க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 30 – கம்ஸ வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< மல்லர்களை ஜயித்தல்

கண்ணன் எம்பெருமான், கம்ஸன் தனக்கு அரணாக நினைத்திருந்த குவலயாபீடத்தையும் மல்லர்களையும் அழித்த பிறகு, உயரமான மேடையில் ஒரு பெரிய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்த கம்ஸன் பயந்து நடுங்கத் தொடங்கினான். எம்பெருமானோ அவனை முடிப்பதை முக்யமான குறிக்கோளாகக் கொண்டிருந்தான். இதற்காகவே தான் அவதரித்ததில் இருந்து இத்தனை நாள் காத்திருந்தான்.

கம்ஸன் உடனே தன் வீரர்களைப் பார்த்து “இவர்களை இந்த நகரத்திலிருந்து விரட்டுங்கள்; வஸுதேவரையும் உக்ரஸேனரையும் கொன்று விடுங்கள்” என்று ஆணையிட்டான். கண்ணன் வேகமாகக் கம்ஸனை நோக்கிச் சென்றான். கம்ஸன் தன் வாளை எடுத்துக் கொண்டு கண்ணனைத் தாக்கப் பார்த்தான். ஆனால் கண்ணனோ அவன் தலை மயிரைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே தள்ளி, அவன் மேலே அமர்ந்து, ஒங்கி அடித்து அவனைக் கொன்றான். கம்ஸனின் ஸஹோதரர்கள் அவனைத் தாக்க வர, கண்ணனும் பலராமனுமாக அவர்களையும் முடித்தார்கள். கம்ஸன் எப்பொழுதும் கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்ததாலும், கண்ணனின் கருணையாலும், எம்பெருமானைப் போன்ற அழகான உருவத்தைப் பெற்றான்.

ஆழ்வார்கள் கம்ஸ வதத்தைப் பல பாசுரங்களில் அனுபவித்துள்ளார்கள். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான்” என்று காட்டியுள்ளார். ஆண்டாள் நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில் “கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன்” என்று காட்டியுள்ளாள். திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்தவிருத்தத்தில் “கஞ்சனைக் கடிந்து” என்று காட்டியுள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்திங்குப் பிறந்து” என்று காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானுக்கு யாரும் எதிரிகள் இல்லை. ஆனால் அடியார்களுடைய எதிரிகளை அவன் தன் எதிரிகளாகப் பார்த்து அழிக்கிறான்.
  • அடியார்களுக்குத் துன்பம் கொடுத்தவர்களை, மிகவும் துன்பப்படுத்தி அவர்களை ஆதரவற்றவர்களாக ஆக்கி, அழிக்கிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment