க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 25 – கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< நப்பின்னைப் பிராட்டி

The Hare Krsnas - Krsna's Later Pastimes with Demons - The Demon Kamsa

கண்ணன் எம்பெருமானை அழித்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்த கம்ஸன் பல அஸுரர்களை அனுப்பினான். ஆனால், அனைத்து அஸுரர்களும் கண்ணனால் அழிக்கப்பட்டு, கம்ஸனுக்கு ஏமாற்றமும் பயமுமே மிஞ்சியது.

சிறந்த விஷ்ணு பக்தரான நாரதர் கம்ஸனுடைய ஸபைக்குச் சென்றார். கம்ஸனிடத்தில் “உன்னை அழிக்கப் போகும் கண்ணனும் பலராமனும் வ்ருந்தாவனத்தில் ஸுகமாக வாழ்ந்து வருகிறார்கள். உனக்கு அழிவு நெருங்கி விட்டது” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன் மிகவும் கோபமடைந்தான். முன்பே அசரீரியின் வாக்காலே பயந்திருந்தவன், நாரதரின் உறுதியான பேச்சைக் கேட்டு மேலும் கோபத்தையும் பயத்தையும் அடைந்தான்.

கண்ணனை எப்படி வீழ்த்துவது என்பதைப் பற்றி யோஜித்து ஒரு வில் விழாவை நடத்தி, அதற்குக் கண்ணனை வரவழைத்து, அவனை எப்படியாவது கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டினான். குவலயாபீடம் என்னும் யானை, சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்கள் ஆகியோர்களைக் கொண்டு கண்ணனை முடித்து விடலாம் என்று நினைத்தான். அப்படி அவன் அவர்களுக்குத் தப்பினாலும் தானே அவனைக் கொன்று அது ஏதோ எதிர்பாராமல் நடந்ததைப் போலே இருக்கட்டும் என்று நினைத்தான். தன்னிடத்தில் வேலை செய்து வந்த அக்ரூரரை அழைத்து கண்ணனையும் பலராமனையும் அழைத்து வருமாறு அனுப்பினான். இவனோ இரவு முழுக்கக் கண்ணனை நினைத்து பயந்து தூக்கம் வராமல் தவித்தான்.

இந்தச் சரித்ரத்தை பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன்” என்று அருளிச்செய்துள்ளார். ஆண்டாள் தன் திருப்பாவையில் “தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே” என்று விளக்கமாகக் காட்டியுள்ளாள். அதாவது எம்பெருமான் மறைந்து வாழ்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ளா முடியாமல் அவனுக்குத் தீங்குகளை நினைத்த கம்ஸனுக்கு அவனுடைய வயிற்றில் நெருப்பைப் போலே நின்ற ஸர்வேச்வரன் என்று அர்த்தம்.

அக்ரூரரோ எம்பெருமானிடத்தில் முழுக்க பக்தி கொண்டவர். இந்தப் பாவியான கம்ஸனின் முகத்தில் விழிக்காமல் மறுநாள் காலை கண்ணனைக் காணும் பாக்யம் பெறப் போவதை நினைத்துப் பேரானந்தம் கொண்டு, கண்ணன் இருப்பிடத்தை நோக்கி அவனைக் காணும் பெரிய ஆசையோடே செல்லத் தொடங்கினார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • கம்ஸன் எப்பொழுதும் எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவன் எதிரியாக இருந்ததால் தீய எண்ணத்துடனே எம்பெருமானை நினைத்தான். இப்படிப்பட்ட நினைவு உசிதம் இல்லை.
  • எப்படிப்பட்ட சூழ்ச்சி செய்தாலும் அதற்கு மேலே சூழ்ச்சி செய்யக்கூடிய ஸாமர்த்யமும் சக்தியும் பெற்றவன் எம்பெருமான். கம்ஸன் யாருக்கும் தெரியாமல் எம்பெருமானைக் கொல்லலாம் என்று பார்த்தான், அப்படிப்பட்ட அவனுடைய எண்ணம் அவனோடெ போகும்படி அவனையே எம்பெருமான் கொன்றுவிட்டான்,

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment