க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 14 – காளிங்க நர்த்தனம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< தேனுகாஸுர வதம்

யமுனைக் கரையிலே ஒரு மடுவில் காளியன்/காளிங்கன் என்று ஒரு நாகம் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அது ஒரு தீய எண்ணம் கொண்ட ஜந்துவாக இருந்தது. தொடர்ந்து கொடிய விஷத்தைக் கக்கி அந்த மடுவுக்கு அருகில் யாரும் வர முடியாதபடி செய்து கொண்டு இருந்தது. அப்படி யாராவது அங்கே வந்தால், அந்த விஷக் காற்றினால் மயங்கி விழுந்தனர். ஆநிரைகளுக்கும் அதே நிலை. மரம் செடி கொடிகளும் வாடிப்போயின. இதைக் கண்ட கண்ணன் எம்பெருமான் காளியனை அடக்க நினைத்தான்.

ஒரு நாள் பலராமனிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் தான் மட்டும் காளியன் இருந்த மடுக்கரைக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு கடம்ப மரத்தின் மேலேறி நேரே மடுவுக்குள் இருந்த காளியன் தலை மேலே குதித்தான். அதன் தலையிலே நன்றாக நடனமாடி அதை நையப் புடைத்தான். காளியனுக்கு மூச்சு முட்டி, விழிகள் பிதுங்கி மிகவும் துன்பப்பட்டது. அதைக் கண்டு காளியனின் மனைவிகள் அனைவரும் வந்து கண்ணனைத் துதித்துப் பாடி, வணங்கி எம்பெருமானிடத்தில் மன்னிப்புக் கேட்டன. காளியனும் தன் தவறை உணர்ந்து எம்பெருமானிடத்தில் மன்னிப்புக் கேட்டது. எம்பெருமான் காளியனைப் பார்த்து “இனி நீ இங்கு இருக்கக் கூடாது. கடலுக்குச் சென்று விடு” என்று ஆணையிட்டான். காளியனும் அவ்வாறே செய்தது.

இந்தச் சரித்ரத்தை ஆழ்வார்கள் பல இடங்களில் அனுபவித்துள்ளார்கள். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற” என்று விரிவாக அனுபவித்துளார். ஆண்டாள் நச்சியார் தன் நச்சியார் திருமொழியில் “நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக்
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்” என்று அனுபவித்துள்ளாள். குலசேகராழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “காலால் காளியன் தலை மிதித்ததும்” என்று அனுபவித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற” என்று அனுபவித்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எதிரிகளை அழிக்கும் இடத்தில் தனியொருவனாக அழித்து விடக் கூடிய சக்தியை உடையவன் எம்பெருமான்.
  • தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கொடுப்பது மட்டும் அல்லாமல், தவறை உணர்ந்தால் அவர்களுக்கு மன்னிப்பும் கொடுப்பான் எம்பெருமான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment