ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – நாயனார் – ஆசார்ய ஹ்ருதயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்

நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்துக்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகையின் எளிய தமிழாக்கம்.

திருமகள் கேள்வனாய் ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன், எல்லையில்லாத ஆனந்தம் நிறைந்திருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில், நித்யஸூரிகளிடத்தில் நிரந்தரமான கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறான். நித்யஸூரிகள் முடிவில்லாத சுத்தமான ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர்கள்; எம்பெருமானின் திருவுள்ளப்படி நடந்து அதனாலேயே தரித்து இருப்பவர்கள். அச்சமயத்தில், எம்பெருமான் லீலா விபூதியான ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் ஆத்மாக்களை நினைத்து, இவர்களுக்கும் நித்யஸூரிகளைப்போலே கைங்கர்யம் கிடைக்கப் ப்ராப்தி இருந்தும் அதை இழந்துள்ளார்களே என்று நினைத்து வருந்தி அவர்களைக் கரைசேர்க்க ஆசைப்படுகிறான்.

அவர்களைக் கரைசேர்ப்பதற்கு அவன் பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறான்.

  • சேதனர்கள் தேஹம் மற்றும் இந்த்ரியங்கள் இல்லாமல் (ஸ்ருஷ்டி ஸமயத்தில்) அசேதனத்தைப் போன்று இவ்வுலக இன்பத்துக்கும் முக்தி அடைவதற்கும் வழியில்லாமல் இருப்பதைக் கண்டு, பெருங்கருணையுடன், தன்னுடைய திருவடித் தாமரைகளை அடைவதற்கு உபயோகமான தேஹம் மற்றும் இந்த்ரியங்களை அளித்து, ஞான மலர்ச்சியையும், செயல் செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் தேவையான சக்தியையும் கொடுக்கிறான்.
  • ஞானத்தைக் கொண்டு எது விட வேண்டியது, எது பற்ற வேண்டியது என்பதைத் தெரிந்துகொள்ள, மிக்க கருணையுடன் வேதத்தைக் கொடுக்கிறான்.
  • அதற்கு மேல் மனு மற்றும் ரிஷிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களை வெளியிட்டருளினான். இந்த சாஸ்த்ரங்கள் தேஹத்துடன் கூடியிருக்கும் ஆத்மாக்களுக்கு விஷயமாக இருக்கும்.
  • அந்த சாஸ்த்ரங்களைக் கற்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும், அவை பல காலங்கள் முயற்சி செய்தே அறியப்படுவதாலும், அவை அடைவதற்கு அரியதாக இருப்பதைத் திருவுள்ளத்தில் கொண்டு, அவ்வாறு கட்டுப்பாடுகள் இல்லாத, எளிதாகக் கற்கக் கூடிய, ஆத்மாவிலேயே நோக்குடைய திருவஷ்டாக்ஷரம் (திருமந்த்ரம்) என்கிற ப்ரஹ்ம வித்யையை தானே வெளியிட்டருளினான்.
  • இதுவும் ப்ரயோஜனப் படாததைக் கண்டு, ஓலை அனுப்பிச் செய்ய முடியாததை ராஜாக்கள் தாங்களே இறங்கி வந்து செய்வதுபோலே, தானே இவர்களைத் திருத்துவோம் என்ற எண்ணத்துடன் ராமக்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்கிறான்.
  • இப்படிச் செய்தும் ஒருவரும் திருந்தாதது கண்டு, விஜாதீயரான (பரமாத்மா வேறு ஜீவாத்மா வேறு) தம்மால் இவர்களைத் திருத்த முடியாது என்று எண்ணி, மானைக் கொண்டு மானைப் பிடிப்பாரைப்போலே, ஜீவாத்மாக்களைக் கொண்டு ஜீவாத்மாக்களைத் திருத்துவோம் என்று முடிவு செய்து, “ஆமுதல்வரை” (தலை சிறந்த அதிகாரியை) உண்டாக்குவதற்காக, தன்னுடைய நிர்ஹேதுக (இயற்கையான) ப்ரஸாதத்தாலே (கருணையாலே) எல்லாவிடங்களும் பார்த்து யாரும் கிடைக்காமல் இருக்க, தெற்குத் திசையில், “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்று சொல்லுகிறபடியே பல ஜந்மங்கள் எடுத்து நித்ய ஸம்ஸாரியாகத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த இவர் (நம்மாழ்வார்) மேல் அவன் கடாக்ஷம் பட, அவர் அந்த நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே திவ்ய ஞான பக்திகளை அடையப் பெற்றார்.
  • ஆழ்வாரும் எம்பெருமானின் ஸ்வரூப ரூப குண விபூதிகளை மிகவும் ஆழமாக அனுபவித்து அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக பாசுரங்களைப் பாடியருளினார். எப்படி வால்மீகி பகவானின் சோகத்தின் வெளிப்பாடாக வந்த ச்லோகம் ப்ரஹ்மாவின் அருளாலே கவி லக்ஷணங்கள் பொருந்திய ஸ்ரீராமாயணமாக அமைந்ததோ, அதேபோல பகவானின் அருளாலே ஆழ்வாரின் பாசுரங்கள் திருவாய்மொழி என்கிற ஸர்வ லக்ஷணங்களும் பொருந்திய ப்ரபந்தமாக ஆனது. குறிப்பு – இதன் மூலம் எல்லாச் சேதனர்களுக்கும் உய்விற்கும் வழி ஏற்பட்டது.

இந்தத் திருவாய்மொழியும் தமிழில் மிகவும் விரிவாக, பல அர்த்தங்களை வெளியிடுவதாக இருக்கையாலே, இதிலே இருக்கும் தாத்பர்யமான அர்த்தம், எல்லார்க்கும் புரிந்த கொள்ள அரிது என்பதால், இதில் இருக்கக்கூடிய அர்த்த விசேஷங்களையும், இவற்றில் ஆழ்வார் திருவுள்ளக் கருத்து எவ்வாறு உள்ளது என்பதையும், ஆசார்யர்களுக்கு மிகவும் பிடித்தமான இவ்விஷயமே எல்லார்க்கும் தஞ்சம் என்பதையும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தம்முடைய பரம க்ருபையினாலே வெளியிடுவதாகத் திருவுள்ளம் கொண்டு, ஆசார்யர்களின் உபதேசம் மூலமாக வந்த இவ்வர்த்தங்கள் எல்லார்க்கும் புரியும்படி மிகவும் சிறியதாகவும் இல்லாமல் மிகவும் பெரியதாகவும் இல்லாமல், இந்த ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ப்ரபந்தம் மூலம் அருளிச்செய்கிறார்.

“ஆத்யஸ்ய ந: குலபதே:” என்கிறபடியே வைதிக குலத்துக்கு முதல் ஆசார்யரான ஆழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களில் அவருடைய திருவுள்ளக் கருத்துக்களைச் சொல்லுவதாலேயே இந்த ப்ரபந்தத்துக்கு ஆசார்ய ஹ்ருதயம் என்று திருநாமம் ஏற்பட்டது. இந்த ப்ரபந்தத்தில் இவர் அருளிச்செய்யும் வாக்யங்களெல்லாம் அருளிச்செயல்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டே அருளியுள்ளார். இதற்குக் காரணம் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களான ஆழ்வார்களின் வார்த்தைகள் ஆகையாலே அவை மிகவும் நம்பத்தகுந்ததாகவும், மிகவும் அனுபவிக்கத்தக்கதாகவும் இருக்கும் என்கிற காரணங்களால் இவையே தமக்கு விருப்பம் என்பதால். மேலும், முத்துக்களை நன்றாக அறிந்தவன் கோத்தால் அது பெருவிலை பெறுமாபோலே, நாயனாரின் சாதுர்யத்தாலே சேர்க்கப்பட்ட இவ்வார்த்தைகள் அருளிச்செயலில் ருசி உடையவர்களுக்கு அர்த்தத்தைக் காட்டிலும் வார்த்தைகளே மிகவும் இனிதாயிருக்கும். ஆகையால், இந்தப் ப்ரபந்தம், சப்தம் அர்த்தம் இரண்டின் ரஸத்தாலும், விசேஷ ஞானம் கொண்டவர்களுக்கு மனத்துக்கு மிகவும் இனிதாய் இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment