ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
க்ருஷ்ண லீலைகளை மிக அழகாக யசோதைப் பிராட்டியின் பாவனையில் அனுபவித்து அவற்றை நமக்கு அற்புதமான பாசுரங்களாக அளித்தவர் பெரியாழ்வார். தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில் பல பதிகங்களில் கண்ணன் எம்பெருமானின் பல பல சேஷ்டிதங்களை விரிவாக அனுபவித்து அருளியுள்ளார்.
பெரியாழ்வார் திருமொழியில் “வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே” என்று தொடங்கி எம்பெருமானின் பிறப்பை அங்குள்ளவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதைத் தத்ரூபமாக நம் கண் முன்னே காட்டுகிறார். மேலும்
- தங்கள் தலைவரான ஸ்ரீ நந்தகோபருக்கும் யசோதைப் பிராட்டிக்கும் ஒரு குழந்தை பிறந்ததைக் கண்ட இடையர்கள் அதை மிகவும் ஆனந்தமாக வண்ணக் கலவையை ஒருவர் ஒருவர் மீது பீய்ச்சி அடித்தும், ஆடியும், பாடியும் கொண்டாடினார்கள்.
- அவ்வூரில் உள்ள கோபியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து கண்ணனைத் தங்கள் கையிலே எடுத்து வைத்துக் கொஞ்சினார்கள். அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது.
- ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், மற்ற தேவர்கள் என்று பலரும் கண்ணனுக்குப் பல பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
- நிலவைப் பார்ப்பது, யசோதையின் முதுகில் சாய்ந்து ஆடுவது, கை தட்டி ரஸிப்பது, குப்புறத் தவழ்வது, தத்தித் தத்தி நடப்பது, தாய்ப்பால் குடிப்பது, காது குத்தல், குளிப்பது, தலை வாருதல், பூச்சுட்டல், காப்பிடல் (த்ருஷ்டி கழிப்பது), வெண்ணெய் திருடி அகப்படுவது, பல அஸுரர்களை அழிப்பது, குழல் ஊதுவது, மாடு கன்றுகளை மேய்ப்பது, கோபியர்களுடன் ராஸக்ரீடை செய்வது
என்று இப்படிப்பட்ட பல நிகழ்வுகளை ஆழ்வார் காட்டியுள்ளார். மற்றைய ஆழ்வார்களும் கண்ணன் எம்பெருமானுடைய பிறப்பையும் லீலைகளையும் விரிவாக அனுபவித்துள்ளனர்.
கண்ணன் வெண்ணெய், நெய், பால், தயிர் ஆகிய பதார்த்தங்களை மிகவும் விரும்பினான். நம்மாழ்வார், கண்ணன் வெண்ணெய் திருடி அகப்பட்டுக்கொண்ட சரித்ரத்தை நினைத்து ஆறு மாத காலம் மயங்கிக் கிடந்தார். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகராழ்வார் ஆகியோர் கோபிகை பாவனையில், கண்ணனிடத்தில் ஊடல் திறத்தைத் தங்கள் பாசுரங்களில் நன்றாக அனுபவித்தனர். ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களும் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டிருந்தனர்.
க்ருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கும்பொழுதும் அர்ச்சாவதார எம்பெருமான்களுடன் சேர்த்தே ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அனுபவித்தனர். விபவாவதாரத்தை அனுபவிக்க முடியாமல் இழந்தவர்களுக்கு அதன் ப்ரதிநிதியாகவே அர்ச்சாவதாரம் கொண்டாடப்படுகிறது.
மேலே எம்பெருமானின் ஒவ்வொரு லீலையாக எடுத்து அவ்வவ லீலைகளின் தாத்பர்யத்தோடு சேர்த்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org