க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 28 – குவலயாபீட வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும்

கண்ணனும் பலராமனும் இப்படித் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்ட பிறகு, நேரே வில் விழா நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த காவலாளிகள் தடுக்கத் தடுக்க, கண்ணன் அங்கிருந்த வில்லை எடுத்து உடைத்தான். அப்பொழுது அங்கே அவர்களைத் தாக்க வந்த வீரர்களை அவர்கள் இருவருமாக வென்று வீழ்த்தினார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் வடமதுரையில் நன்றாக உலாவி அனுபவித்தார்கள். பிறகு இரவில் தங்கள் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள். மறுநாள் கம்ஸனை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் முதலில் கோட்டை வாசலில் குவலயாபீடம் என்னும் யானையாலே தடுக்கப்பட்டார்கள். இந்த யானை மிகவும் பெரிய, பலம் வாய்ந்த யானை. இதனுடைய பாகனோ மிகவும் ஸாமர்த்யக்காரன். யானையை அடித்து வீழ்த்தினாலும் தன்னுடைய ஸாமர்த்யத்தைக் கொண்டு எழுப்பக் கூடியவன். இந்த யானைக்கு அதன் பாகனானவன் மதம் பிடிக்கக் கூடிய பல உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து மதமேற்றி வைத்திருந்தான். கண்ணனையும் பலராமனையும் கொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த யானை காத்திருந்தது.

கண்ணனைக் கண்ட யானையானது, பாகனின் தூண்டுதலால் கண்ணனை நோக்கி வேகமாக வந்தது. கண்ணனோ அதனிடத்தில் இருந்து தப்பி, அதன் கால்களுக்கு நடுவில் புகுந்து அதை அலைக்கழித்தான். பிறகு அதன் கொம்புகளை வேகமாக பிடுங்கி எடுத்தான். பிறகு அந்த யானையையும் அதன் பாகனையும் அடித்துக் கொன்றான். அந்த யானையில் தந்தங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வீர நடை போட்டுச் சென்றான்.

ஆழ்வார்கள் இந்தச் சரித்ரத்தைப் பல இடங்களில் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டானும்” என்று காட்டியுள்ளார். ஆண்டாள் நாச்சியார் தன் திருப்பாவையில் “கோட்டுக் கால் கட்டில்மேல்” என்று காட்டியதற்கு வ்யாக்யானத்தில், கண்ணன் குவலயாபீடத்தின் தந்தங்களை வைத்துத் தன் கட்டிலுக்குக் கால்கள் செய்துள்ளான் என்று காட்டுகிறார்கள். குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “வெங்கற்றின் களிறடர்த்தாய்” என்று காட்டியுள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ” என்று காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் கஜேந்த்ராழ்வான் என்கிற யானைக்கு அதனுடைய பக்தியைக் கண்டு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஓடி வந்து உதவினான். அதே க்ருஷ்ணனாக இங்கிருந்த காலத்தில் அவனை எதிர்த்த யானையைக் கொன்றான். யானையோ மனிதரோ தேவரோ, அவர்களுக்கு அன்பிருந்தால் ரக்ஷிப்பது, எதிரிட்டால் அழிப்பது என்பதை எம்பெருமான் இயற்கையாகச் செய்கிறான்.
  • ப்ரமிப்பூட்டும் பெரிய தடைகளைக் கூட மிகவும் எளிதில் போக்கி விடுகிறான் எம்பெருமான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment