ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை
கண்ணன் எம்பெருமானும் நம்பிமூத்தபிரானும் (பலராமனும்) தங்களுடைய நண்பர்களுடன் காட்டில் விளையாடுவதை மிகவும் விரும்பிச் செய்தார்கள். ஒரு முறை அவ்வாறு அவர்கள் காட்டில் இருந்தபோது, அவர்களுடைய தோழர்களான இடைப்பிள்ளைகள் அருகிலே ஒரு தால வனம் (பனந்தோப்பு) இருப்பதாகவும், அங்கு நிறைய இனிய பழங்கள் இருப்பதாகவும், ஆனால் அங்கே தேனுகாஸுரன் என்கிற கழுதை வடிவு கொண்ட ஒரு அஸுரன் தொந்தரவு பண்ணுவதையும் சொன்னார்கள். இந்த தேனுகன் கண்ணனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். இவனும் கம்ஸனால் ஏவப்பட்ட ஓர் அஸுரன். கண்ணன் வரும்பொழுது கொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.
இதை அறிந்த உடன் கண்ணனும் பலராமனும் உடனே தாலவனத்துக்குச் சென்றார்கள். பலராமன் அங்கே உள்ள பழம் நிறைந்த மரங்களை நன்றாகக் குலுக்கினான். மரங்களில் இருந்து பழங்கள் உதிரத் தொடங்கின. அந்த ஓசையைக் கேட்ட தேனுகாஸுரன் உடனே பலராமனை நோக்கி ஓடி வந்தான். பலராமன் உடனே தேனுகாஸுரனின் பின்னங்கால்களைப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி அடித்தான். மரத்தின் மேல் சென்று மோதி மாண்டு வீழ்ந்தான். மேலும் சில அஸுரர்களும் வந்து சண்டையிட, கண்ணணும் பலராமனும் சேர்ந்து அவர்கள் அனைவரையும் கொன்றார்கள்.
இந்தச் சரித்ரத்தை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் கண்ணன் எம்பெருமானே தேனுகனைக் கொன்றதாகக் காட்டியுள்ளனர். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்ட” என்றும் ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழியில் “காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே” என்றும் அனுபவித்துள்ளனர். மேலும் திருமழிசை ஆழ்வார் இந்த தேனுகாஸுர வதத்தை திருச்சந்தவிருத்தம் 80ஆம் பாசுரத்தில் விளக்கமாகக் காட்டியுள்ளார் – “வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன் நாசமாகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லை ஆக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கலால் அமரர் ஆகலாகுமே?” என்று அருளியுள்ளார். இதனுடைய கருத்து – தேனுகாஸுரனை அழித்த கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஆசை கொள்வதைத் தவிரை முக்தி அடைவதற்கு வேறு வழியில்லை என்பது.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமானை அழிக்க எத்தனை விதமாக முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும்.
- எம்பெருமானுடைய துணை இருந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org