ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்

ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் ப்ரபாவத்தை அநுபவித்து வருகிறோம். இப்போது பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரையும் அவரது திவ்ய க்ரந்தமான முமுக்ஷுப்படியையும் மணவாள மாமுனிகளின் அத்யத்புதமான முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகை (முன்னுரை) மூலம் சிறிது அநுபவிக்க ப்ராப்தமாகிறது.

 

திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் இவற்றில் பொதிந்துள்ள ஸம்ப்ரதாய ஸாரார்த்தங்களை விளக்கப்  பிள்ளை லோகாசார்யர் ரஹஸ்ய க்ரந்தங்கள் பதினெட்டை அருளிச்செய்தார். இவற்றில் முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம் மூன்றும் காலக்ஷேப க்ரந்தங்களாக ஓர் ஆசார்யரிடம் க்ரமமாகக் காலக்ஷேப க்ரமத்தில் மூலத்தைக் கேட்டு அதன் வ்யாக்யானத்தோடு அர்த்தத்தை  உணர வேண்டியன. இவற்றுக்கு மாமுனிகள் வ்யாக்யானமும் விளக்கமும் அறியத்  தக்கன.  இம்மூன்றுக்கும் மாமுனிகள் மிக ரஸமான அத்புத வ்யாக்யானங்களை அருளிச் செய்துள்ளார். இக்ரந்தங்களும் வ்யாக்யானங்களும் அர்த்தபுஷ்டி, ஸம்ப்ரதாய ஞானம் கருதி நம் பூர்வர்களால் நெடுங்காலமாக அநுஸந்திக்கப்பட்டு வருகின்றன.

இம்மூன்று க்ரந்தங்களுக்கும் ஒரு சுருக்கமான அறிமுகம்:

  • இம்மூன்றில் முமுக்ஷுப்படி திருமந்த்ரம் (ஓம் நமோ நாராயணாய), த்வயம் (ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:), சரம ச்லோகம் (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:)  என்பவற்றின் மிகச் சிறந்த விளக்கமாய் விளங்குகிறது.
  • தத்வ த்ரயம் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யக் கருத்துக்களை (வேத வியாசரின் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு விளக்கம்) விளக்குவதால் குட்டி பாஷ்யம் என்றே புகழ் பெற்று விளங்குகிறது.  இது சித் (ஜீவாத்மா), அசித் (வஸ்து), ஈச்வரன் (எம்பெருமான், பரமாத்மா) எனும் மூன்று அடிப்படைக் கருத்துகளை விளக்குகிறது. இந்நூலின் சுருக்கமான விளக்கம் இணைய தலத்தில் காணலாம் – https://granthams.koyil.org/thathva-thrayam-tamil/ .
  • ஸ்ரீவசனபூஷணம் ஸ்ரீவைஷ்ணவத்தின் முக்கியக் கோட்பாடுகளான பிராட்டியின் புருஷகாரத்வம் (பிராட்டி கருணையோடு சேதநர்களை எம்பெருமானிடம் கொண்டு சேர்ப்பித்தல்) பகவானின் உபாயத்வம் (எம்பெருமான் சேதனர்கள் தன்னை அடைவதற்குத் தானே வழியாய் இருக்கும் எளிமை), ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம், ஸ்ரீவைஷ்ணவர் ஏற்றம், மற்றும் மிக முக்யமாக ஆசார்ய அபிமானம் (ஆசார்ய க்ருபை) என்பனவற்றை மிக விசதமாக விளக்குகிறது.

மாமுனிகள் பிள்ளை லோகாசார்யரின் இம்மூன்று க்ரந்தங்களுக்கும் மிக ஆழ்ந்த திவ்ய ஞானம் விரும்புவோர் நெஞ்சு களிக்கும் வகையில் விரிவான விபுலமான வ்யாக்யானம் ஸாதித்துள்ளார்.

இம்முன்னுரையோடு நாம் மாமுனிகளின்  முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையை அனுபவிப்போம்.

முமுக்ஷுப்படி – பொது அறிமுகம்

ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய ஸூரிகளால் சூழப்பட்ட பரமபதநாதன்

எல்லையற்ற இன்பநாடாகிய ஸ்ரீவைகுண்டத்தில் திருமகள் கேள்வனாய் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனை (என்றும் ஸம்ஸாரத்தில் உழலாத) நித்யர்களும், (ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்ட) முக்தர்களும்  அநுபவித்துக் கொண்டுள்ளனர்.  இந்த ஆனந்த வேளையிலும் அவன், தன்னை அனுபவிக்க எல்லா வகையிலும் தகுதியும் உரிமையும் இருந்தும் அசத்தான நிலவுலகை நித்தியமாய் எண்ணி, நிரந்தரமான நித்ய விபூதியை இழந்து, அதை இழந்தோம் என்றும் அறியாமல் சரீரமே ஆத்மா என்றும், ஆத்மா தமதன்று ஈச்வரனது என்று அறியாமலும்   பிரளய காலத்தில் சிறகொடிந்த பறவைபோல் வெறும் அசத்தாய்க் கிடக்க இவர்களைக் கரை ஏற்ற வேணும் என்று உள்ளம் உருகியவனாய் அதற்கான செயலில் ஈடுபட்டான்.

  • முதலில் அவர்களுக்கு சரீரமும் இந்திரியங்களும் தந்தான். சரீரமும் இந்த்ரியமுமின்றி ஆத்மாவால் செயல் ஆற்ற முடியாது என்பதால் இவற்றை அருளியதே அவன் செய்த் முதல் க்ருபை.
  • பிறகு அந்த இந்திரியங்களையும்  சரீரத்தையும் தக்கபடி உபயோகிக்க பகவான் வேதங்களையும், அவற்றின் விரிவான விளக்கங்களாக ஸ்ம்ருதி, இதிஹாசம், புராணம் ஆகியவற்றைத் தந்தான். சாஸ்திரங்களைக் கற்றும் அவற்றின் உபதேச வழி நின்றும் பரமபதத்தில் எம்பெருமானை அடையலாம். வேதம் சில விசேஷ இயல்புகளை உடையது. அவை:
    • அபௌருஷேயம் – அவை ஒரு நபரால் இயற்றப்பட்டனவல்ல. அவை பகவானாலும் இயற்றப் பட்டனவல்ல. அவை நித்யமானதால். வேதத்தை முற்றாக அறிந்தவன் பகவான் ஒருவனே. ஒவ்வொரு ச்ருஷ்டியிலும் அவனே அவற்றை வெளியிடுகிறான். அநாதிகாலமாக ச்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காப்பு), லயம் (அழிப்பு) முடிவற்ற சக்ரமாக நடந்துகொண்டே இருக்கின்றன.
    • நித்யம் – அபௌருஷேயம் என்பதால் வேதங்கள் எப்போதும் உள்ளவை.
    • நிர்தோஷம் – குற்றமற்றவை. வேதத்தில் சொல்லப்பட்ட யாவும் நிறைவானவை. ஏனெனில் அவை அபௌருஷேயம். தோஷம் மனிதர்களால் செய்யப்பட்டனவற்றுக்கு உண்டு. அவர்கள் ப்ரமம் (பிழை), வஞ்சகம் (ஏமாற்று வேலை), ப்ரமாதம் (அசட்டை), அசக்தி (ஆற்றலின்மை) எனும் குறைகள் நிறைந்தோர். அவர்களின் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கேற்ப சொல்லும் விஷயமும் அமையும். வேதத்துக்கு இக்குறை இல்லை.
    • ஸ்வத: ப்ரமாணம் – அவை தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளுமவை. வேதத்தில் சொல்லப்பட்டதுக்கு அதுவே ப்ரமாணம் வேறொரு நிரூபணம் தேவை இல்லை.
  • இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களைக் கற்று அந்த நிபந்தனைகளைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் காண்பது கடினம் என்பதால் சர்வேஸ்வரன் தானே ப்ரதம (முதல்) ஆசார்யனாக வந்து சாஸ்த்ர ஸாரார்த்ததை மிக ஸம்க்ஷேபமாகச் சுருக்கி அருளினான். இந்த ரஹஸ்யப் பொருள் எல்லா ரஹஸ்யங்களையும் காட்ட வல்லது. இது இவ்விஷயங்களை விளக்குகிறது:
    • ஸ்வரூபம் – ஜீவாத்மா, ஈச்வரனின் இயல்ப
    • உபாயம் – ஈச்வரனை அடையும் வழி
    • புருஷார்த்தம் – கைங்கர்யம் என்னும் இறுதி லக்ஷ்யம்

இந்த ரஹஸ்யங்களில் எம்பெருமான் திருமந்த்ரத்தை பதரிகாஸ்ரமத்தில் நாராயண ரிஷியாக, தனது அம்சமேயான நர ரிஷிக்கு உபதேசித்தான்.

அவன் விஷ்ணுலோகத்தில் தன் ப்ரிய மஹிஷியான ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு த்வயத்தை உபதேசித்தான்.

 

அவன் சரம ச்லோகத்தை குருக்ஷேத்ர யுத்த களத்தில் தேர்த்தட்டில் க்ருஷ்ணனாக அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

இப்படி எம்பெருமான் தானே ஆசார்யனாக வந்ததால் அவனை நாம் கூரத்தாழ்வானின்லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்” எனும் தனியனில் மஹாலக்ஷ்மி நாதனை முதலாகக் கொண்ட குரு பரம்பரை என்று கொண்டாடுகிறோம்.

இம்மூன்று ரஹஸ்யங்களும் (சொல்) அளவில் சிறியன ஆயினும், அர்த்தத்தில் மிக ஆழ்ந்தவை. இவற்றை முறையாக, பரம்பரானுகதமான ஆசார்ய ச்ரேஷ்டர்கள்பால் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டு உணர்ந்தாலே உஜ்ஜீவனம் ப்ராப்தமாகும்.  ஆகவேதான் நம் பூர்வாசார்யர்கள் இவற்றை வகைப் படுத்தி, மிக நுணுகிய நோக்கத்தோடு க்ரந்த முறையாக்கி  வைத்தனர். இவ்வாசார்ய பரம்பரையில் வந்த பிள்ளை லோகாசார்யர் தம் பரம கருணையால் இந்தக் கோட்பாடுகளை இந்நூலில் அழகாக அமைத்திருக்கிறார்.

ஸ்ரீரங்கம் பிள்ளை லோகாசார்யர்

இந்நூலுக்கு முன்பே பிள்ளை லோகாசார்யர் ரஹஸ்யத்ரயத்தை மூன்று நூல்களில் விளக்கியுள்ளார். அவை யாத்ருச்சிக்கப்படி, ச்ரிய:பதிப் படி, பரந்த படி என்பன. யாத்ருச்சிகப்படி மிகச் சிறியது. பரந்தபடி மிகப் பெரிய க்ரந்தம். ச்ரியப்பதிப் படி மிக நீளமும் அன்றி, சிறியதும் அன்றி அளவாய் இருப்பினும் ஸம்ஸ்க்ருதமயமாய் அமைந்து வட மொழி அறிவின்றேல் அர்த்தம் தெரியாமல் இருக்கும். இக்குறைகள் ஒன்றுமின்றிக்கே பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படியை ஸாதித்தருளினார்,

ஆனதுபற்றியே முமுக்ஷுப்படி எல்லார் நோக்கிலும் உள்ளது. காலக்ஷேப க்ரந்தமாயும் உள்ளது,  மேலும் முன்புள்ள க்ரந்தங்களில் சொல்லாமல் விட்ட விஷயங்களும் இதிலுண்டு என்பதால் எல்லாரும் இதை ஆதரித்தனர்.

(த்வய மஹா  மந்த்ரத்தை விளக்கும்) த்வய ப்ரகரணத்துக்கு முன்னுரை

முதல் ரஹஸ்யமான திருமந்த்ரத்தை விளக்கியபின் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் உபாயம் (வழி), உபேயம் (லக்ஷ்யம்), என்பன எவ்வாறு இரண்டாம் பதமான நம: பதம், மூன்றாம் பதமான நாராயணாய பதம் இவற்றிலிருந்து விரிவடைகின்றன என்று காட்டுகிறார்.

பிள்ளை லோகாசார்யர் முந்தின மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ரம் சரம ச்லோகம் த்வயம்  என்று வரிசைப்படுத்தி விளக்கியவர் இதில் த்வயத்தை சரம ச்லோகத்துக்கு முன் வைப்பானேன் எனில் பூர்வாசார்யர்களால் இரு முறைகளும் பின்பற்றப் பட்டுள்ளன. பெரியவாச்சான் பிள்ளை பரந்த ரஹஸ்யத்திலும், வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் தம் ரஹஸ்ய த்ரய க்ரந்தங்களிலும் திருமந்திரம் த்வயம் சரம ச்லோகம் எனும் க்ரமம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விரண்டு க்ரமங்களிலுமுள்ள கோட்பாடு யாது?

இரண்டு விளக்கங்கள் உள்ளன:

  1. இம்மூன்றும் மந்த்ர, விதி, அனுஷ்டான ரஹஸ்யங்கள் எனப்படுகின்றன. திருமந்த்ரம் – மனத்தால் நினைத்து த்யானிக்கப்படும் ஸ்வரூபம் தெரிவிக்கும் மந்த்ரம். சரம ச்லோகம் – விதி, எம்பெருமான் எல்லாவற்றையும் விடுத்து தன்னையே பற்றுமாறு விதிக்கும் ரஹஸ்யம். த்வயம் – அனுஷ்டான மந்த்ரம், எப்போதும் நினைத்து அர்த்தானுசந்தானம் நடக்கும் மந்த்ரம்,
  2. திருமந்த்ரம் இரு பகுதி, பிரணவம்(ஓம்காரம்), நமோ நாராயணாய (மந்த்ர சேஷம்). உபாயத்தை சொல்லும் நம: பதமும், உபேயத்தை (லக்ஷ்யம்) சொல்லும் நாராயணாய பதமும் த்வயத்தின் இரண்டு அடிகளில் தெரிவிக்கப்படுகின்றன. இவையே இரண்டு பகுதியாக இருக்கும் சரம ச்லோகத்தில் மேலும் விவரிக்கப் படுகிறது.

ஆகவே இரண்டு க்ரமங்களும் ஏற்கப்படுகின்றன,  முன் மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ரம் சரமச்லோகம் த்வயம் என்ற க்ரமத்தைப் பற்றினவர் இதில் திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் என்ற க்ரமத்தைப் பற்றினார்.

சரம ச்லோக ப்ரகரண அவதாரிகை  

மத்யம ரஹஸ்யம் த்வயத்தை விளக்கியபின் பிள்ளை லோகாசார்யர் சரம ச்லோகத்தை விளக்கத் தொடங்குகிறார்,

  • இதுவே அறுதி ரஹஸ்யம்
  • பஞ்சம வேதமான மஹா பாரதத்தின் முக்ய ஸ்தானமான கீதோபநிஷத்தின் மிக முக்யமான விஷயம்
  • இது த்வய  மஹா மந்த்ரத்தின் விரிவு
    • த்வயத்தின் முதல் வாக்யம் ஸ்ரீமந் நாராயணனின் திருவடித் தாமரைகளை உஜ்ஜீவனத்துக்குப் பற்றுவதைக் காட்டுகிறது. சரம ச்லோகத்தில் எம்பெருமானே இதை விதிப்பது முதல் பகுதி.
      • (கர்ம ஞான பக்தி யோகங்களான) மற்ற உபாயங்களோடு ஸம்பந்தம் உறுதியாக விடப்பட வேண்டும்
      • பகவானையே (வழி) உபாயமாகப் பற்றுவது ஜீவாத்ம ஸ்வரூபம், அவனை அடைய வேறெதுவும் உபாயமன்று.  இவன் பற்றுதலும் உபாயமன்று.
    • த்வயத்தின் இரண்டாவது வாக்யம் ஸ்ரீமந் நாராயணனின் உகப்புக்காகவே தன்னலமற்ற, ப்ரதிபலன் எதிர்பாராத, கைங்கர்யத்தை வற்புறுத்துகிறது. நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட, சேதனனுக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதால் எம்பெருமானே இதிலுள்ள தடைகளையும் நீக்கி அருள் செய்கிறான்.

சரம ச்லோகத்தின் இவ்வர்த்தத்தை அறிந்துகொள்ளவே எம்பெருமானார் ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூரில் நம்பிகள் திருமாளிகைக்குப் பதினெட்டு முறைகள் நடந்தார்.

நம்பிகள் இந்த ச்லோகத்தின் ஆழ்ந்த செம்பொருளையும் அதன் உயர்ந்த கௌரவத்தையும் மட்டுமே பெரிதாகக் கருதி, இதைப் பெறும் அளவு யோக்கியதை உள்ள அதிகாரி சேதனர் எவருமிலர் என்றெண்ணி இதை உபதேசியாதே இருந்தார். ஸ்ரீ ராமாநுஜரின் ஆஸ்திக்யத்தையும் நம்பகத் தன்மையையும் சோதிக்கவே அவரைப் பதினெட்டு முறைகள் அலைக்கழித்து, யோக்யதை இல்லாதார்க்கு உபதேசியேன் என்று உறுதி மொழி பெற்றும், ஒரு மாஸம் உபவாசம் இருக்கப் பண்ணியும் இறுதியில் நம்பிகள் அவர்க்கு இந்த சரம ச்லோகார்த்தம் உபதேசித்தார்.

அர்த்தத்தின் ஆழமும் மேன்மையும் செம்மையும் கருதி, சரம ச்லோகத்தின் அர்த்தத்தை எம்பெருமானார்க்கு முன்பிருந்த பூர்வாசார்யர்கள் யாரும் அதைக் கற்க யோக்யதை உள்ளோர் வெகு சிலரே என்று கற்பியாதிருந்தனர்.  சரம ச்லோகார்த்தம் கற்க யோக்யதை (தகுதி) ஆவது:

  • சுத்த ஸத்வ குணத்தில் ஊன்றியிருத்தல்
  • எம்பெருமானிடம் முழுமையாய்ப் ப்ரேமம் கொண்டிருத்தல்
  • உலக இன்பங்களிலிருந்து முற்றாக விடுபட்டிருத்தல்
  • (வேதம் முதலிய) ப்ரமாணங்களை முழுக்க விசுவாசித்தல்
  • எம்பெருமான் பெருமைகளைக் கேட்ட மாத்திரத்தில் முற்றிலும் நம்புதல்
  • ஆஸ்திக அக்ரேஸராதல் – சாஸ்த்ரம் நம்புவோரில் தலைவர் ஆதல்
எம்பெருமானாரின் கருணைக்கு உகந்து திருக்கோட்டியூர் நம்பிகள் அவரை எம்பெருமானார் என்று அழைத்தல்

 

ஆனால் எம்பெருமானார் ஸம்ஸாரிகளின் துயரம் கண்டு பொறுக்கமாட்டாமல் கருணை பொங்கி அவர்கள் துயர் துடைக்க சரம ச்லோக அர்த்தத்தை வெளியிட்டருளினார். இப்படி வெளியிட்டது கண்டு உகப்பினால் அவரது ஆசார்யரான திருக்கோட்டியூர் நம்பிகள் அவரை “எம்பெருமானார்” என்று அழைத்துக் கொண்டாடினார்.

எம்பெருமானாரால் வெளியிடப்பட்டு, பூர்வாசார்யர்களால் மேலும் விளக்கப்பட்ட இதைப் பிள்ளை லோகாசார்யர் சேதனர் உஜ்ஜீவனத்தை எண்ணி மிக்க பெரும் கருணை மீதூர பல ப்ரபந்தங்களில் விளக்கி அருளினார். அதிலும் குறிப்பாக, மற்ற ப்ரபந்தங்கள் போல் அல்லாமல் இந்த ப்ரபந்தத்தில் பெண்ணும் பேதையும்கூட எளிதாக அறியும்படி ஸம்ப்ரதாயக் கொள்கைகளை எளிதாக விளக்கியுள்ளார்.

இவ்வாறு முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் பிள்ளை லோகாசார்யரின் பரம காருணிகத்வத்தை மாமுனிகள் அழகாக விளக்கியருளுவதை நோக்கும்போது, நாமும் இக்கொள்கைகளை அறிந்து அவற்றின் வழி நடப்பதற்காக, விசதவாக் சிகாமணிகளான மாமுனிகள் எவ்வளவு கருணையோடு நமக்குத் தந்து உதவினார் என்பது வெளிப்படும். நம் பூர்வாசார்யர்களைச் சேவித்து நாமும் அவர்கள் அருளைப் பெறுவோமாக.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-pillai-lokacharyar-mumukshuppadi/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment