யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்

<< பகுதி 4

நம்பிள்ளை ஒன்பதினாயிரப்படியை அதனுடைய ஆழ்ந்த கருத்துகளுடன் தம் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளைக்கு உபதேசிக்கலானார். பெரியவாச்சான் பிள்ளையும் அவ்வுபதேசக் கருத்துக்களை தினமும் பட்டோலைப்படுத்தி வந்தார். காலக்ஷேபம் பூர்த்தியாகும் தருணத்தில் தாம் பட்டோலைப்படுத்தியவற்றை நம்பிள்ளையிடம் கொணர்ந்து அவர் திருவடிகளில் சமர்ப்பித்தார். அவற்றைக் கண்டு உகப்படைந்த நம்பிள்ளை அந்த பட்டோலைகளுக்குத் தம் ஆசிகளை அளித்து அவற்றைப் பல பிரதிகளாக்கி அவற்றை பலரும் அறியும் வண்ணம் பல இடங்களுக்கு கொண்டு சேர்க்குமாறு பெரியவாச்சான் பிள்ளையிடம் கூறினார். நடுவில் திருவீதிப்பிள்ளை போல் யதேச்சையாக வியாக்கியானம் செய்யாமல் நம்பிள்ளை பணித்த பின்பே பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு வியாக்கியானம் இயற்றினார் என்பது இங்கே நோக்கத் தக்கதாகும். இச்சிறப்பை மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேச இரத்தினமாலையின் 43ஆவது பாசுரத்தில் ‘நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் இன்பா வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்’ என்று வெளிப்படுத்துகிறார். (எம்பெருமானுடைய கருணையினால் பக்தியில் மூழ்கிய நம்மாழ்வார் உகைப்போடு அருளிச்செய்த திருவாய்மொழிக்கு தம்முடைய அளவற்ற கருணையினால் நம்பிள்ளை பணித்தவாறு பெரியவாச்சான் பிள்ளை ஒன்பதினாயிரப்படியை இயற்றினார்).

ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப்பிள்ளையையும் சிறியாழ்வானப்பிள்ளையையும் (ஈயுண்ணி மாதவர்) அழைத்து ஒன்பதினாயிரப்படியை வாசிக்குமாறு கூறினார். பெரியவாச்சான் பிள்ளை தமக்கும் அவர்களுடன் அதனை வாசிக்க விருப்பம் உள்ளதை வெளிப்படுத்தினார். அதனை ஏற்ற நம்பிள்ளை அவர்களுக்கு அதன் பொருளை மகிழ்வுடன் கூறினார். நம்பிள்ளையின் காலக்ஷேபங்களை ஒவ்வொரு நாளும் தம்முடைய இல்லத்தில் வடக்குத் திருவிதிப்பிள்ளை குறிப்புகளாக எழுதி வரலானார். ஒரு நாள் அவர் நம்பிள்ளையை தம்முடைய இல்லத்திற்கு போஜனத்திற்கு அழைத்தார். நம்பிள்ளை வடக்குத் திருவிதிப்பிள்ளையின் இல்லத்தில் தாம் திருவாராதனம் செய்த பிறகு பிரசாதம் எடுத்துக் கொள்வதாகக் கூறினார். அங்கே திருவராதனத்திற்காக கோயிலாழ்வாரை திறக்கும் பொழுது அதில் பனையோலைகளில் கையெழுத்து பிரதிகளைக் கண்டார். அவற்றைப் பற்றி வடக்குத் திருவிதிப்பிள்ளையிடம் கேட்டார். பிள்ளை தாம் அவரிடம் கேட்ட திருவாய்மொழி பாசுரக் கருத்துக்கள் மறந்து போகாது இருக்க தாம் அவைகளை குறிப்பெடுத்து வருவதாக கூறினார். நம்பிள்ளை அவரையே திருவாராதனம் செய்யுமாறு கூறி மேலும் அந்த சுவடிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தாம் உணவருந்தும் நேரத்தில் பெரியவாச்சான் பிள்ளையையும் ஈயுண்ணி மாதவரையும் அந்த ஓலைச்சுவடிகளை தொடர்ந்து வாசிக்குமாறு சொன்னார். பின்பு அவர்களுடன் தாமும் அந்த சுவடிகளை வாசித்துப் பார்த்தார். மிகச் சிறப்பான அந்த உரையை அவர்களுக்குள் சிலாகித்து பேசிக் கொண்டனர். நம்பிள்ளை வடக்குத் திருவீதிப்பிள்ளையிடம் “நீர் எதற்காக இந்தப் பணியை செய்தீர்? பெரியவாச்சான் பிள்ளை மாத்திரமே வியாக்கியானம் எழுதலாகுமோ? நாமும் அவ்வாறு செய்யலாமே! என்று எண்ணினீரோ?” என்ற கேட்டார். இச்சொற்களைக் கேட்ட வடக்குத் திருவீதிப்பிள்ளை கலங்கி மயங்கி வீழ்ந்தார். ‘மயக்கம் தெளிந்தவுடன் “ஸ்வாமி ! நான் அவ்வாறான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. நான் அக்கருத்துகள் மறந்து போகும் சமயங்களில் அதனை நினைவு கூறவே அவற்றை எழுதி வந்தேன்” என்று நம்பிள்ளையின் திருவடிகளில் பணிந்து தம்முடைய ஆர்வ மிகுதியை கூறினார். நம்பிள்ளை அவரிடம் “உம்மை மன்னித்தோம். நீர் ஒரு தனிப் பிறவியாக இருக்கிறீர். நஞ்சீயரின் வியாக்கியானங்களை நாம் உமக்கு கூறியதில் இம்மியளவும் நீர் விட்டு விடவில்லை. உம்முடைய திறமையை எங்ஙனம் போற்ற!” என்று கூறினார். மேலும் அவர் இந்த வியாக்கியானத்தை தம்முடைய ஆசார்யரின் (நஞ்சீயர்) பூர்வாசிரம திருநாமமான மாதவன் என்ற பெயர் கொண்டிருந்த அவருடைய சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாள் பரப்ப வேண்டும் என்று தாம் விரும்புவதைக் கூறினார். இந்நிகழ்ச்சியால் வடக்குத் திருவீதிப்பிள்ளை மிகவும் மகிழ்ச்சி அடைந்தவரானார். நம்பிள்ளை அந்த ஓலைச்சுவடிக் கட்டுகளை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்து அவைகளை மூன்று அல்லது நான்கு பிரதிகளாக்கி அதனை பலரும் அறியும் வண்ணம் செய்யுமாறு கூறினார். மாதவர் தயக்கத்துடன் “அடியேனால் இச்செயலைச் செய்ய இயலுமா? அதற்கு நமக்கு அனுமதியுண்டா?” என்று கேட்டார். நம்பிள்ளை அவரிடம் ‘நஞ்சீயரின் திருநாமத்தைக் கொண்டு அதனால் அவரருள் பெற்ற உமக்கு இதுவும் ஒரு பெரிய செயலோ?’ என்று கூறினார். ஒரு புராணக்கதை உண்டு. கூறுகிறேன். கேளும். பேரருளாளப் பெருமாள் (காஞ்சி வரதர்) துன்னுபுகழக் கந்தாடை தோழப்பரின் ஸ்வப்னத்தில் தோன்றி  

‘ஜகத்ரக்ஷாபரோனந்தோ ஜனிஷ்யத்யபரோமுனி |  
ததர்ஶ்யாஸ் ஸதாசாரா சாத்வீகாஸ் தத்வதர்ஶின: ||

லோக நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு அதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ள திருவனந்தாழ்வான், ஜகத்தில் உள்ள அனைவரின் மேன்மைக்காக (ராமானுஜர் திருவவதாரம் நீங்கலாக) யோகத்தில் இருக்கும் இன்னொரு முனியாக திருவவதாரம் செய்வார்.  அச்சமயம் அவரை சரணடைபவர்கள் நல்ல குணங்களையும் நடத்தையையும் கொண்டிருப்பார்கள் என்று அருளிச் செய்தார். அந்த சமயம் வரும் வரை இதை அடிப்படையாகக் கொண்டு நீர் காலக்ஷேபங்கள் செய்து கொண்டிரும் என்று கூறினார். மாதவரும் அச்சுவடிகளை ஐந்து பிரதிகளாக்கி தம்முடைய புதல்வரான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு கற்பித்தார்.

ஆதாரம் – https://granthams.koyil.org/2021/07/18/yathindhra-pravana-prabhavam-5/

அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment