ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணனும் பலராமனும் நன்றாகத் தவழத் தொடங்கினார்கள். தவழ்ந்து தவழ்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்று புழுதியில் விளையாடி அந்தப் புழுதியோடு வந்து தங்கள் தாய்மார்களான யசோதைப் பிராட்டி மற்றும் ரோஹிணிப் பிராட்டி ஆகியோரின் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டு அவர்களிடத்தில் அழகாகப் பால் குடிப்பார்கள் இருவரும்.
பொதுவாகவே இடையர் குடியில் குளிப்பது முதலான ஆசாரங்கள் சற்றுக் குறைவாகவே இருக்கும். எம்பெருமானோ ஆயர் தலைவன். ஆகையால் அந்த ஆசாரங்களை அறவே விட்டிருப்பான். அவனை நீராடப் பண்ணுவதற்குள் யசோதைப் பிராட்டிக்கு மிகவும் ச்ரமம் ஏற்பட்டுவிடும். பெரியாழ்வார் திருமொழியில் நீராட்டலுக்காகவே “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” என்கிற ஒரு பதிகம் முழுக்க எம்பெருமானை நீராடப் பண்ணுவதை யசோதைப் பிராட்டி பாவனையில் பெரியாழ்வார் அருளியுள்ளார்.
இப்படிச் சில காலங்களுக்குப் பிறகு கண்ணன் எம்பெருமான் எழுந்து நடக்கவும் தொடங்கினான். அப்பொழுதில் இருந்து எம்பெருமானின் தீம்புகள் தொடங்கப்பட்டன. பெண்களின் மயிர் முடிகளைப் பற்றி இழுப்பது, அவர்கள் வஸ்த்ரங்களை இழுப்பது, வெண்ணெய் திருடுவது, பானைகளை உடைப்பது, மாடு கன்றுகளைச் சீண்டுவது என்று எப்பொழுதும் ஏதாவது தீம்பு செய்தவனாகவே இருந்தான்.
ஒரு முறை குழந்தைகள் எல்லாரும் மண் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, கண்ணன் மண்ணை எடுத்துத் தின்றான். அப்பொழுது அங்கிருந்த குழந்தைகள் எல்லாரும் யசோதைப் பிராட்டியிடம் வந்து முறையிட்டார்கள். அதைக் கேட்ட யசோதை கண்ணனிடம் கோபத்துடன் வேகமாக வந்து “ஏன் மண்ணைத் தின்றாய்?” என்று கேட்டாள். அவனோ “நன் அப்படிச் செய்யவே இல்லை என்றான்”. அவள் “எங்கே வாயைத் திற. நானே பார்க்கிறேன்” என்றாள். அவன் தன் தாயைச் சற்று கலங்கும்படிச் செய்ய நினைத்தான். தன் வாயைத் திறந்து, அதிலே எல்லா உலகங்களையும், தன்னையும், யசோதையையும் எல்லாவற்றையும் காட்டினான். அதைக் கண்ட யசோதை கலக்கமுற்று, மற்ற இடைப் பெண்களையும் அழைத்துக் காட்டினாள். அவர்களும் அந்த ஆச்சயமான தரிசனத்திக் கண்டு கலக்கமுற்றார்கள். ஆயினும் ஒரு க்ஷணத்தில், அதை எல்லாம் மறைத்து, அவர்களையும் அந்தக் காட்சியை மறக்கும்படிச் செய்தான். இந்தச் சரித்ரத்தை பெரியாழ்வார் “வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே” என்று அனுபவித்தார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமான் க்ருஷ்ணாவதாரத்தில் தன்னுடைய எளிமையையும் மேன்மையையும் சேர்த்துக் காண்பித்தான்.
- எம்பெருமான் தன்னுடைய அடியார்களிடத்தில் மாயச் செயல்களைச் செய்து அதனால் தான் மிகவும் ஆனந்தம் அடைகிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org