க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 17 – குழல் ஊதுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< மாடு கன்றுகளை மேய்த்தல்

WhatsApp Image 2023-09-22 at 9.58.47 AM

எம்பெருமானின் மிகவும் ப்ரஸித்தமான ஒரு லீலை குழல் ஊதுதல். கண்ணன் என்றவுடன் அனைவரும் புல்லாங்குழலை நினைக்கும் அளவுக்கு, எப்பொழுதும் தன் கையிலோ இடுப்பிலோ குழலை வைத்திருப்பான் எம்பெருமான். பொதுவாகவே இடையர்கள் கையில் குழலை வைத்திருப்பார்கள். புல்லாங்குழலை ஊதி இரண்டு கார்யங்களை எம்பெருமான் முடித்துக் கொள்வான். ஒன்று, மாடு மேய்க்கும்பொழுது அகலச் சென்ற மாடு கன்றுகளைத் தன் குழலோசையைக் கொண்டு அருகில் அழைத்துக் கொள்வான். இரண்டு, அதே குழலோசையைக் கொண்டு வ்ருந்தாவனத்தில் இருக்கும் கோபிகைகளைத் தன்னிடம் அழைத்துக் கொள்வான்.

பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “நாவலம் பெரிய தீவு” என்னும் அற்புதப் பதிகத்தில் கண்ணன் எம்பெருமான் குழலூதுவதை மிகவும் அழகாக வர்ணித்துள்ளார். அப்படியே நம் மனக்கண் முன்பு, கண்ணன் குழலூதுவதையும், அப்பொழுது அவன் தன் தோளைச் சற்றே சாய்த்துக்கொண்டு இருப்பதையும், அந்தக் குழலோசையைக் கேட்டு இடைப்பெண்கள் அனைவரும் தங்கள் தடைகளை மீறி அவனிடத்தில் வந்து சேர்வதையும், அவன் குழலோசையைக் கேட்டு தேவப்பெண்களான ரம்பை முதலியோர் தங்கள் ஆடலை மறந்து மயங்கியதையும், நாரதர் முதலானோர் தங்கள் இசைக்கருவிகளை வாசிப்பதை மறந்து இதைக் கேட்டதையும், பறவைக் கூட்டங்கள் மெய்மறந்து நின்றதையும், மான், பசு முதலான மிருகங்கள் தங்கள் உணவை மறந்து கீழே அமர்ந்து இருந்ததையும், மரங்களில் இருந்து தேன் பாய்வதையும், அவற்றின் கிளைகள் தாழ்ந்து நிற்பதையும் மிகவும் ஈடுபட்டு வர்ணித்துள்ளார்.

குலசேகராழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்” என்றருளிசெய்தார். பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில் “கோவலனாய் ஆனிரைகள் மேய்த்துக் குழல் ஊதி” என்றருளிச்செய்தார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கேயத் தீங்குழல் ஊதிற்றும்” என்றருளிச்செய்தார். இப்படி ஏனைய ஆழ்வார்களும் கண்ணன் கூழலூதும் வைபவத்தை வர்ணித்துள்ளார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • கண்ணன் நேரே பேசுவதைக் காட்டிலும் குழலை வாசிப்பது சிறப்பாகச் சொல்லப்பட்டது. குழல் இங்கே ஆசார்யன் ஸ்தானத்தில் காட்டப்படுகிறது. அதாவது, ஆசார்யன் மூலமாக எம்பெருமானை அனுபவிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
  • எம்பெருமான் தன் கருணையைப் பொழிந்தான் என்றால் அவன் விஷயத்தில் ஞானிகள், அஜ்ஞானிகள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் என்று வித்யாஸம் இல்லாமல் உருகும்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment