ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
குவலயாபீடத்தைக் கொன்ற பிறகு, கண்ணனும் பலராமனும் மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தார்கள் அங்கே அவர்கள் நுழைந்தபோது அங்குள்ள மல்லர்களும், மக்களும், பெண்களும் அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். அங்கிருந்த நன்மக்கள் அனைவரும் அவர்களிடத்தில் இருந்த தேஜஸ்ஸைக்கண்டு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்கள்.
அந்த மல்லர்களோ மிகப் பெரிய உருவத்தை உடையவர்களாகவும் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும் இருந்தார்கள். சாணூரன் இவர்களை மல்யுத்தத்துக்கு அழைத்தான். சாணூரன் முஷ்டிகன் முதலான மல்லர்களும் இவர்களுடைய பெருமையை உணர்ந்திருந்தாலும், வேறு வழியில்லாமல் இவர்களிடத்தில் யுத்தத்து வந்தார்கள். அவர்கள் எண்ணம் என்னவென்றால் “கோழையாய் இந்த யுத்தத்தில் இருந்து பின்வாங்கி கம்ஸன் கையால் மாள்வதைக் காட்டிலும், வீரனாய் இவர்கள் கையால் மரணத்தைப் பெறலாம்” என்று எண்ணினார்கள். இவர்களோ சிறுவர்களாக இருந்தார்கள். அங்கிருந்த மக்களோ இவர்களிடத்தில் கொண்ட பரிவால், இது பொருத்தம் இல்லாத யுத்தமாக இருக்கும் என்று நினைத்து பயந்தார்கள்.
கண்ணன் சாணூரனுடனும், பலராமன் முஷ்டிகனுடனும் மல்யுத்தம் செய்து, அந்த இரண்டு மல்லர்களையும் கொன்று வீழ்த்தினார்கள். மேலும் தாக்க வந்த பல மல்லர்களையும் அவ்வாறே கொன்றார்கள். இதைக் கண்ட மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியை அடைந்தார்கள். கம்ஸனுக்கோ இவர்கள் குவலயாபீடத்தையும் பாகனையும் கொன்று மல்லர்களையும் கொன்றதால், மிகுந்த பயம் ஏற்பட்டது.
இப்படி மல்லர்களை ஜயித்ததை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் காட்டியுள்ளார்கள். ஆண்டாள் நாச்சியார் தன் திருப்பாவையில் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை” என்று காட்டியுள்ளாள். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்” என்று அனுபவித்துள்ளார். கம்ஸனாலே ஏவப்பட்டு வந்த மல்லர்களைத் தன் திருமேனியில் இருந்த சந்தனம் கூடக் கலையாமல் அழித்த ஸாமர்த்யத்தை உடையவன் என்று அனுபவித்துள்ளார். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “நிகரில் மல்லரைச் செற்றதும்” என்று அனுபவித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மல்லடர்த்து மல்லரை அன்று அட்டாய்!” என்று அனுபவித்துள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- மனித உருவில், இடைப் பிள்ளையாக இருந்தாலும் எம்பெருமான் சக்தியில் குறைவற்றவனாக இருப்பான். எதிரிகளை எளிதில் ஜயிப்பான்.
- எதிரிகளும் கூட எம்பெருமானுடைய பெருமையை உணர்ந்தால் அவனிடத்தில் சண்டையிட்டு மடிவதை ஒரு பாக்யமாகக் கருதுவார்கள்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org