ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமான் ஸத்யபாமாப் பிராட்டியுடன் சேர்ந்து நரகாஸுரனை அழித்த சரித்ரத்தை இப்பொழுது அனுபவிக்கலாம்.
நரகன் என்பவன் வராஹப் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன் என்றும், கூடாநட்பினாலே அஸுர ஸ்வபாவத்தை அடைந்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தான். பல தேவப்பெண்களைச் சிறைபிடித்து தன்னிடத்தில் வைத்திருந்தான். இந்த்ரன் முதலான தேவர்கள் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று நரகாஸுரனை அழித்துத் தங்களைக் காக்குமாறு ப்ரார்த்தித்தார்கள். அப்பொழுது எம்பெருமான் தானே தக்க ஸமயத்தில் அதைச் செய்து முடிப்பதாக அவர்களை ஸமாதானப்படுத்தி அனுப்பினான்.
எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் பூமிப் பிராட்டி ஸத்யபாமாவாகப் பிறந்திருந்தாள் என்று நாம் முன்பே பார்த்தோம். கண்ணன் ஸத்யபாமாவோடு சேர்ந்து நரகனை அழிக்கலாம் என்று திருவுள்ளத்தில் முடிவு செய்தான். அந்த ஸமயத்தில் இந்த்ரன் த்வாரகைக்கு வந்து கண்ணனிடத்தில் நரகன் வருணனுடைய குடையையும், அதிதியின் குண்டலங்களையும், தேவர்களின் விளையாட்டு இடமான மணிபர்வதத்தையும் கவர்ந்து சென்றான் என்று அறிவித்துத் தங்களை உடனே ரக்ஷிக்குமாறு ப்ரார்த்தித்தான். கண்ணனும் உடனே ஸத்யபாமாவுடன் தன் தேரில் ஏறி நரக பட்டணத்தை நோக்கிச் சென்றான்.
கோட்டை வாயிலில் முரன் என்னும் அஸுரன் கண்ணனைத் தடுத்து யுத்தத்துக்கு அழைத்தான். அவன் தலையைத் தன் சக்கரத்தாலே அறுத்து அவனைக் கொன்றான். இதனால் கண்ணனுக்கு முராரி என்ற திருநாமம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு நரகாஸுரன் தானே யுத்தத்துக்கு வந்தான். கடும் யுத்தத்துக்குப் பிறகு நரகாஸுரனின் தலையைத் தன் சக்கரத்தால் அறுத்துக் கொன்றான். இந்த சரித்ரத்தில் நரகன் முன்பே தன் தாயால் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால், நரகனின் அஸ்த்ரம் தாக்கிக் கண்ணன் மயங்கியதாகவும், அப்பொழுது ஸத்யபாமா வில்லையும் அம்பையும் கொண்டு நரகனைக் கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.
நரகாஸுர வதத்தைப் பல ஆழ்வார்கள் காட்டியுள்ளார்கள். குலசேகராழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே” என்று நரகாஸுரனைக் கொன்றதைக் காட்டியுள்ளார். நம்மாழ்வார் தன் திருவிருத்தத்தில் “நலியும் நரகனை வீட்டிற்றும்” என்று காட்டியுள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக்கையன்” என்று காட்டியுள்ளார். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்று எம்பெருமான் த்வாரகையில் இருந்த இருப்பைக் காட்டியுள்ளார்.
இதற்குப் பிறகு நரகனால் சிறைபிடிக்கப்பட்டிருந்து பதினாறாயிரத்து நூறு பெண்களையும் கண்ணன் விடுவித்தான். அவர்கள் அனைவரும் கண்ணனையே மணாளனாக அடைய விரும்பியதால் அவர்களை த்வாரகைக்கு அழைத்துச் சென்று அத்தனை திருமேனிகளைத் தானும் எடுத்துக் கொண்டு அவர்களுடன் திருக்கல்யாணம் செய்து கொண்டான்.
நரகாஸுர வதத்தைப் பல ஆழ்வார்கள் காட்டியுள்ளார்கள். குலசேகராழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே” என்று நரகாஸுரனைக் கொன்றதைக் காட்டியுள்ளார். நம்மாழ்வார் தன் திருவிருத்தத்தில் “நலியும் நரகனை வீட்டிற்றும்” என்று காட்டியுள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக்கையன்” என்று காட்டியுள்ளார்.
பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்று எம்பெருமான் த்வாரகையில் இருந்த இருப்பைக் காட்டியுள்ளார்.
பல பரிசுகளையும் நரகனால் கவரப்பட்ட பொருள்களையும் கொண்டு எம்பெருமானும் ஸத்யபாமாப் பிராட்டியும் இந்த்ரனின் ஸ்வர்க லோகத்துக்குச் சென்றார்கள். இந்த்ரனும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்தினான். இந்த்ராணியும் வந்து இவர்களை வணங்கினாள். அப்பொழுது இந்த்ராணிக்கு அவளுடைய பணிப்பெண்கள் வந்து பாரிஜாதப்பூவைக் கொண்டு கொடுத்தனர். அதைக் கண்டு ஸத்யபாமாவும் ஆசைப்பட்டுக் கேட்க, அப்பொழுது இந்த்ராணி ஆணவத்துடன் “இது தேவர்களுக்கான பூ. உங்களைப் போன்ற மனிதர்களுக்குத் தகுந்ததல்ல” என்றாள். அதைக் கேட்ட ஸத்யபாமா மிகவும் வருந்தினாள். கண்ணன் உடனே தன் வாஹனமான கருடாழ்வாரைக் கொண்டு ஒரு மரத்தையே பிடுங்கிக் கொண்டான். அதைக் கண்ட இந்த்ரன் இப்பொழுது தான் கண்ணன் தனக்குப் பேருதவி பண்ணியுள்ளான் என்பதை மறந்து கண்ணனிடத்தில் சண்டைக்கு வந்தான். கண்ணனோ எளிதில் இந்த்ரனையும் அவன் ஆட்களையும் ஜயித்து, த்வாரகைக்குத் திரும்பி, அங்கிருந்த தோட்டத்தில் இந்தப் பாரிஜாத மரத்தை நட்டுவைத்தான்.
பாரிஜாத மரத்தை ஸத்யபாமா ஆசைப்பட்ட சரித்ரத்தைப் பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான்” என்று அழகாகக் காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- நரகாஸுரனை அழித்த தினமான நரக சதுர்தசி அவன் ப்ரார்த்தனையின் பேரில் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
- இந்த்ரன் போன்ற தேவர்கள் எம்பெருமானிடத்தில் எவ்வளவு நன்மையைப் பெற்றாலும், தாங்கள் தேவர்கள் என்று கர்வம் கொண்டு எம்பெருமானிடத்தில் அபசாரப் படுகிறார்கள். ஆனால் எம்பெருமானோ பெருந்தன்மையோடு அவர்களை ஒவ்வொரு முறையும் மன்னித்து விடுகிறான்.
- எம்பெருமான் பதினாறாயிரத்து நூற்றெட்டு தர்மபத்னிகளுடன் க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை த்வாரகையில் அற்புதமாக நடத்திக் காட்டினான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org