க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 56 – மஹாபாரத யுத்தம் – பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< மஹாபாரத யுத்தம் – பகுதி 2

கண்ணன் எம்பெருமான் மிகச் சிறந்த வீரரான த்ரோணரைக் கொல்வதற்கான உபாயத்தையும் பாண்டவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். த்ரோணர் தன் புத்ரனான அச்வத்தாமாவிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர். அவன் அழிந்தான் என்றால் த்ரோணர் தன்னடையே தன் பலத்தை இழந்துவிடுவார். ஆனால் அவனோ சிரஞ்சீவி. அவனை எளிதில் அழிக்க முடியாது. ஆகையால் அச்வத்தாமன் என்ற பேர் கொண்ட யானையைக் கொன்று அதன் மூலம் த்ரோணரைக் கொல்லலாம் என்று யோசனை சொன்னான். அதன்படியே பீமன் அச்வத்தாமன் என்ற யானையைக் கொன்று அதை த்ரோணரிடத்தில் சென்று அறிவித்தான். த்ரோணர் மிகவும் கலகத்தை அடைந்தார். இருந்தாலும் யுதிஷ்டிரனைப் பார்த்து பீமன் சொல்வது உண்மையா என்று கேட்டார். யுதிஷ்டிரன் ஸத்யம் தவறாதவன் என்பதால் அவன் சொல்வதை மட்டுமே த்ரோணர் ஒத்துக்கொள்வார். யுதிஷ்டிரனும் வேறு வழியில்லாமல் “ஆம்! இது உண்மையே” என்று சொல்ல, த்ரோணர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டார். அப்போது த்ருபதனின் புத்ரனான த்ருஷ்டத்யும்னன் த்ரோணரை அடித்து வீழ்த்தினான். இவ்வாறு த்ரோணரும் மாண்டார். இதைக் கேள்விப்பட்ட அச்வத்தாமன் மிகவும் கோபமுற்று நாராயணாஸ்த்ரத்தைப் ப்ரயோகித்தான். கண்ணன் அனைவரையும் அந்த அஸ்த்ரத்தின் முன்பு வணங்கி இருக்கும்படி ஆணையிட, அந்த அஸ்த்ரம் ஒன்றும் செய்யாமல் போய்விட்டது.

அதற்குப் பிறகு, கர்ணன் ஸேனாதிபதியாக ஆனான். அவன் பாண்டவர்கள் ஸேனையைப் பல விதத்தில் நாசம் செய்தான். இது நடுவே, பீமன் துச்சாஸனனைக் கொன்று அவன் ரத்தத்தைக் கொண்டு த்ரௌபதியிடம் கொடுத்தான். அவள் அதைத் தன் கூந்தலில் தடவி தான் செய்த ஒரு சபதத்தை நிறைவு செய்தாள்.

கண்ணனின் யோசனைப்படி குந்தியும் அவன் தன்னுடைய பிள்ளை என்னும் ரஹஸ்யத்தை வெளியிட்டு, அவனைப் பாண்டவர்களைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள். அவன் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன் என்று சபதம் செய்தான். இறுதியில் அவனை அர்ஜுனன் கொன்றான்.

கடைசியில், பதினெட்டாம் நாள், பீமனும் துர்யோதனும் ஒரு பெரிய யுத்தத்தைச் செய்தார்கள். கண்ணன் துர்யோதனின் தொடையில் அடித்து அவனைக் கொல்லும்படி யோசனை சொல்ல, அவ்வாறே பீமன் துர்யோதனனைக் கொன்றான்.

அதற்குப் பிறகு, அச்வத்தாமா இரவில் பாண்டவர்கள் கூடாரத்துக்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்களை (பாண்டவர்களின் ஐந்து புத்ரர்கள்) பாண்டவர்கள் என்று நினைத்துக் கொன்றான். இவ்வாறு பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களில் சிலரைத்தவிர, பெரும்பாலும் பலரும் இந்த யுத்தத்தில் மடிந்தார்கள்.

நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “தீர்ப்பாரை யாம் இனி எங்கனம் நாடுதும்? அன்னைமீர்! ஓர்ப்பால் இவ்வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்றைவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே” என்று எம்பெருமான் எப்படி இந்த ஆச்சர்யமான யுத்தத்தைச் செய்தான் என்று காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • பாண்டவர்களுக்கு ரக்ஷகனாகவும், மந்த்ரியாகவும், தோழனாகவும் இருந்து, ஒவ்வொரு ஸமயத்திலும் தக்க யோசனைகள் சொல்லி, கண்ணன் எம்பெருமான் இந்த மஹாபாரதப் போரைப் பண்ணி பூமி பாரத்தைக் குறைத்தான்.
  • த்ரௌபதியினுடைய துக்கத்தைப் போக்குவதற்காக ஒரு பெரிய யுத்தத்தையே நடத்தினான் எம்பெருமான். அடியார்களிடத்தில் அபசாரப்பட்டால் அதற்குப் பதில் பெரிய கார்யங்களை எம்பெருமான் செய்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment