க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 21 – ராஸ க்ரீடை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< கோவர்த்தன லீலை

Lord Krishna With Many Women Rasa Kreeda Why – Ramanisblog

கண்ணனின் லீலைகளில் மற்றொரு முக்யமான லீலை கோபிகைகளுடன் சேர்ந்து ராஸ க்ரீடை செய்தது. ராஸ க்ரீடை என்பது, இரவில் நிலவின் ஒளியில் கை கோர்த்துக் கொண்டு உல்லாஸமாக ஆடி மகிழ்வது.

ஒரு நாள் இரவில் கண்ணன் காட்டில் இருந்து கொண்டு குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழல் ஓசையைக் கேட்ட கோபிகைகள் பலரும் தாங்கள் பண்ணிக் கொண்டிருந்த காரியங்களை விட்டுவிட்டு கண்ணனைத் தேடி ஓடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் கண்ணனிடத்தில் “நாம் எல்லாரும் சேர்ந்து ராஸ க்ரீடை செய்வோம். உன்னுடன் கைகோர்த்துக் கொண்டு ஆடி அனுபவிக்கவேண்டும்” என்று வேண்டினார்கள். முதலில் கண்ணன் அதற்கு இசையவில்லை. அவன் “நீங்கள் இப்படி உங்கள் கடமைகளை விட்டு இங்கே ஓடி வந்துள்ளீர்கள். இது சரியல்ல. நீங்கள் உடனே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான். அவர்களோ இதைக் கேட்டு மிகவும் வருந்தி அழத் தொடங்கினார்கள். அவர்கள் “எங்களுக்கு எங்கள் குடும்பத்தை விட நீயே எல்லாம். எல்லா தேவதைகளாலும் செல்வத்தைக் கொடுப்பவள் என்று விரும்பி வேண்டப்படும் லக்ஷ்மியே உன்னை எப்பொழுதும் பிரியாமல் இருந்து உன்னை அனுபவிக்கவே ஆசைப்படுகிறாள். உனக்குத் துணையாய் இருந்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுப்பதே எங்களுக்கு விருப்பம்” என்றார்கள்.

கண்ணனும் இசைந்து அவர்களோடே ஆடலாம் என்று தொடங்கினான். தானே பல உருவங்களை எடுத்துக் கொண்டு, ஒரு கோபிகை ஒரு கண்ணன் மீண்டும் ஒரு கோபிகை ஒரு கண்ணன் என்று இப்படி ஆனந்தமாக ஆடினார்கள்.

கண்ணனுடன் கூடி ஆடியதால் அவர்களுக்கு ஆனந்தம் அதிகமாகத் தொடங்கியது (கர்வம் அதிமாகத் தொடங்கியது என்றும் சொல்வார்கள்). ஒரு வேளை இந்த ஆனந்தத்தை இவர்களால் தாங்க முடியாமல் இவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் என்ன செய்ய என்று பார்த்து, எம்பெருமான் தன்னை மறைத்துக் கொண்டான். திடீரேன்று கண்ணன் மறைந்ததால் கோபிகைகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அவர்களைப் பெரிய வருத்தமானது சூழ்ந்தது. அந்த இடைப் பெண்கள் காடு முழுவதும் எம்பெருமானைத் தேடினார்கள். அங்கிருக்கும் மரங்களை அழைத்து எம்பெருமானைக் கண்டாயா என்று கேட்டார்கள். பின்பு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். ஒரு கோபிகை “நாம் கண்ணனுடைய பிரிவைத் தாங்கிக் கொள்வதற்காக க்ருஷ்ண லீலைகளை நடித்துப் பார்க்கலாம். அப்பொழுது நமக்கு இந்தப் பிரிவுத் துயரம் தெரியாது” என்று சொன்னாள். உடனே ஒரு பெண் பூதனையாகக் கீழே படுத்துக் கொள்ள, மற்றொரு பெண் கண்ணனாக அவள் பாலைக் குடித்துக் கொல்வதைப் போலே நடித்தாள். ஒரு பெண் வத்ஸாஸுரனாகவும், ஒரு பெண் கபித்தாஸுரனாகவும் ஒரு பெண் கண்ணனாகவும் நடித்தார்கள். ஒரு பெண் காளியனாகவும் மற்றொரு பெண் கண்ணனாகவும் நடித்தார்கள். இவ்வாறு தங்களை ஒருவாறு தரித்துக் கொண்டு கண்ணனை மேலும் தேடினார்கள். அப்பொழுது கண்ணன் மற்றும் ஒரு பெண்ணின் காலடித் தடங்கள் தெரிய அதைப் பார்த்து அவர்கள் “கண்ணன் யாரோ ஒரு கோபிகையுடன் சென்று விட்டான்” என்று நினைத்து வருந்தினார்கள். கண்ணனைப் பிரிந்து, கதறி அழுது, மிகவும் வருந்திப் பாடினார்கள்.

அதற்குப் பிறகு கண்ணன் அவர்களுக்கு நடுவே தோன்றி அவர்களை ஸமாதானப்படுத்தினான். பின்னர் அப்பெண்களுடன் ஆனந்தமாகப் பேசி, மீண்டும் அவர்களுடன் முன்பு போலவே பல உருவங்களை எடுத்துக் கொண்டு ஆடினான். இந்த அற்புத ஆட்டத்தைக் கண்டு தேவர்கள் எல்லாரும் மனம் மகிழ்ந்தனர். வெகு நேரம் ஆடிக் களைப்படைந்த எம்பெருமான் யமுனை நதியில் முழுகி அந்தப் கோபிகைகளுடன் நன்றாக ஜல க்ரீடை (நீர் விளையாட்டு) பண்ணினான்.

இவ்வாறு எம்பெருமானுடைய ராஸ க்ரீடை மிகவும் அற்புதமாக நடந்தேறியது.

ஆழ்வார்கள் இந்த லீலையைக் குரவைக் கூத்து என்று சொல்லி அனுபவிக்கிறார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “அரவம் அடல் வேழம்” என்று தொடங்கி “குரவை குட … கோத்தாடி” என்று அனுபவித்துள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் க்ருஷ்ண லீலைகள விரிவாக அனுபவிக்கும் இடத்தில் “குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்” என்று தொடங்கி அனுபவித்துள்ளார். குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “குன்றினால் குடை கவித்ததும் கோலக் குரவை கோத்ததுவும்” என்று அனுபவித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “பேய்த் தாயை” என்று தொடங்கி “குரவை முன்னே கோத்தானை” என்று அனுபவித்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • இந்த ராஸ க்ரீடை என்பது ஆணும் பெண்ணும் கொள்ளக் கூடிய உலகியல் காமம் இல்லை. இது ஜீவாத்மா மற்றும் பரமாத்மா சேர்ந்து அனுபவிக்கும் ஆத்ம ஸுகம்.
  • இன்பமோ துன்பமோ ஓரளவுக்கு மேலே போனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால்தான் எம்பெருமான் கோபிகைகளுக்குப் பார்த்துப் பார்த்து, அவர்கள் பொறுக்கப் பொறுக்க அனுபவத்தை கொடுத்தான்.
  • எம்பெருமான் குழலோசையைக் கேட்டு வெளியே வரப்பார்த்த சிந்தயந்தி என்கிற கோபிகை, தன் வீட்டுக் கூடத்தில் சில பெரியோர்கள் இருக்க, அவர்களுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருந்து வருந்த, அப்பொழுது ஏற்பட்ட பெரிய வருத்தத்தாலே தன்னுடைய பாபத்தை எல்லாம் தொலைத்து, குழலோசையை அனுபவித்ததாலே புண்யத்தை எல்லாம் தொலைத்து, புண்ய பாபங்கள் தீர்ந்ததனால் உடனே ப்ராணன் நீங்கிப் பரமபதத்தை அடைந்தாள்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment