ஐப்பசி மாத அநுபவம் – பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது.

நம்பிள்ளைதிருவல்லிக்கேணி

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். ஸம்ஸாரத்தில் ஒருக்கால் இருந்து பரமபதம் சென்ற ஞானம் அருளப்பெற்ற முக்தாத்மாக்கள் மீண்டும் ஸம்ஸாரத்தில் வந்து இருந்தது போலே இவர்கள் இங்கு வாழ்ந்தது. பகவத் விஷய அனுபவத்தில் முதலில் இழிந்தவர்களும் இவர்களே. மற்ற ஆழ்வார்களைவிட இவர்கள் பகவதனுபவத்தில் மிகவும் ஈடுபட்டிருந்ததால் இவர்கள் நித்யஸூரிகளோடு ஒப்பக் கருதப்படுபவர்கள். நம்மாழ்வார் திருவாய்மொழி 7-9-6ல் முதல் ஆழ்வார்களை “இன்கவி பாடும் பரம கவிகள்” என்கிறார். அதாவது பரமனைத் தம் இனிய கவிகளால் பாடினார் என்றபடி. திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழி 2-8-2ல் “செந்தமிழ் பாடுவார்” என்று சிறப்பிக்கிறார். இவர்கள் எம்பெருமானின் பரத்வம் முதல் அர்ச்சாவதாரம் வரை அனைத்து  நிலைகளிலும் மிக்க ஈடுபட்டுள்ளவர்கள் (https://granthams.koyil.org/2012/10/archavathara-anubhavam-parathvadhi/). இவர்கள் ஞானமும் பக்தியும் வெவ்வேறு நிலைகளிலும் விரிந்திருந்தது. ஆனாலும், எவ்வாறு வெள்ளப் பெருக்கு பல்வேறு திசைகளில் சென்றாலும், ஒரு குறிப்பிட்ட இலக்கில் (பள்ளத்தில்) நோக்காககச் செல்லுமோ அவ்வாறு இவர்கள் விபவத்தில் த்ரிவிக்ரமனிடமும், அர்ச்சையில் திருவேங்கடமுடையானிடமும் மிக ஆழங்கால் பட்டவர்கள்.

திருமங்கை ஆழ்வார் “ஆன் விடை ஏழ் அன்றடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்றென் மனத்தே வைத்தேன்”  – என்று பெரிய திருமொழி 11.8.9 ல் மனிதராகப் பிறந்தாலும் ஏழு எருதுகளை அடக்கிய க்ருஷ்ணனிடம் ஈடுபடாதவர்களை மனிதராக மதியேன் என்று அருளிச் செய்தபடி எம்பெருமானிடம் அடிமைப் பண்பு பூணாதவரை முதலாழ்வார்கள் மனிதர்களாகக்கூட எண்ணுவதில்லை. “என் மனத்தே வைத்தேன்” – ஸர்வேச்வரன்  அபார காருணிகன் ஆகிலும் ஸ்வதந்த்ரன் என்பதால் இவர்களைக் கணிசியான். ஆனால் ஆழ்வார்கள் பரம காருணிகராதலால் இவர்களையும் கணிசித்துக் கருணை காட்டுவர். அப்படிப்பட்ட ஆழ்வார்களே இவர்களைக் கைவிட்டால் இவர்களின் அறிவின்மையும் தாழ்ச்சியும் தெளிவாக விளங்குகிறது.

குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி 3-8ல் “பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே யவர்க்கும்” என்றருளிச் செய்கிறார். பகவத் விஷயத்தில் அந்வயமில்லாதார் அவர்கள் போன்றில்லாததால்  என்னை வியப்போடு பார்க்கிறார்கள், எனக்கும் அவர்களைப் பார்த்தால் வேறுபாடாய் இருக்கிறது.

இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் 44ல் சாதித்தபடி, “சிறந்தார்க்கு எழுதுணையாம் செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடராய் வையேன்”, இம்முதலாழ்வார்கள் பகவத் சிந்தை இல்லாதாரை பண்பட்டவராகவே எண்ணுவதில்லை. மானிடராய்ப் பிறந்தும்,  அறிவு பெற்றும் ஈச்வர சிந்தையின்றி இருப்பாரோடு வாழ்வதைவிடக் காட்டில் வாழ்வதே மேல் என நினைத்தனர்; எங்கும் ஓரிடத்தில் நில்லாது மாலை வேளைகளில் சென்று சேர்ந்த இடத்திலேயே இரவைக் கழித்து ஒருவர் மற்றவரை அறியாதே திரிந்திருந்தனர்.

திருக்கோவலூர் புஷ்பவல்லித் தாயாரும் தேஹளீசப் பெருமாளும்

முதலாழ்வார்கள்: திருக்கோவலூர்

எம்பெருமான் ஸங்கல்பத்தால் முதலில் பொய்கை ஆழ்வார் ஒரு மழையும் காற்றுமான இரவில் ம்ருகண்டு முனிவரின் ஆச்ரமத்தின் இடைகழியில் (ரேழி) நுழைகிறார்.  சற்று நேரம் சென்று பூதத்தாழ்வார் அவ்விடம் வந்து கதவைத்தட்ட, உள்ளிருந்த பொய்கையார், ”அடியேன் படுத்துள்ளேன், மேலும் இடம் இல்லை” என, வந்தவர்,  “இங்கு ஒருவர் படுக்கலாம் எனில் இருவர் அமரலாகும் அன்றோ; கதவைத் திறக்கலாமே” என்ன, உள்ளிருந்த பொய்கையார்,  “ பிறர் ஸ்வாசக் காற்றும் தம் மீது பட இசையாத இந்நிலவுலகில் இவ்வாறு பேசுமவர் பெரு ஞானியாதல் வேண்டும்” என்று எண்ணிக் கதவைத் திறக்க அவரும் உள்ளே வந்தார். இருவரும் தரையில் அமர்ந்தனர். அப்போது பேயாழ்வார் வந்து கதவைத் தட்ட இவர்கள் இருவரும், “உள்ளே இருவர் அமர்ந்து உள்ளோம். மேலும் இடம் இல்லை” என்ன, வெளியே இருந்தவர், “இருவர் அமரலாம் எனில் மூவர் நிற்கலாகாதோ!” என்ன இருவரும் கதவு  திறந்து அவரை உள்ளே விட மூவரும் சேர நின்றனர். அப்போது முதல் திருவந்தாதியில் (பாசுரம் 86) ஸாதித்தபடி “நீயும் திருமகளும் நின்றாயால்” எனலாம்படி பரமகாருணிகனான எம்பெருமான் பிராட்டியோடு தானும் வந்து நின்று அவர்களை நெருக்க, ஓர் ஆழ்வார், “இது என்ன வியப்பு! நாம் மூவர் என்றிருந்தோம். இப்போது மேலும் சிலர் நெருக்கினாப்போல் உள்ளதே. விளக்கேற்றி வந்தவர் யார் என்று காண்போம்” என்ன, பொய்கையார் எம்பெருமானே நிலம் வான் இரு உலகங்களுக்கும் ஒளி தருபவன் என அருள, பூதத்தார், அன்பு எனும் விளக்கு ஏற்ற, பேயாழ்வார் எம்பெருமான் ஸ்வரூபத்தை அவ்விளக்கில் கண்டு கொள்ள மூன்று நிலைகளும் ஒருவரிடத்திலேயே இருந்தது போல ஸாத்யமாயிற்று.

முதலில் நமக்கு விவேகம் (ஞானம்) தோன்ற, அந்த ஞானம் பக்தி/காதல் ஆகி திவ்ய தர்சன ப்ராப்தி ஹேதுவாகிறது. வ்யாகரணத்தில் பாணினி, வரருசி, பதஞ்ஜலி ஆகியோர் வ்யாகரண ஸூத்ரம் (மூலம்), வ்ருத்தி (சிற்றுரை), பாஷ்யம் (பேருரை) என வெவ்வேறாக எழுதினாலும் மூன்றுமே த்ரிமுனி வ்யாகரணம் (மூன்று முனிவர்கள் அருளிய இலக்கணம்) என்றானாப்போலே இங்கும் மூவரால் செய்யப்பட்ட கர்த்ருத்வ பேதம் தோன்றினாலும் இம்மூன்றும் ஒன்றே என்னலாவது.

பொய்கை ஆழ்வார், “எம்பெருமானைத் தவிர்ந்த யாவும் அவன் உடைமை, எம்பெருமானே நம்மை உடையவன்” என்ற உணர்வோடு திருவிளக்கமைக்க , பூதத்தார் அந்த ஞானத்தோடு வந்த அன்பினால் (பக்தி) திருவிளக்கிட, பேயாழ்வார் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து அநுபவித்தார். இப்படி மூவரும் முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகளால் தம் பகவத் தர்சன அநுபவத்தை தாம் அனுபவித்ததோடு நில்லாமல் நமக்கும் அருளிச் செய்கிறார்கள்.

தகளி என்பது மண்ணால் ஆன  அகல் விளக்கு. நெய் = நெய். விளக்கு = விளக்கு. ஜகத் என்பது உலகம். “ஸாவயவத்வாத் கார்யம்” என்றபடி எதற்குப் பகுதிகள் உண்டோ அது கார்யம் (விளைவு). கார்யம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் ஒன்று இருக்க வேண்டும். விளைவுகள் வித விதமாய் வெவ்வேறாய் வியத்தகு பலவாய் உள்ளது போன்றே காரணமும் ஆற்றலும் அதிசயமும் மிக்கதாகவே இருக்க வேணும். இங்கு எம்பெருமான் சங்கமும் சக்கரமும் ஏந்தியவனாய்க் காட்டப் படுகிறான்.  இங்கு ஒரு கேள்வி எழும். பரப்ரஹ்மம் அநுமானத்தால் ஸ்தாபிக்கப்படும் எனும் அனுமான வாதத்தை எம்பெருமானார் கண்டிக்கிறார்; “சாஸ்த்ர யோனித்வாத்” என்ற ஸூத்ரத்தின்படி சாஸ்த்ர முகமாகவே ப்ரஹ்மத்தை நிரூபிக்க வேணும் என்கிறார். “ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேதசாஸ்த்ரவிரோதிநா யஸ்தர்க்கேண அநுஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர:” என்றபடி ரிஷிகள் அறிந்து சொன்ன வேத நெறிப்படியும், ஸ்ம்ருதிகள் காட்டிய மேலோர் நெறியிலுமே நின்றோர் சொன்ன வழியே தர்மம், பிறருக்கு தர்மம் தெரியாது. ஆக, சாஸ்த்ரம் காட்டிய நெறியில் அனுமானம் இருந்தால் அது ஏற்கப்படும் என்றும் சாஸ்த்ரத்திற்கு விரோதமாக இருக்கும் அனுமானம் கண்டிக்கபடும் என்பதே கொள்கை.  ஆக இங்கே சாஸ்த்ரத்தை ஒட்டிய அனுமானத்தின் மூலம் ப்ரஹ்மம் நிருபிக்கப்ப்டுகிறது – இது ஏற்புடையதே. இது ஸ்ரீபாஷ்யம் தொடக்கத்திலேயே ஓதப்படுகிறது “ந்யாய அநுக்ருஹீதஸ்ய வாக்யஸ்ய அர்த்த நிச்சாயகத்வாத்” – ந்யாய சாஸ்த்ரத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்யங்களே உண்மைப் பொருளை நிலைநாட்ட வல்லன.

இவ்வாறு நம்பிள்ளையின் முதல் திருவந்தாதி வ்யாக்யான அவதாரிகை (முகவுரை) முடிகிறது.

முதல் திருவந்தாதிக்கு முதலியாண்டான் அருளிச்செய்த தனியனைச் சற்று நோக்குவோம். தனியன்கள் பொதுவாக க்ரந்த கர்த்தா, க்ரந்தம் இவற்றின் பெருமைகளை நன்கு காட்டும்.

திருவெக்கா – பொய்கை ஆழ்வார்

கைதை சேர் பூம்பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு
வையத்து அடியவர்கள் வாழ அருந்தமிழ் நூற்றந்தாதி
படிவிளங்கச் செய்தான் பரிந்து

இதன் எளிய விவரணம் – பொழில்களால் சூழப்பட்ட காஞ்சீ திருவெஃகா திவ்ய தேசத்தில் அழகிய மலரில் தோன்றிய கவிஞர்கள் தலைவர் பொய்கை ஆழ்வார் அந்தாதித் தொடையில் நூறு மிகச் சிறந்த தமிழ்ப் பாசுரங்கள் பாடித் தம் அன்பினால் இவ்வையகத்தில் திருமால்  அடியவர்களை உய்வித்தருளினார்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-poigai-azhwar/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment