க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 34 – ருக்மிணி கல்யாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்

கண்ணன் எம்பெருமான் காலயவனின் படைகளை அழித்த பிறகு, ஜராஸந்தன் தன்னுடைய பெரிய படையோடு போர் புரிய வந்தான். எம்பெருமானுக்கு அப்பொழுது அவர்களை முடிக்கத் திருவுள்ளம் இல்லாததால் பலராமனோடு சேர்ந்து அங்கிருந்து தப்பி த்வாரகைக்குச் சென்று சேர்ந்தான். அவர்களைக் கண்டு பிடிக்க முடியாததால் ஜராஸந்தன் அவர்கள் மாண்டார்கள் என்று நினைத்து தன் நாட்டுக்குத் திரும்பினான்.

இந்த ஸமயத்தில் விதர்ப தேசத்து ராஜாவான பீஷ்மகன், தன்னுடைய பெண்ணான ருக்மிணிக்குக் கல்யாணம் செய்யலாம் என்று முடிவு செய்தான். அந்த ராஜாவின் பிள்ளையான ருக்மிக்கு தன் தங்கையை தன்னுடைய நண்பனான சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. ஆனால் ருக்மிணியோ ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். எம்பெருமான் எப்பொழுதெல்லாம் இந்த உலகில் அவதரிக்கிறானோ அப்பொழுது அவளும் வந்து அவனோடே அவதரிப்பாள். அவள் கண்ணனை நன்கு அறிந்தவள். கண்ணனையே திருக்கல்யாணம் செய்ய விரும்பினாள். கண்ணனும் அவளைத் திருமணம் செய்ய விரும்பினான். ருக்மியின் நிர்பந்தத்தாலே சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி ஒரு நாளும் குறிக்கப்பட்டு, அந்த நாளுக்குச் சில நாட்கள் முன்பு சடங்குகள் தொடங்கப்பட்டன.

கலக்கம் அடைந்த ருக்மிணி ஒரு ப்ராஹ்மணரை அழைத்து எம்பெருமானுக்குத் தன் நிலையை நன்றாக உணர்த்தக் கூடிய ஒரு கடிதத்தை அவரிடத்தில் கொடுத்து அதை விரைவில் த்வாரகைக்குச் சென்று எம்பெருமானிடத்தில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டாள். அந்த ப்ராஹ்மணரும் விரைந்து சென்று எம்பெருமானிடத்தில் அந்தக் கடிதத்தைச் சேர்த்தார். அந்தக் கடிதத்தில் தனக்குக் கண்ணனிடத்தில் இருந்த பெருங்காதலை அழகாக அவள் வெளியிட்டிருந்தாள். அது மட்டும் அல்லாமல் தான் கல்யாணத்துக்கு முந்தின நாள் ஊரெல்லையில் இருக்கும் துர்கையின் கோயிலுக்கு ஊர்வலமாகச் செல்லும் வழக்கத்தைக் கூறி அந்த ஸமயத்தில் தன்னை அங்கிருந்து கவர்ந்து செல்லுமாறு எழுதியிருந்தாள்.

அதைக் கண்ட எம்பெருமான் அங்கிருந்து உடனே தன் தேரில் ஏறிப் புறப்பட்டு, ருக்மிணியின் ஊரெல்லையை அடைந்தான். அவனுடன் பலராமனும் மற்றைய யாதவர்களும் வந்திருந்தனர். அப்பொழுது ருக்மிணி அந்தக் கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். கண்ணன் எம்பெருமான் அக்கோயிலுக்கு அருகில் இருந்து கொண்டு தன் பாஞ்சஜன்யத்தை ஊதி வெற்றி முழக்கம் இட்டான். அதைக் கேட்ட ருக்மிணி கண்ணனின் வரவை அறிந்து மிகவும் இன்பமுற்றாள். உடனே அவள் அந்தக் கோயிலுக்கு அருகில் வந்து கண்ணனின் தேரில் ஏறிக்கொண்டாள். கண்ணன் தன் தேரை அங்கிருந்து வேகமாக விரட்ட, ருக்மி, சிசுபாலன், ஜராஸந்தன் மற்றும் பலரும் அவனை வீழ்த்தப் பார்த்தார்கள். பலராமனும் மற்ற யாதவர்களும் அவர்களுடன் போரிட்டு கண்ணனோடு அவர்களை ஜயித்தார்கள். ஆத்திரமுற்ற ருக்மி தன் படைகளுடன் சென்று கண்ணனோடு யுத்தம் செய்தான். கண்ணன் தன் வாளால் ருக்மியைக் கொல்லப் பார்க்க, அந்த ஸமயத்தில் ருக்மிணி கண்ணனைத் தடுத்தாள். அதனால் கண்ணன் அவனைக் கொல்லாமல் விட்டான். ஆனாலும் அவன் தலை மயிரை வெட்டி, அவனுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்தினான். அங்கிருந்து புறப்பட்டு எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டியுடன் த்வாரகையை வந்தடைந்தான்.

த்வாரகையின் ப்ரஜைகள் கண்ணனையும் ருக்மிணியும் கண்டு பேரானந்தம் அடைந்தார்கள். அங்கே கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் மிகச் சிறப்பாகத் திருக்கல்யாணம் நடந்தது.

பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்று அங்கேக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் ன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற” என்று ருக்மிணிப் பிராட்டியைக் கவர்ந்ததையும் ருக்மியை மானபங்கம் செய்ததையும் அழகாகக் காட்டியுள்ளார். ஆண்டாள் நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில் “கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே” என்று சிசுபாலன் ருக்மிணிப் பிராட்டியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் காத்திருந்ததையும் எம்பெருமான் எப்படி அவளைக் கைப்பிடித்தான் என்பதையும் அழகாக விளக்கியுள்ளாள். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “அன்றங்கமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந்தோள் புணர்ந்தான்” என்று போரில் வென்று ருக்மிணியைக் கைப்பிடித்ததைக் காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானின் பட்ட மஹிஷியான ஸ்ரீமஹாலக்ஷ்மி எம்பெருமான் அவதரிக்கும்போது உடன் அவதரித்து அவனை அனுபவிக்கிறாள்.
  • அடியார்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எம்பெருமான் உடனே பெருமுயற்சி செய்து அவ்வாபத்தைப் போக்குகிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment