க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 33 – த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்

குருகுல வாஸத்தை முடித்த பிறகு கண்ணன் எம்பெருமான் வடமதுரையில் வாழ்ந்து வந்தான். கம்ஸனின் இரண்டு மனைவிகள் கம்ஸனின் மரணத்துக்குப் பிறகு தங்கள் தந்தையான ஜராஸந்தனின் இடத்துக்குச் சென்று தங்களுக்கு ஏற்பட்ட பெரிய துன்பத்தை அவனுக்கு அறிவித்தார்கள்.அவனும் மிகவும் கோபம் கொண்டு கண்ணனை அழித்தே தீருவேன் என்று சொல்லி ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தான். கண்ணனும் பலராமனும் தங்கள் படைகளைக் கொண்டு நகரத்துக்கு வெளியே வந்து யுத்தத்தில் ஈடுபட்டார்கள். கடைசியில் ஜராஸந்தனின் படைகளை அழித்து, பலராமன் அவனையும் சிறை பிடித்தான். ஆனால் கண்ணன் எம்பெருமானோ அவனிடம் “ஜராஸந்தனை நாம் விடுதலை செய்யலாம். நாம் வந்த நோக்கம் பூமி பாரத்தை நீக்க. இவனை நாம் விடுவித்து அனுப்பினோம் என்றால் அனைத்து தீய சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி மீண்டும் வருவான். அப்பொழுது அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழித்துவிடலாம்”. என்று சொன்னான். அப்படியே பலராமனும் அவனை விடுவித்தான். தப்பிச் சென்ற ஜராஸந்தன் இதே போலப் பதினேழு முறை படை எடுத்து வந்து தன் படைகள் அழிக்கப்பட்டு தோற்று ஓடினான்.

இந்த ஸமயத்தில் கண்ணன் எம்பெருமான் வரப்போகும் பெரிய ஆபத்தை உணர்ந்து, இங்கிருந்து வேறு இடத்துக்கு இடம்பெயரலாம் என்று நினைத்து, விச்வகர்மாவைக் கொண்டு விரைவில் த்வாரகா நகரை மேற்குக் கடற்கரையில் அமைத்தான். மதுரையில் இருந்த அனைத்து மக்களையும் அங்கிருந்து த்வாரகைக்கு அழைத்துச் சென்று அங்கே அமர்த்தினான்.

அங்கே ஜராஸந்தன், எப்படிக் கண்ணனை ஜயிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் காலயவனன் என்கிற ஒரு ராஜா அங்கே வந்தான். அவன் மிகப் பெரிய வீரனாகவும் பெரிய படையோடும் விளங்கினான். ஜராஸந்தன் இவன் உதவியால் கண்ணனை ஜயிக்கலாம் என்று பார்த்து இவனையும் இவன் படைகளையும் வடமதுரைக்கு அனுப்பினான். காலயவனன் மதுரையின் கோட்டை வாசலுக்கு வரும்போது கண்ணன் தான் மட்டும் தனியே அழகிய தாமரை மாலையை அணிந்து வெளியே வந்தான். அவனைக் காலயவனன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே எம்பெருமான் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். காலயவனனும் எம்பெருமானைத் துரத்திக்கொண்டு ஓடினான். இவ்வாறு எம்பெருமான் ஓடிச்சென்று அங்கிருந்த ஒரு மலைக்குகையை அடைந்து, அதனுள்ளே சென்றான்.

அங்கே முசுகுந்தன் என்னும் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மாந்தாதாவின் பிள்ளை நீண்ட நாட்களாகத் தூங்கிக் கொண்டிருந்தான். இவன் தேவர்களுக்கு உதவியாக இருந்து பல யுத்தங்களை ஜயித்துக் கொடுத்தவன். பல காலம் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்து தேவர்களுக்கு உதவியதால், அந்த தேவர்கள் அவன் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இவன் தனக்கு மோக்ஷம் வேண்டும் என்று கேட்க, அதற்கு தேவர்கள் “எங்களால் அதைத் தர முடியாது. நீ முதலில் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்” என்று சொன்னார்கள். அவனும் இந்த குகையில் வந்து தூங்கத் தொடங்கினான்.

எம்பெருமான் மிகவும் இருட்டான அந்த குகைக்குள் புகுந்து, ஓர் ஓரத்தில் அமைதியாக இருந்தான். பின்பு அங்கே உள்ளே நுழைந்த காலயவனன், கீழே படுத்துக் கிடந்த முசுகுந்தனைக் கண்ணன் என்று நினைத்துக் காலால் எட்டி உதைத்து எழுப்பினான். விழித்தெழுந்த முசுகுந்தன் தன்னை எழுப்பியது யார் என்று மிகவும் கோபத்துடன் விழித்துப் பார்க்க, அந்த கோபப் பார்வையிலேயே காலயவனன் எரிந்து சாம்பலானான்.

அதற்குப் பிறகு கண்ணன் எம்பெருமான் முசுகுந்தனுக்கு முன்பு வந்து நிற்க, கண்ணனின் அழகில் மயங்கி நின்றான் அவன். கண்ணன் எம்பெருமான் தன் உண்மைத் தன்மையைக் காட்டிக் கொடுக்க, அவனும் மிகவும் ஆனந்தம் அடைந்து, கண்ணனிடத்தில் முக்தியை ப்ரார்த்தித்தான். எம்பெருமானும் “அடுத்த பிறவியில் நீ நம்மிடத்தில் வந்து சேர்வாய்” என்றான்.

இதற்குப் பிறகு கண்ணன் எம்பெருமான் மதுரைக்குத் திரும்பி அங்கிருந்த காலயவனின் படையை முழுதுமாக அழித்தான். இவ்வாறு ஜராஸந்தன் மற்றும் காலயவனன் மூலமாகத் திரண்ட தீயவர்களின் பெரிய கூட்டத்தை எம்பெருமான் அழித்து பூமி பாரத்தைப் போக்கினான்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • தீயவர்களை அழிக்க எம்பெருமான் பல விதமான உபாயங்களை உபயோகப்படுத்துகிறான்.
  • தன்னிடத்தில் பக்தி கொண்ட அடியவர்களுக்கு வேண்டும் நன்மைகளையும் செய்கிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment