ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
ஸத்ராஜித் என்னும் ராஜா ஸூர்யனிடத்தில் மிக்க பக்தியோடு இருந்தான். அவனுடைய பக்தியை மெச்சி ஸூர்யன் அவனுக்கு ஸ்யமந்தக மணியைக் கொடுத்தான். இந்த மணி மிகவும் ஒளிவிடக்கூடியது. பெரும் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. ஸத்ராஜித் அதை ஒரு சங்கிலியில் கோத்து அணிந்து கொண்டு மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான்.
ஒரு முறை அவன் த்வாரகைக்கு வந்தான். ஸ்யமந்தக மணியை அணிந்து கொண்டிருந்ததால் பெரிய ஒளியோடு அவன் திகழ்ந்தான். அங்கு தான் இருந்த இடத்தில், அந்த மணியைக் கழற்றி ஒரு மேஜையில் அனைவரின் பார்வைக்கும் வைத்தான். அந்த மணியைக் கண்ட கண்ணன் அதை உக்ரஸேனருக்குக் கொடுக்கும்படிக் கேட்டான். ஆனால் ஸத்ராஜித் மறுத்துவிட்டான். அவனுடைய தம்பி ப்ரஸேனன் ஒரு முறை அந்த மணியை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்பொழுது ஒரு சிங்கம் அவனை அடித்துக் கொன்று அந்த மணியை எடுத்துச் சென்றது. அந்த சிங்கம் உயர்ந்த ராமபக்தரான ஜாம்பவான் வாழ்ந்து வந்த குகைக்குச் செல்ல ஜாம்பவான் அந்த சிங்கத்தைக் கொன்று அந்த மணியை எடுத்துக் கொண்டார்.
இங்கே த்வாரகையில் தன் தம்பியைக் காணாத ஸத்ராஜித் கண்ணனே தன் தம்பியைக் கொன்று மணியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறே எல்லாரிடத்திலும் சொல்லத் தொடங்கினான். இந்தச் செய்தியைக் கேட்ட கண்ணன் இந்த அவப்பெயரைப் போக்கவேண்டும் என்று பார்த்து, அந்த மணியைத் தேடிக் காட்டுக்குச் சென்றான். அங்கே ப்ரஸேனன் மரணம் அடைந்திருப்பதைக் கண்டு, அங்கிருந்த சிங்கத்தின் அடித்தடத்தைப் பார்த்து நடந்த விஷயத்தை ஊகித்தான். அந்த அடித்தடங்களைப் பின் தொடர்ந்து சென்று ஜாம்பவானின் குகையை அடைந்தான். அங்கே ஜாம்பவானின் பெண்ணான ஜாம்பவதி அந்த மணியை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட கண்ணன் அந்த மணியை எடுத்துக்கொள்ளப் பார்க்க, அவள் பெருத்த கூச்சலை எழுப்பினாள். அதைக் கேட்டு அங்கு வந்த ஜாம்பவான் கண்ணனுடன் மல் யுத்தம் பண்ணத் தொடங்கினார். இந்த யுத்தம் இருபத்தெட்டு நாட்கள் நடந்தது. கடைசியில் எம்பெருமான் தன் நிஜரூபத்தைக் காட்ட, அவர் எம்பெருமானிடத்தில் மன்னிப்புக் கேட்டு, அந்த மணியைக் கண்ணனிடத்தில் ஸமர்ப்பித்தார். அது மட்டும் அல்லாமல் தன் பெண்ணான ஜாம்பவதியையும் கண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
த்வாரகைக்குத் திரும்பிய கண்ணன் நடந்த விஷயங்களைச் சொல்லி ஸ்யமந்தக மணியை ஸத்ராஜித்துக்கே கொடுத்தான். தன் தவறை உணர்ந்த ஸத்ராஜித் கண்ணனிடத்தில் மன்னிப்புக் கேட்டு அந்த மணியையும் தன் பெண்ணான ஸத்யபாமவையும் கண்ணனுக்கு ஸமர்ப்பித்தான். ஸத்யபாமா ஸாக்ஷாத் பூமிப்பிராட்டியின் அவதாரம். கண்ணன் எம்பெருமான் ஸத்யபாமாப் பிராட்டியையும் திருமணம் செய்து கொண்டான்.
இதற்குப் பிறகு கண்ணன் எம்பெருமான் பஞ்ச பாண்டவர்கள் மெழுகு மாளிகையில் எரிந்து போனார்கள் என்று கேள்விப்பட்டு, பலராமனையும் அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்துக்குச் சென்றான். அந்த ஸமயத்தில் க்ருதவர்மா மற்றும் அக்ரூரரின் தூண்டுதலால் சததந்வா என்பவன் ஸத்ராஜித்தைக் கொன்று அந்த மணியைக் கவர்ந்து சென்றான். இத்தால் மிகவும் சோகமுற்ற ஸத்யபாமா உடனே புறப்பட்டு கண்ணன் இருந்த ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று கண்ணனிடம் சொன்னாள். அவன் உடனே மீண்டு வந்து சததந்வாவைக் கொன்றான். ஆனால் அவனோ மணியை அக்ரூரரிடத்தில் கொடுத்து வைத்திருந்தான். இதை அறிந்த கண்ணன் அக்ரூரரை த்வாரகைக்கு அழைத்து வந்து அந்த மணியை ஒரு முறை காண்பிக்கச்சொல்லி மீண்டும் அவனையே அந்த மணியை வைத்துக்கொள்ளுமாறு செய்தான்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் “மனிசரும் மற்றும் முற்றுமாய்” மற்றும் “வீற்றிருந்து ஏழுலகும்” பாசுரங்களுக்கு வ்யாக்யானம் அருளியுள்ள நம்பிள்ளை, எம்பெருமான் இவ்வுலகில் வந்து பிறந்து “ஸ்யமந்தக மணியைத் திருடினான்” என்பது போன்ற பல அவமானங்களை அடைந்தாலும், விடாமல் இவ்வுலகத்தவர்களுக்கு உதவுவதற்காக வந்து அவதரிப்பதைக் கொண்டாடுகிறார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமாப் பிராட்டியைத் திருக்கல்யாணம் செய்வதற்காக இப்படிப்பட்ட ஆச்சர்யமான லீலைகளை எம்பெருமான் செய்தான்.
- இவ்வுலகில் அவன் அவதரிக்கும் காலங்களில் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பலரும் அவனை அவமதிக்கிறார்கள். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னடியார்களுக்கு உதவ மீண்டும் மீண்டும் வந்து அவதரிக்கிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org