ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டியைக் கவர்ந்து வந்தபோது தோற்று ஓடிய ஒரு ராஜா சால்வன். அவன் எப்படியாவது கண்ணனையும் யாதவர்களையும் அழிப்பதாகச் சபதம் பூண்டிருந்தான். ஓராண்டு ருத்ரனை நோக்கித் தவம் செய்த பிறகு ருத்ரன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, எங்கும் பறந்து சொல்லக்கூடிய பறக்கும் நகரம் ஒன்று வேண்டும் என்று அவன் கேட்டான். ருத்ரன் மயன் மூலமாக சௌப என்கிற பறக்கும் நகரத்தைச் செய்து சால்வனுக்குக் கொடுத்தான். அதில் ஏறிக் கொண்டு த்வாரகையை நோக்கிச் சென்று அந்நகரத்தைத் தாக்கத் தொடங்கினான்.
ப்ரத்யும்னன், ஸாத்யகி மற்றும் பலர் அப்போது நகரத்துக்கு வெளியே வந்து சால்வனுடன் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். ப்ரத்யும்னன் சால்வனைத் திக்குமுக்காடச் செய்து, அவனுடைய பறக்கும் நகரத்தையும் தாக்கினான். அந்த நகரம் இலக்கில்லாமல் சுற்றத் தொடங்கியது. ஆனால் சால்வனின் கூட்டத்தைச் சேர்ந்த த்யுமான் ப்ரத்யுமனின் மார்பில் அடித்து அவனை மயக்கம் அடையச் செய்தான். ப்ரத்யும்னனின் தேரோட்டி அவனை யுத்தகளத்தில் இருந்து வெளியே கொண்டு சென்றான். மயக்கம் தீர்ந்த ப்ரத்யும்னன் தான் யுத்தகளத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதைப் பார்த்துக் கோபமுற்றான். மீண்டும் யுத்த களத்துக்கு வந்து யுத்தத்தைச் செய்து த்யுமானைக் கொன்றான். இவ்வாறு இருபத்தேழு நாட்கள் அந்த யுத்தம் நடந்தது. த்வாரகைக்குத் திரும்பிய கண்ணன் உடனே தானும் யுத்தத்தில் கலந்து கொண்டான். கண்ணனைக் கண்ட சால்வன் கண்ணனைத் தாக்க வர, கண்ணன் தன் சக்கரத்தாழ்வாரைக் கொண்டு சால்வனின் தலையை அறுத்து அவனைக் கொன்றான். அப்போது தேவர்கள் எல்லாரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
அந்த ஸமயத்தில் அங்கே சால்வனின் நண்பனான தந்தவக்ரன் யுத்தகளத்தை வந்தடைந்தான். கண்ணனை நிந்தித்துத் தாக்க வந்தான். கண்ணனோ தன்னுடைய கௌமோதகீ என்னும் கதையைக் கொண்டு அவனைக் கொன்றான். அடுத்து அவனுடைய தம்பியான விதூரதன் வந்தான். அவனைத் தன் சக்கரத்தாழ்வாரைக் கொண்டு தலையை அறுத்துக் கொன்றான்.
இப்படி எம்பெருமான் அஸுரத் தன்மை உடைய பலரை அழித்ததால் தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் போன்றவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.
பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் “பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு” என்று தந்தவக்ரனைக் கொன்றதைக் காட்டுகிறார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- இந்த ஸம்ஸாரத்தில் விஷ்ணு லோகம் என்று சொல்லப்படும் க்ஷீராப்தியில் (திருப்பாற்கடலில்) காவலாளிகளான ஜய விஜயர்கள் ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்களாலே சபிக்கப் பட்டு, மூன்று பிறவிகள் பிறந்து எம்பெருமானை எதிர்த்தார்கள். அதில் கடைசிப் பிறவியே சிசுபாலனும் தந்தவக்ரனும்.
- எம்பெருமானுடைய அவதாரம் நல்லோர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் தர்மத்தை ஸ்தாபிக்கவுமே. அதில் பல தீயோர்களை கண்ணன் அழித்து பூமி பாரத்தைக் குறைத்தான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org