க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 49 – விதுரருக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< பாண்டவ தூதன் – பகுதி 1

த்ருதராஷ்ட்ரரின் இரண்டு தம்பிகள் பாண்டுவும் விதுரரும். விதுரர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். நம் ஸம்ப்ரதாயத்தில் இவரை விதுராழ்வான் என்று சொல்லுமளவுக்குப் பெருமை பெற்றவர். கண்ணன் எம்பெருமான் பாண்டவ தூதனாக ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது, விதுரருக்கு விசேஷமான அனுக்ரஹத்தைச் செய்தான். அதை இப்போது அனுபவிக்கலாம்.

கண்ணன் எம்பெருமான் பாண்டவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு த்ருதராஷ்ட்ரனின் இருப்பிடமான ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்தான். வந்த பின்பு, நேரே விதுரரின் மாளிகைக்குச் சென்றான். எம்பெருமானின் வரவைச் சற்றும் எதிர்பார்க்காத விதுரர், பக்திப் பெருக்காலும், ஸர்வேச்வரன் தம்முடைய இருப்பிடத்தைத் தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார். கண்ணனை வரவேற்று அவனுக்கு ஒரு ஆஸனத்தை அமைத்துக் கொடுத்து, அதைத் தானே தடவிப் பார்த்தார். தானே இட்ட ஆஸனமானாலும் த்ருதராஷ்ட்ரன் முதலானோர் ஸம்பந்தம் தனக்கு இருப்பதாலே தன்னையறியாமல் கண்ணனுக்கு அந்த ஆஸனத்தில் ஏதாவது தீங்கு ஏற்படுமோ என்று நினைத்து அவ்வாறு செய்தார்.

பிறகு, கண்ணனுக்கு உணவளிக்க வேண்டும் என்று பார்த்து, அங்கிருந்த வாழைப்பழத்தை எடுத்து, அதன் தோலை உறித்து, பழத்தைக் கீழே போட்டுத் தோலை அவனுக்குக் கொடுத்தார். அதையும் கண்ணன் ஆனந்தமாக ஏற்றுக் கொண்டான்.

அதன் பிறகு தான் வந்த விஷயத்தைச் சொல்லி, விதுரரின் மனதில் யுத்தம் நடக்கப் போவதையும், அதில் அவர் பங்குகொள்ளக் கூடாது என்பதையும் விதைத்து அருளினான்.

அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு த்ருதராஷ்ட்ரனின் ஸபைக்குச் செல்ல, அங்கே துர்யோதனன் கண்ணன் வரவை அறிந்ததால், யாரையும் கண்ணன் உள்ளே வந்ததும் எழுந்திருக்கக் கூடாது என்று ஆணையிட்டு வைத்தான். ஆனால் கண்ணன் உள்ளே வந்தவுடன் தன்னையறியாமல் அவன் எழுந்து நின்றான். இது கண்ட மற்றவர்களும் எழுந்து நிற்க, அவர்களைக் கண்டு நீங்கள் ஏன் எழுந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் “நீயே எழுந்துவிட்டாயே, அதனால் தான்” என்று சொல்ல, அவன் வெட்கித் தலை குனிந்தான்.

பிறகு கோபத்தோடே “பீஷ்மர், த்ரோணர் மற்றும் நானும் இருக்க, எங்கள் இடத்தை விட்டுத் தாழ்ந்தவரான விதுரரின் இடத்துக்கு ஏன் சென்றாய்?” என்று கண்ணனிடத்திலே கேட்க, எம்பெருமான் “எதிரிகள் வீட்டில் நாம் உண்ணக்கூடாது. நாம் எதிரிகளுக்கு உணவிடக்கூடாது” என்றான். அப்போது துர்யோதனன் “நான் ஒன்றும் உனக்கு எதிரி அல்லவே” என்று சொல்ல, கண்ணன் “நீ எனக்கு உயிரான பாண்டவர்களை எதிர்த்ததால், எனக்கு எதிரியாகி விட்டாய். அதனால் தான் உன்னிடத்துக்கு வராமல் என்னிடத்தில் பேரன்பு கொண்ட விதுரர் இடத்துக்குச் சென்றேன்” என்று சொன்னான்.

பூர்வாசார்யர்கள் தங்கள் வ்யாக்யானங்களில் மங்களாசாஸனத்தை விவரிக்கும்போது விதுரரின் தன்மையை நன்றாக விளக்கியுள்ளார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் தன் அடியார்கள் தன் விஷயத்தில் உள்ள பக்தி பரவசத்தால் தடுமாறுவதை மிகவும் ரஸிக்கிறான்.
  • எம்பெருமான் ஸ்ரீ கீதையில் தனக்கு அன்போடு யார் எதை ஸமர்ப்பித்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதை இங்கே விதுரரிடத்தில் நிரூபித்துக் காட்டினான்.
  • விதுரர் பெரியாழ்வார், நம்மாழ்வார் மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் போன்றோர்களோடு ஸமமாக மங்களாசாஸனபரராகக் கொண்டாடப்படுகிறார்.
  • விதுரருடைய மேன்மையைப் பார்த்து அவருடைய சரம கைங்கர்யத்தை, மிகவுயர்ந்த அடியார்களுக்குச் செய்யப்படும் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரமாகப் பண்ணும்படி கண்ணன் எம்பெருமான் யுதிஷ்டிரனை நியமித்தான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment