.

(ஸூ 321) ”சிஷ்யன் என்பது” முதல் (ஸூ 365) “உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்” என்பது வரை ஸச்சிஷ்ய லக்ஷணம் (நல்ல சிஷ்யன் இலக்கணம்) சொல்லப்படுகிறது.

(ஸூ 366) ”ஸ்வதோஷானுஸந்தானம்” முதல் (ஸூ 406) ”நிவர்த்தக ஞானம் அபய ஹேது” என்பது வரை எம்பெருமான் தன நிர்ஹேதுக கிருபையால் ஜீவாத்மாவை ஸம்ஸாரத்தில் இருந்து தூக்கி விடுவது சொல்லப்படுகிறது.

(ஸூ 407)”ஸ்வதந்த்ரனை” என்பது முதல் இறுதி ஸூத்ரம் 463 வரை ஆசார்யன் உபாயம்(வழி), உபேயம்(அடையும் இறுதிப்பலன்) என்று தெரிவிக்கப் படுகிறது.

இவ்விரு பகுப்புகளாலும், “பேறு தருவிக்குமவள் பெருமை” தனியனும், “திருமாமகள்தன் பெருமையும்” தனியனும் காட்டியபடி  முறையே ஆறு ப்ரகரணங்களாகவும் ஒன்பது ப்ரகரணங்களாகவும் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரம் பகுக்கப் படக் கூடியதை விளக்கும். ஆக இரண்டு விதமான பகுப்புகளும் சரியாகப் பொருந்தும்.

ஆக மாமுனிகளின் அத்யத்புதமான ஸ்ரீவசன பூஷணத்தை இருவகையில் நிர்வஹிக்கும் அவதாரிகையை ஓரளவு கண்டோம்.

இனி பிள்ளை லோகாசார்யரின் திவ்ய சாஸ்திரத்துக்கு மாமுனிகள் அருளிய அவதாரிகையின் தொடர்ச்சியைக் காண்போம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/11/aippasi-anubhavam-pillai-lokacharyar-sri-vachana-bhushanam-2/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment