க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 20 – கோவர்த்தன லீலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ரிஷிபத்னிகள் பெற்ற பேறு

आज है गोवर्धन पूजा, जानें पूजा विधि, मुहूर्त और कथा Govardhan Puja 2020  here govardhan puja vidhi muhurat katha and importance - News Nation

கண்ணன் எம்பெருமானுக்கு ஏழு வயதானபோது அமானுஷ்யமான ஒரு அற்புத லீலையைச் செய்தான். அதை இப்பொழுது அனுபவிக்கலாம்.

ஒரு நாள் வ்ருந்தாவனத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த பெரியோர்கள் ஒன்று கூடி ஒரு விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த கண்ணன் அவர்களைப் பார்த்து “எந்த விழாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்” என்று கேட்டான். அவர்களும் “இது ஆண்டுதோறும் இந்த்ரனுக்கு ஸமர்ப்பிக்கும் விருந்து” என்றனர். கண்ணன் “ஏன் இந்த்ரனுக்கு விருந்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டான். அவர்கள் “அவன் தான் நமக்கு மழை கொடுத்து நாம் நன்றாக வாழ வழி செய்கிறான்” என்றார்கள். கண்ணன் தான் இருக்கும் தேசத்தில் உள்ளவர்கள் மற்ற தேவதைகளை வணங்குவதை விரும்பாததால் இதைத் தவிர்க்க ஒரு யோஜனை செய்தான். அவன் “நமக்கு கோவர்த்தன மலையே எல்லா விதத்திலும் உதவி செய்கிறது. மேகங்களைத் தடுத்து மழை கொடுக்கிறது, மாடு கன்றுகளுக்கு புல் கொடுக்கிறது, நமக்குக் காய் கனிகளைக் கொடுக்கிறது; ஆகையால் நாம் இந்த மலைக்கே விருந்தை அளிக்கலாம்” என்றான். அவர்களும் கண்ணன் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

விருந்துக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளில், ஊர் மக்கள் அனைவரும் வண்டி வண்டியாக உணவுப் பதார்த்தங்களை ஏற்றிக்கொண்டு வந்து கோவர்த்தன மலைக்கு முன்பாக இன்னொரு மலைபோலே குவித்தார்கள். அங்கே வந்த கண்ணன் அவர்களைக் கொண்டாடி “நீங்கள் அனைவரும் இப்பொழுது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். நான் இந்த உணவை இப்பொழுது ஸமர்ப்பிக்கிறேன்” என்று சொல்ல அவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டார்கள். கண்ணன் அப்பொழுது கோவர்த்தன மலைக்குள் புகுந்து கொண்டு, “அஹம் கோவர்த்தனோஸ்மி” (நானே கோவர்த்தன மலை) என்று சொல்லி அனைத்து உணவையும் மொத்தமாக உண்டான். கண்ணைத் திறந்த மக்களும் உணவு முழுவதும் உண்ணப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தனர்.

இதை எல்லாம் ஸ்வர்க லோகத்தில் இருந்து இந்த்ரன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு மிகப் பெரிய கோபம் ஏற்பட்டது. ஒரு இடைப் பிள்ளை பலகாலமாக நமக்கு வந்த விருந்தைத் தடுத்துவிட்டான் என்று கோபம் கொண்டு, தன் ஆளுமைக்குட்பட்ட மழை மேகங்களை ஆணையிட்டுப் பெரிய புயல் மழையை ஏவினான்.

அப்பொழுது வ்ருந்தாவனத்தைச் சுற்றிப் பெரிய மழை மேகங்கள் சூழ்ந்து பெரிய புயல் மழைப் பெய்யத் தொடங்கியது. அதைக் கண்ட இடையர் குல மக்களும், மாடு கன்றுகளும் மிகவும் பயந்து போய் கண்ணனிடத்தில் “இப்போது என் செய்வது” என்றனர். கண்ணனும் அவர்களுக்கு அபயம் அளித்து, அங்கிருந்த கோவர்த்தன மலையை எடுத்துத் தலைகீழாக ஒரு குடையைப் போலே பிடித்து நின்றான். அங்கிருந்த இடையர்கள் மற்றும் ஆனிரைகள் மேல் ஒரு துளி நீரும் விழாதபடி முழுதுமாக ரக்ஷித்தான். அங்கிருந்த இடையர்கள் எல்லாரும் கண்ணனைப் பார்த்து “நீ தேவனா? யக்ஷனா? எப்படி இத்தனை பெரிய மலையைத் தூக்கி வைத்துக் கொண்டுள்ளாய்?” என்று கேட்க, அதற்குக் கண்ணன் “நானும் ஒரு இடையனே. இதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நான் இப்பொழுதே மலையைக் கீழே வைத்துவிடுவேன்” என்று சொன்னான். அவர்களும் பயந்து “சரி. அப்படியே இருக்கட்டும்” என்றார்கள்.

இப்படி கண்ணன் எம்பெருமான் ஒரு வாரம் தன்னுடைய கைகளாலே மலையைத் தாங்கி அனைவரையும் ரக்ஷித்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இந்த்ரன் கண்ணனின் உண்மைத் தன்மையையும் தன் தவறையும் உணர்ந்து, மழையை நிறுத்தி, ஓடி வந்து எம்பெருமான் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். எம்பெருமானைக் கொண்டாடி ஸ்தோத்ரங்களைச் செய்து கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகத்தைப் பண்ணினான். இவ்வாறு இந்த்ரனின் கர்வத்தை எம்பெருமான் போக்கினான்.

இந்த லீலையைப் பல ஆழ்வார்கள் விரிவாக அனுபவித்துள்ளார்கள். பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் “அவனே அருவரையால் ஆனிரைகள் காத்தான்” என்றார். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான்” என்றார். இது தவிர “அட்டுக்குவி சோற்று” என்கிற பதிகத்தில் இந்த லீலையை விரிவாக அனுபவித்துள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “குன்றமெடுத்த பிரான் அடியாரோடும்” என்று அனுபவித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “கல்லெடுத்துக் கல் மாரி காத்தான்” என்று அனுபவித்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானை முழுவதுமாக நம்பினால் அவன் எத்தனை பெரிய கார்யத்தையும் செய்து அப்படி நம்பினவர்களை ரக்ஷிப்பான்.
  • கோவர்த்தன மலையே நமக்கு ரக்ஷகம் என்று எம்பெருமான் சொன்னதால், புயல் மழை வந்தபோதும், அந்த மலையைக் கொண்டே அங்கிருந்தவர்களை ரக்ஷித்து, அந்த வார்த்தையை உண்மையாக்கினான்.
  • எம்பெருமான் இருக்க அவனை அடிபணிந்தவர்கள் வேறு தெய்வத்தை வணங்குவதை அவன் அறவே விரும்பமாட்டான். ஆகையால் வ்ருந்தாவனத்தில் இந்த்ர வழிபாட்டை அவனே தடுத்துவிட்டான்.
  • இந்த்ரன் தேவனாக, எம்பெருமானுடைய பக்தனாக இருந்து தவறு செய்ததால், தானே அவனுக்காக மலையைத் தாங்கி, அவன் கை ஓய்ந்துபோன பின்பு, அவனே தவறை உணருமாறு செய்து, அவனை மன்னித்தான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment