ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமான் அகாஸுரனைக் கொன்றதை அனைத்து தேவர்களும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதைக் கேள்வியுற்ற ப்ரஹ்மா உடனே இங்கே வந்து அங்கு நடந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். பொதுவாக எம்பெருமானிடத்தில் பக்தி கொண்டிருக்கும் ப்ரஹ்மா அப்பொழுது தமோ குணம் தலையெடுக்க, கண்ணனிடத்தில் பொறாமை கொண்டார். “இது என்ன ஒரு சிறு பிள்ளைக்கு இப்படி ஒரு கொண்டாட்டம்” என்று எண்ணினார். எப்படியாவது கண்ணனைக் கஷ்டப் படுத்தி அவனுடைய ஆனந்தத்தைக் குலைக்க வேண்டும் என்று நினைத்தார்.
கண்ணனும் மற்ற இடைப்பிள்ளைகளும் மதிய நேரம் ஆனதால் தங்கள் உணவை உண்ணலாம் என்று அமர்ந்தார்கள். அப்பொழுது அவர்கள் அழைத்து வந்திருந்த கன்றுகளை அங்கே காணவில்லை. ப்ரஹ்மா முதலிலே அந்தக் கன்றுகளை எடுத்து மறைத்து வைத்து விட்டார். கண்ணன் அந்தப் பிள்ளைகளிடம் நீங்கள் உணவை உண்ணுங்கள் நான் சென்று கன்றுகளைப் பிடித்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். அவ்வேளையிலே ப்ரஹ்மா அந்தப் பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு மறைந்தார். இதை எல்லாம் அறிந்த கண்ணன், உடனே தன்னையே எல்லாக் கன்றுகளாகவும், இடைப் பிள்ளைகளாகவும் பெருக்கிக் கொண்டு சற்று நேரம் காட்டில் இருந்துவிட்டு, பின்பு ஊருக்குத் திரும்பிவிட்டான்.
கண்ணனே கன்றுகளாகவும் இடைப்பிள்ளைகளாகவும் உருவத்தை எடுத்துக் கொண்டதால், கன்றுகளைக் கண்ட தாய்ப் பசுக்களும், பிள்ளைகளைக் கண்ட பெற்றோர்களும், அவர்களிடத்தில் தங்களை அறியாமலே மிகவும் அன்பைப் பொழியத் தொடங்கினர். இவ்வாறு சில காலம் சென்றது. இதைக் கண்ட பலராமனும், இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று சிந்தித்து தன்னுடைய ஞானத்தினால் நடந்தவற்றை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தான்.
இதற்கிடையில் ப்ரஹ்மா தன் ஸத்யலோகத்தில் இருந்து இங்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி உற்றார். தன்னிடத்தில் கன்றுகளும் பிள்ளைகளும் இருக்க, இங்கோ அவைகளும் அவர்களும் கண்ணனுக்கு இன்னும் பன்மடங்கு ஆனந்தத்தைக் கொடுத்து அனுபவித்து வருவதைக் கண்டார். கன்றுகளும் பிள்ளைகளும் விஷ்ணுவைப் போலே அவருக்குத் தெரிந்தனர். மீண்டும் ஸத்வ குணம் தலையெடுக்கத் தன் தவறை உணர்ந்தார். உடனே கண்ணனைத் தேடி அங்கிருந்து ஓடி வந்து, எம்பெருமான் திருவடிகளிலே நன்றாக விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டு, பின்பு எம்பெருமானைக் கொண்டாடினார். எம்பெருமானும் ப்ரஹ்மாவின் கர்வம் நீங்கியதால் அவரை மன்னித்தான். பின்பு ப்ரஹ்மா கன்றுகளையும் பிள்ளைகளையும் திருப்பிக் கொடுக்க கண்ணன் தன் உருவங்களை மறைத்துக் கொண்டான். இப்படி எம்பெருமான் தன் பெருங்கருணையாலே ப்ரஹ்மாவின் கர்வத்தை அடக்கினான்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் கர்வம் ஏற்பட்டது என்றால் உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழக்கூடும். ஆகையால் அடக்கத்தை வளர்த்துக் கொள்வது சிறந்தது.
- எம்பெருமான் எல்லாரிடத்துலும் பிதா புத்ர (தந்தை பிள்ளை) ஸம்பந்தத்தை உடையவன் ஆகையாலே எந்த ஆத்மா தவறு செய்தாலும் அதைப் பெரிது படுத்தாமல், தவறை உணர்த்தி, திருத்தி ஏற்றுக் கொள்கிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org