ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2
எம்பார் ஒரு ராத்ரி திருவீதியிலே குணானுபவத்துடனே உலாவியருளா நிற்க, பட்டர் பார்த்தருள, எம்பாரை ஸேவித்து – ஆசார்யத்வமும் த்விவிதமாய், தத்விஷய ஸ்வீகாரமும் த்விவிதமாயன்றோ இருப்பது; எதிலே தேவரீர் அறுதியிட்டிருப்பதென்ன. எம்பாரும் – க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யனே முக்யன்; பரகத ஸ்வீகாரமே பேற்றுக்கு உடல். இவை இரண்டையும் நான் எம்பெருமானாரிடத்திலே அறுதியிட்டிருப்பன். நீரும் ‘பெருமாள் நம்மை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளினார்: ஆழ்வானுடைய பிள்ளை; ஸகல வித்யைகளை அப்யஸித்தோம்; நமக்கென்ன குறை’ என்று இருமாந்திராதே என்னைப் போலே எம்பெருமானாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணி அவரே உத்தாரகரென்று நினைத்திரும் என்று அருளிச் செய்தார்.
பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.
ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.
“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.
“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.
எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.
வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.
நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org