ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்
அச்சமயம் தேவராஜர் என்றொருவர் (நம்பூர் வரதராஜர் என்றும் அறியப்பட்டவர்) பாதுகை சக்ரவர்த்தி கோவில் அருகே வசித்து வந்தார்; அறிஞர் எளியோர் போன்ற அனைவராலும் விரும்பப்படுபவராக திகழ்ந்தார். அவர் மிகவும் இரக்க சுபாவத்தினராகவும் சத்வ குணங்கள் (தூய்மையான நற்பண்புகள்) கொண்டவராகவும் இருந்தார். ஒரு நாள் நஞ்சீயர் ஒரு கனவு கண்டார். அதில் தேவராஜரைக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவ விஷயங்களை விளக்குமாறும் அவரை ஒன்பதினாயிரப்படிக்கு படிகள் எடுக்க பணிக்குமாறும் கூறப்பட்டது. இது ஆழ்வாரின் அருளே என்றெண்ணிய நஞ்சீயர் தம் சிஷ்யர்களிடம் தேவராஜரைக் குறித்து விசாரித்தார். அவர்கள் தேவராஜரை அவரிடம் அழைத்து வந்தனர்.
நஞ்சீயர் அவரை ஆசிர்வதித்து அவரிடம் ஒரு பனையோலையைக் கொடுத்து அதில் எழுதச் சொன்னார். தேவராஜர் அதில் “நஞ்சீயர் திருவடிகளே சரணம்; பட்டர் திருவடிகளே சரணம்” என்று எழுதினார். நஞ்சீயரை சேவித்து அவருடைய திருவடித் தாமரைகளை பற்றியவரானார். மனம் உகப்படைந்தவராய் நஞ்சீயர் அவரை வாழ்த்தி பரிவுடன் அவருக்கு திருவாய்மொழியின் துல்லியமான கருத்துக்களைச் சுருக்கமாக உரைத்தார். தேவராஜரிடம் சில வெற்றுப் பனையோலைகளை கொடுத்து ஒன்பதினாயிரப்படியின் நேர்த்தியான பிரதி ஒன்றை எடுக்குமாறு கூறினார். நஞ்சீயரிடம் விடைபெற்ற அவர் திரும்பிச் செல்லுகையில் காவிரியாற்றைக் கடக்கும்பொழுது எதிர்பாராமல் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சலில் சிறந்தவரான தேவராஜர் ஒன்பதினாயிரப்படியின் கையெழுத்துப் பிரதியையும் பனையோலைகளையும் தம்முடைய தலையில் கட்டிக் கொண்டு நீந்தினார். வெள்ளம் மேலும் அதிகமாக அவருடைய தலையில் கட்டியிருந்த கையெழுத்துப் பிரதியும் பனையோலைகளும் நீரில் விழுந்து வெள்ளத்தில் சென்று விட்டன. தேவராஜர் மிகவும் சோகமடைந்து தாம் தம்முடைய ஆசார்யரிடத்தில் பெரும் அபசாரம் செய்ததை எண்ணிச் சோகமுற்றார். அவரைக் கண்ட இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அவருடைய திருமாளிகைக்கு அவரைக் கொண்டு சேர்த்தனர். நடந்தவற்றை அறிந்த அவருடைய தர்மபத்தினியும் மிகவும் சோகமடைந்தார். அவ்விருவரும் அன்று முழுதும் உண்ணாது உபவாசம் இருந்தனர். பின்பு அவருடைய மனைவி அவரிடம் ‘நாம் நம்முடைய திருவராதனத்திலிருந்து தவறுதல் கூடாது (திருவாராதனம் என்பது எம்பெருமானை வழிபடும் ஒரு கிரமம்) என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தேவராஜர் ஸ்னானம் செய்து ஊர்த்வ புண்ட்ரங்களை தரித்துக் கொண்டு (எம்பெருமானின் சின்னங்களை அங்கங்களில் தரித்துக் கொள்ளுதல்) தம் திருவராதனத்தைத் தொடங்கினார். மிகவும் சோர்ந்து இருந்தவரை உறக்கம் தழுவ அவருடைய திருமாளிகையின் கோயிலாழ்வாரிலிருந்து (அவரவர் இல்லத்து எம்பெருமானின் இருப்பிடம்) திருவாராதன எம்பெருமானான ஸ்ரீரங்கராஜ பெருமாள் “தேவராஜரே! கலங்க வேண்டாம். புதிய பனையோலைகளை எடுத்து எழுதத் தொடங்குங்கள். நான் உம்முடனே இருப்பேன்” என்றருளினார்.
உடனே தேவராஜர் “ச்ரிய:பதியாய் (மஹாலக்ஷ்மித் தாயாரின் பதியாக) என்று தொடங்கி அவர் தனக்கே உரித்தான அபரிமிதமான காருண்யத்துடன் கடாக்ஷித்தார்” என்ற நஞ்சீயரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த வண்ணம் அதனை நிறைவு செய்தார். நஞ்சீயரின் உபதேசங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனதால் அவரால் அக்கருத்துக்களை நினைவு கூர்ந்து பனையோலைகளில் வடிக்க முடிந்தது. பின்பு அவர் கோயிலாழ்வாரிலிருந்த எம்பெருமானுக்கு போகங்கள் கண்டருளச் செய்து அப்பிரசாதத்தை தாமும் எடுத்துக் கொண்டு ஒன்பதினாயிரப்படியின் முழுமையான ஸ்ரீகோசத்தை (அருளிச் செயலின் ஏட்டு வடிவம்) எடுத்துச் சென்று நஞ்சீயரிடம் எடுத்துச் சென்று அவரிடம் பணிந்து சமர்ப்பித்தார்.
மிகவும் உவகை கொண்டவராய் நஞ்சீயர் அதை எடுத்து வாசிக்கலானார். அவருக்குக் கருத்துத் தெளிவு இல்லாத சில இடங்களில் அவர் தம்முடைய உரையை நிறைவு செய்திருக்கவில்லை; அவைகள் மிக அழகாக அங்கே விளக்கப்பட்டிருப்பதை கண்டார். அவர் தேவராஜரை அழைத்து “என்ன ஆச்சரியம் ? என்ன ஞானம்? இது எவ்வாறு நடந்தது?” என்று கேட்டார். அவரும் நஞ்சீயரின் கோஷ்டியிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்து நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கூறினார். மிகவும் உகப்படைந்தவராக எழுந்து தேவராஜரை அணைத்து “நீரோ நம் பிள்ளை (தம்முடைய ஆப்தமான மகன்)?” என்று கேட்டார். பின்னர் தம் திருவாராதன எம்பெருமானான ”ஆயர்தேவை” சேவித்து விட்டு தேவராஜருக்கு ”நம்பிள்ளை” என்று பெயரிட்டு அவரை தரிசனத்திற்கு நியமித்து தம்முடைய ஆசார்யர் பட்டர் பின் வரும் காலத்தில் தரிசனத்திற்கான தலைவருக்கு அளிக்கும்படி கொடுத்த மோதிரத்தை நம்பிள்ளைக்குக் கொடுத்தார். நம்பிள்ளையை அவருடைய ஞானத்திற்கு ஒப்ப திருவாய்மொழிக்கு ஒரு வியாக்கியானத்தை இயற்றி நம் ராமானுஜ தரிசனத்தை (ஸ்ரீ ராமானுஜரின் சித்தாந்தம்) மேலும் சிறப்பாக விளங்கச் செய்யுமாறு கூறினார். அதன் பின்பு நம்பிள்ளை ஞானம், பக்தி, உலக விஷயங்களில் இச்சைகளை துறத்தல் ஆகிய குணங்களின் பொக்கிஷமாக விளங்கினார். பல ஸ்ரீவைஷ்ணவர்கள் அவரைப் பற்றி வழி நடந்தனர். அவருடைய காலக்ஷேபத்திற்கு கூடும் பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்து “இது நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ” என்று மக்கள் வியப்புறுவர்.
ஆதாரம் – https://granthams.koyil.org/2021/07/18/yathindhra-pravana-prabhavam-4/
அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org